தேசத் துரோகச் சட்டம் மீதான உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வரவேற்பு
தேசத் துரோகச் சட்டத்தின் மீதான உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை வரவேற்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2022 மே 11 அன்று தேசத் துரோகச் சட்டத்தின் மீது இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வரவேற்கிறது. இந்தச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை கட்சி பெருமிதத்துடன் மீண்டும் வலியுறுத்துகிறது. இந்தச் சட்டம் தொடர்பான கட்சியின் சீரான நிலைப்பாடு நியாயமானது என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இப்போது நிரூபணமாகியுள்ளது.
பிரிட்டிஷ் காலத்து சட்டமான இந்தத் தேசத் துரோகச் சட்டத்தின் சரத்துகளை ஒன்றிய அரசாங்கம் மறுஆய்வு செய்யும் வரையில் இந்தத் தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் புதியதாக முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்திடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைக் கட்சி சுட்டிக் காட்டுகிறது.
இந்தத் தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி என் வி ரமணா, “இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 – A கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு, சிறையில் இருப்பவர்கள் பிணை உள்ளிட்ட நிவாரணம் கோரி நீதிமன்றங்களை நாடும் பொழுது, இந்தத் தேசத் துரோகச் சட்டத்தைப் பயன்படுத்தாமல் இருப்பது தான் சரியானது” என்று கூறியுள்ளார். பிரிவு 124 – A கீழ் முதல் தகவல் அறிக்கைகளை மாநில மற்றும் ஒன்றிய அரசாங்கங்கள் இனி பதிவு செய்திடாது என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 – A வை நீக்கக் கோரி 2011- ம் ஆண்டிலேயே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனிநபர் சட்ட முன்வடிவை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இவ்வாறு தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.