தேசத் தந்தை காந்தி பிறந்தநாள் – இடதுசாரி மற்றும் இதர கட்சிகள் நடத்தும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
தேசத்தந்தை காந்தி பிறந்தநாள் – இடதுசாரி மற்றும் இதர கட்சிகள் நடத்தும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.
அண்மைக் காலமாக தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து வன்முறைகளைத் தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளை தேர்வு செய்து தமிழகத்தில் 50 இடங்களில் அணிவகுப்பு நடத்தப்போவதாக ஆர்.எஸ்.எஸ். அறிவித்திருக்கிறது. தேச விடுதலை இயக்கத் தலைவர் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்படுவது மக்களின் கவனத்திற்கு வராமல் வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி திசை திருப்பும் அரசியல் உள்நோக்கத்துடனே இப்பேரணிகள் நடத்தப்படுகின்றன. இதற்கு இசைவாக நீதிமன்றத் தீர்ப்பையும் பெற்றுள்ளது. இதனை மிகச்சரியாக உணர்ந்த தமிழ்நாடு அரசு அவர்கள் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதியளிக்க மறுத்துள்ளது; மேல் முறையீடும் செய்துள்ளது. அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இந்நிலையில், சங்பரிவார்களின் இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டிக்கிற வகையிலும், தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கிற வகையிலும் அக்டோபர் 2 அன்று மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” நடத்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்), விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.
இது மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், சமூக அமைதி, மாநில வளர்ச்சி ஆகியவற்றை காப்பாற்றும் முயற்சியின் ஒரு நடவடிக்கையாகும். எனவே இந்த மனிதச் சங்கிலியில் தமிழக தொழிலாளி வர்க்கமும், உழைக்கும் மக்களும் பங்கேற்பது அவசியம். ஏஐடியுசி, சிஐடியு, எல்எல்எஃப் சங்கங்களின் முன்னணி ஊழியர்களும், உறுப்பினர்களும், ஆதர்வாளர்களும் முழுமையாக பங்கேற்பார்கள்.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதி தொழிலாளிகளும் பங்கேற்று மனிதச் சங்கிலி இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேம்.
தேசப்பிதா பிறந்த நாளில் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம் காக்க போராடுவது, சபதம் ஏற்பது என்பது தேசப்பிதா வழியிலான பயணமாகும். எனவே, மக்கள் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவர்களோடு, மக்கள் ஒற்றுமை காக்கும் இயக்கத்தையும் சம நிலையில் வைத்துப் பார்க்காமல் மனித சங்கிலி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
டி.எம்.மூர்த்தி AITUC ஜி.சுகுமாறன் CITU க.பேரறிவாளன் LLF