தொழிலாளர் சட்ட தொகுப்புகள் குறித்த பிரதமர் மோடியின் கருத்துகள்: ஏஐடியுசி பொதுச்செயலாளர் அமர்ஜீத் கவுர் கடும் கண்டனம்
இந்திய பிரதமர் 25.08.2022ம் தேதியன்று, மாநில தொழிலாளர் அமைச்சர்கள் மற்றும் தொழிலாளர் துறை செயலாளர்கள் கூட்டத்தில் காணொளி வாயிலாக ஆற்றிய உரையைக் கண்டித்து ஏஐடியுசி பொதுச்செயலாளர் தோழர் அமர்ஜீத் கவுர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:
பிரதம மந்திரி ஆகஸ்ட் 25, 2022 அன்று தொழிலாளர் அமைச்சர்கள் மற்றும் தொழிலாளர் துறை செயலாளர்கள் கூட்டத்தில் வழக்கம் போலவே தனது கற்பனை கதை ஒன்றை அவிழ்த்து விட்டுள்ளார்.
‘தேசிய தொழிலாளர் மாநாடு’ என்று அவர்களாக பெயரிட்டு கொண்ட அந்தக் கூட்டத்தில், பிரதமர் ஆடம்பரமான சொல்லாடலில், தொழிலாளர் சட்ட தொகுப்புகள், தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது என்று கூறியுள்ளார். இது ஒரு முழுப் பொய்யாகும்.
பொய்களையே உண்மையைப் போல் பேசுவதற்கு, ஏஐடியுசி கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
80%க்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு கேடு விளைவிக்கும் இந்தத் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக, 2022 மார்ச் 28-29 தேதிகளில் 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அவர்கள் முன்வைத்த கருத்துக்களை கொஞ்சமும் மதிக்காமல், பிரதமர் பேசுவதை நாங்கள் கண்டிக்கிறோம்.
பிரதமரின் இந்தச் செயல், போராடிய கோடிக்கணக்கான தொழிலாளர்களைக் கேலி செய்வதோடு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
தொழிலாளர்களை அடிமைகள் காலத்திலிருந்து விடுவிப்பதற்காகவே தனது அரசு முன் முயற்சிகளை எடுத்துள்ளதாக மோடி பேசுகிறார். ஆனால், இந்தச் சட்டத் தொகுப்புகள் புதிய அடிமைத்தனத்தை, தொழிலாளியைச் சுற்றிக் கட்டமைக்கின்றன. இந்தியாவின் மொத்த தொழிலாளர்களில் 90% பேர் அமைப்பு சாராத, ஒப்பந்தமுறை, அவுட்சோர்சிங் தொழிலாளர்களாவர். இவர்களிடமிருந்து ‘தொழிலாளர்’ என்ற தகுதியே முற்றிலுமாகப் பறிக்கப்படுகிறது.
தொழிலாளர்களும், மத்திய தொழிற்சங்கங்களும் இந்தச் சட்ட தொகுப்புகளைத் திரும்பப் பெறுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தும், அதைப் பார்க்கவோ, கேட்கவோ மோடி தயாராக இல்லை.
‘சட்டத்தைப் பற்றி தான் அறியவில்லை’ என்று கூறுவதை ஒரு காரணமாக ஏற்க இயலாது என பழங்கால சொல்வழக்கு ஒன்று உண்டு. “இந்தச் சட்டத் தொகுப்புகளால் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உறுதிப்படுத்தப்படும்; வேலை பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, மருத்துவ பாதுகாப்பு ஆகியவற்றை தொழிலாளர்களுக்கு கொடுத்து அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.” என்று பிரதமர் பேசியிருப்பது பெரும் விந்தையாகவும், வியப்பாகவும் இருக்கிறது.
உண்மையில், மிகப் பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு இதுவரை இருந்த, பாதுகாப்புகளைக் கூட மொத்தமாக இந்தச் சட்ட தொகுப்புகள் பறிக்கின்றன. பிரதமரின் அறியாமை இவ்வளவு நஞ்சு தோய்ந்து கிடக்கிறதே!
பெண்களின் ஆற்றலை சரியாகப் பயன்படுத்தி இந்தியா தனது இலக்குகளை எட்ட வேண்டும் என்று பிரதமர் பேசுகிறார். அவர் சொல்வதற்கு மாறாக, அவரது சட்டத் தொகுப்புகளின் உள்ளடக்கத்தைப் படித்தால், சட்ட வரம்புகளுக்கு வெளியே பெண் தொழிலாளர்களை அவை தூக்கி வீசுகின்றன.
இந்திய தொழிலாளர் எண்ணிக்கையில், ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டிருப்பதைப் பிரதமர் நேர்மையாக ஒத்துக் கொண்டிருக்க வேண்டும். அமைப்பு சார்ந்த துறையிலும், அமைப்பு சாராத துறையிலும், இந்த ஆண்-பெண் எண்ணிக்கை இடைவெளி, உலக சராசரியை விட மிக அதிகமாகவே இந்தியாவில் உள்ளது. உழைப்பில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த, அரசாங்கத்திடம் உருப்படியான எந்தக் கொள்கையும் இல்லை.
பிரதமரின் சொற்களஞ்சியத்தைச் சரி செய்யும் நேரம் இதுவல்ல. அவர் எப்போதும் தடம் புரண்டு தான் பேசுகிறார். தொடர்ந்து அவ்வாறே பேசுவார். வேளாண் சட்டங்களை இயற்றும் போதும் அவர் இதையேதான் செய்தார்.
வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் என்று தான் சொன்னார். ஆனால், விவசாயிகளின் வரலாற்றுப் போராட்டத்துக்குப் பின், அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற ஒப்புக் கொண்டார். உண்மையிலேயே, அச்சட்டங்கள் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் அளவுக்கு தூய்மையானவை என அரசு நம்பினால், ஏன் அந்த விவசாயிகளை ஏற்கச் செய்ய இயலவில்லை?
சட்டங்களுக்கும், நாடாளுமன்ற நடைமுறைகளுக்கும் விரோதமான வகையில் நிறைவேற்றப்பட்ட, நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும் திரும்ப பெற வேண்டும் என்று இந்திய தொழிலாளி வர்க்கம் வலியுறுத்துகிறது. பிரதமரோ, ‘தேசிய தொழிலாளர் மாநாட்டில்’ தனது உரையின் மூலம் மக்களை ஏமாற்றவும், தவறாக வழிநடத்தவும் முயன்றுள்ளார்.
அனைத்திந்திய தொழிற்சங்க பேராயம் (ஏஐடியுசி), இந்தச் செயலைக் கண்டிக்கிறது. தொழிலாளர் குறியீடுகளை, சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறுவதற்காக மற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், துறைசார் கூட்டமைப்புகள் மற்றும் சங்கங்களுடன் இணைந்து இன்னும் அதிக வீரியத்தோடும், வீச்சோடும் போராடுவதற்கு தன்னை மறுஅர்ப்பணம் செய்கிறது.
அமர்ஜீத் கவுர்,
பொதுச் செயலாளர், ஏஐடியுசி .