தோழர் ஆர்.தேவராஜ் மறைவுக்கு இரங்கல்
கோவை மாமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.தேவராஜ் மறைவுக்கு இரங்கல்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியரும், கோயமுத்தூர் மாநாராட்சி மாமன்ற முன்னாள் உறுப்பினருமான தோழர். ஆர்.தேவராஜ் (64) இன்று (17.11.2022) பிற்பகல் 3.15 மணிக்கு கோவையில் காலமானார் என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கோவை மாநகரம், பாப்பநாய்க்கன்பாளையம் பஞ்சாலை தொழிலாளர் குடும்பத்தில் ராமசாமி – சரஸ்வதி தம்பதியினரின் மூன்று குழந்தைகளில் ஒருவராக ஆர்.தேவராஜ், 1958 மே 15 ஆம் தேதி பிறந்தார். சிறுவயதில் தந்தை வழித் தொடர்பில் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்ட தோழர். ஆர். தேவராஜ் பள்ளிக்கல்வி பயிலும் காலத்திலேயே கம்யூனிஸ்ட் இயக்கப் பணிகளிலும் ஈடுபடத் தொடங்கியவர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர், இடைக்குழுச் செயலாளர், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், மாவட்ட துணைச் செயலாளர், மாநிலக் குழு உறுப்பினர் என்ற பல நிலைகளில் செயல்பட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டு கட்சிக்குப் பெருமை சேர்த்தவர். தொழிற்சங்க இயக்கத்திலும் அமைப்பு சாரத் தொழிலாளர்களையும், உடல் உழைப்புத் தொழிலாளர்களையும் சங்க அமைப்பில் அணி திரட்டுவதில் முனைப்புடன் செயல்பட்டவர். பாப்பநாய்க்கன்பாளையத்தில் கட்சியின் இடைக்குழு அலுவலகத்திற்கு நல்ல கட்டடம் கட்டியதில் முக்கியப் பங்களித்தவர்.
தோழர்.ஆர்.தேவராஜ் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி, சில மாதங்களாகச் சிகிச்சை பெற்று வந்தார். அந்தக் கொடிய நோய் அவரது உயிரைப் பறித்து விட்டது. அவரது இழப்பு கட்சிக்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். இவரது வாழ்விணையர் ரேணுகாதேவி ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு திருமணமான வித்யா என்கிற ஒரு மகள் இருக்கிறார்.
தோழர். ஆர்.தேவராஜ் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் கூறி, அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது வாழ்விணையர், மகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.