தொழிலாளர் – விவசாயிகள் நலன் பேணும் ஜனநாயகப் பாதையில் அணிவகுப்போம்! தைத் திருநாளில் உறுதி ஏற்று வாழ்த்துகிறோம்! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
“ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற முதுமொழி மரபில் உழவர் பெருமக்கள் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற தன்னம்பிக்கை ஊட்டும் தைத் திருநாள் தமிழர் வாழ்வோடு கலந்து நிற்கும் கலாச்சாரத் திருநாளாகும்!
நாடோடிகளாக அலைந்து, திரிந்து, வேட்டையாடி வாழ்ந்த மனித சமூகம், உழவுத் தொழில் செய்து, வாழ்விடங்கள் அமைத்து, நிலையான வாழ்வைத் தொடங்கிய, ஆரம்ப நிலை வேளாண் சமூகம் இயற்கையை வணங்குவதில் உருவான பண்பாட்டு திருவிழா!
மனித உழைப்போடு, கால் நடைகளின் உழைப்பையும் இணைத்து, விதைக்கும் பரப்பளவை விரிவு படுத்துவதில், உற்பத்தியை பெருக்குவதில் வெற்றி கண்ட சமூகம் நிலைத்த வாழ்வுக்கு உயிர் கொடுக்கும் உழைப்புக்கு பொங்கலிட்டு நன்றி கூறி மகிழ்ந்திரும் இன்பத் திருநாள்!
கால வளர்ச்சியில் விஞ்ஞானம் வியக்கத்தக்க வளர்ச்சி பெற்றிருக்கும் இந்தக் காலத்திலும் வழிவழியான கலாச்சார திருவிழாவாக தைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.“பழையன கழிதல், புதியன புகுதல் வழுவல; கால வகையினானே” என்கிறது நன்நூல் – இதன் படி மார்கழி கடைசி நாளில் பயனற்ற கருவிகளையும், பொருள்களையும் மாற்றி விட்டு, புதுப் பானை, புது அரிசி, செங்கரும்பு, மஞ்சள் என உழைப்பில் விளைந்த புதுப் பொருட்களை கொண்டு பொங்கல் படைத்து மகிழ்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு நிலத்தின் உரிமை காக்கும் போராட்டத்தில் உழவர் பெருமக்கள் மாபெரும் வெற்றி கண்டுள்ளனர். கார்ப்பரேட் சக்திகளுக்கு ஆதரவான மூன்று வேளாண் வணிக சட்டங்களையும் பாஜக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சரின் மகன் போராடிய விவசாயிகள் மீது கார்களை ஏற்றிப் படுகொலை செய்த கொடூரம் ஏற்படுத்திய அதிர்ச்சி அலை அடங்கவில்லை. அரசியல் அமைப்பின் அடிப்படையான மதச்சார்பற்ற பண்பும், ஜனநாயக வாழ்வு நெறிமுறைகளும் சிதைக்கப்பட்டு, தனி நபர் மையப்பட்ட சர்வாதிகாரம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை இயல்பான அளவைக் காட்டிலும் பல மடங்கு பெரு மழையாக பெய்ததால், விளைந்த நெற்பயிர்களையும், நடவு செய்த தாளடி நெற்பயிர்களையும் இழந்து நிற்கும் விவசாயிகள் துயரக் கண்ணீர் வடிக்கிறார்கள். அரசு கட்டிக் கொடுத்த வீடுகளையும், வேலை வாய்ப்புகளையும் இழந்து நிற்கும் விவசாயத் தொழிலாளர்கள் ரொக்கப் பண உதவியை எதிர்பார்க்கின்றனர். மேட்டு நில சாகுபடியும் வட கிழக்கு தொடர் கனமழையால் பெருமளவு அழிந்து போயுள்ளது. அரசியல் தளத்தில் மாநில உரிமைகளையும், மக்கள் நலனையும் பலி கொடுத்து, ஒன்றிய அரசிற்கு விசுவாச சேவகம் புரிந்த, சுயநல ஆதாயம் தேடிய ஆட்சியினை ஜனநாயக முற்போக்குக் கூட்டணியால் அகற்றப்பட்டு, திமு கழகம் ஆட்சி அமைத்துள்ளது.
கோவிட் 19 நோய்த்தொற்றின் மூன்றாம் அலைப் பரவலும், ஒமிக்கரான் நோய்த்தொற்றும் அச்சுறுத்தும் காலத்தில், முன் களப்பணி ஏற்று முதலமைச்சர் ஆற்றும் பணி நம்பிக்கையூட்டுகிறது.
சமதர்ம – சுயமரியாதை இயக்கங்கள் கட்டமைத்த சமூக நீதிப் பாதையினை அழித்தொழிக்கும் “நீட்” தேர்வை, தேசியக் கல்விக் கொள்கையினை முறியடிக்க, வகுப்பு வாத சக்திகளை அரசியல் அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற உறுதி ஏற்போம்!
தொழிலாளர் – விவசாயிகள் நலன் பேணும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் ஜனநாயகப் பாதையில் அணிவகுப்போம் எனக் கூறி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு உறுதி ஏற்று, தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் அனைவருக்கும் தைத் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.