தேசத் தந்தைக்கு வீரவணக்கம்! – ஹிரேன் முகர்ஜி
(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய நாடாளுமன்ற குழுவின் முன்னாள் தலைவர் ஹிரேன் முகர்ஜி, 1969ல் மகாத்மா காந்தியடிகளின் நூற்றாண்டு விழாவையொட்டி நியூ ஏஜ் ஏட்டிற்கு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.)
“புரட்சியை விரும்பாத புனிதப் புறா, கடுமை சிறிதும் குறையாத பேரழிவுகளின் தளபதி, முதலாளிகளின் நலன் விரும்பி”, 1940-ல் இந்தியாவைப் பற்றி ஒரு சிறப்பு ஆய்வு மேற்கொண்ட தலைசிறந்த மார்க்சியவாதியான ஆர்.பி.தத் அவர்கள் காந்தியாரைப் பற்றி இவ்வாறாகத்தான் கோபம் கொப்பளிக்கும் கருத்துகளைப் பதிவு செய்தார்.
அத்தகைய கோபத்திற்கு அடிப்படையான காரணம் இருந்தது. 1922-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சவுரி சவுராவில் (உத்தர பிரதேசம்) அடக்குமுறைக்கு எதிராக ஆவேசம் கொண்டெழுந்த ஒரு கூட்டம் காவல் நிலையத்தையும் அதன் உள்ளே இருந்த சில காவலர்களையும் தீக்கிரையாக்கினர். அதே காலகட்டத்தில், தேசத்தின் கிராமப்புறங்களிலும் கூட, வரி கொடாமை என்னும் வடிவத்தில் ஒரு மாபெரும் போராட்ட நடவடிக்கை தொடங்கப்பட இருந்த நிலையில், காந்தியார் ஒத்துழையாமை இயக்கத்தை முடக்கி, ஒட்டுமொத்த தேசத்தையும் திடுக்கிடச் செய்ததை வரலாற்றில் யாரும் மறந்துவிட முடியாது. எழுச்சிமிகுந்த போராட்டக் களத்தில், இந்த மாபெரும் தலைவரின் விநோதமான நடவடிக்கை ஒரு மோசமான பின்னடைவை உண்டாக்கியது; 1919-1920ல் ஏற்பட்ட விடுதலையுணர்வும், எழுச்சியும் கரைந்து போனது. அதன் தவிர்க்கமுடியாத விளைவாக, நமது மக்களின் நம்பிக்கையைத் தகர்த்தெறியும் வகையில், விரக்தியை உண்டாக்கும் வகையில், வகுப்புவாத மோதல்கள் வெடித்தன என்பதை வரலாறு எவ்வாறு மறந்திட முடியும்?
இர்வின் உடனான ஒப்பந்தம்
1930-ம் ஆண்டில் காந்தியார் தொடங்கிய மாபெரும் இயக்கம் பேரெழுச்சியை உருவாக்கிக் கொண்டிருந்தபோது, அவரே அந்த இயக்கத்தைத் திடீரென்று கைவிட்டதையும் வரலாறு எவ்வாறு மறந்திட முடியும்? 1931-ம் ஆண்டு இலண்டனில் கூடிய வட்ட மேஜை மாநாட்டில் அவர் வெறுமனே கலந்து கொள்வதற்கும், அங்கிருந்து திரும்பியபின், மீண்டும் ஒருமுறை எழுச்சிமிக்க இந்தியாவை அவர் உருப்பெறச் செய்வதற்கும், தேச விடுதலைப் போராட்டத்தின் மற்றுமொரு காலகட்டமான 1932-1934-ன் போது சிந்தனைச் சிதைவுகளுக்கும் பலவீனங்களுக்கும் ஆட்பட்ட ஓர் அக்கறையற்ற தலைமை உருவாவதற்கும் தான் வைஸ்ராய் இர்வினுடனான ஒப்பந்தம் வழிவகுத்தது.
1939-1940களில் சுபாஷ் சந்திர போஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் சோசலிஸ்டுகள் ஆகியோர் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தபோது, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டதிற்கு மாபெரும் வரவேற்பிருந்தது. வன்முறையற்ற முறையில், வார்த்தையளவில் யுத்த எதிர்ப்பை பதிவு செய்யும் தனிநபர்களைப் போலீசார் கைது செய்வதைத் தனிநபர் சத்தியாகிரகம் (1940) என்று கூறினார் காந்தியார். இவ்வாறாக, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டக் களத்தின் பாதையில் பெரிய இடர்பாட்டை அவர் உருவாக்கினர்.
1942-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் “செய் அல்லது செத்துமடி” என்ற அவரது முழக்கத்தின் மூலமாகவும், இந்தியாவில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற அவரது கோரிக்கையின் மூலமாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டக் களத்தின் நிலைமையை அவர் ஓரளவு சீர்படுத்தினார். ஆனால், அதற்குள் பெரும் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது – மக்கள் போராடத் தயாராக இருந்தபோதும், அதற்கான அறைகூவல் விடுக்கப்படாததால், மக்களின் மனஉறுதி தளர்ந்து போனது.
சமரசத்தின் நேர்த்தியில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட காந்தியார், போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லையை மீறி உச்சகட்டத்தை அடைந்துவிட அனுமதிக்க மாட்டார் என்றும், அவர்தம் போராட்ட இயக்கங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை என்னும் நிறைவுக் கட்டத்தை அடைந்துவிட அவர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்றும் முதலாளிகள் அவர் மீது நம்பிக்கை கொண்டிருந்ததை வரலாறு பதிவு செய்யத் தவறாது.
எனினும், முதலாளிகளின் ஆணைக்கிணங்கவும், அவர்களின் நலன்களுக்காகவும் அவர் செயல்பட்டார் என்று கூறுவது மடமை ஆகும். அவ்வாறு கருதப்பட்டதற்கு காரணம், போராட்ட இயக்கங்கள் மீது அவர் விதித்த கட்டுப்பாடுகள் பொதுவாக முதலாளிகளின் நலன்களுக்கு ஏற்றதாக அமைந்திருந்தது என்பது தான். வன்முறையை அடித்தளமாகக் கொண்டு எந்தவொரு நல்ல தீர்வையும் நிரந்தரமாகக் கட்டமைக்க முடியாது எனபதில் உறுதி பூண்டிருந்த அவர், போராட்ட வழிமுறைகளின் மீது அதிகம் கவனம் செலுத்தியதால் தான் அவ்வாறான கருத்து உண்டானது என்பதில் ஒருவருக்கும் ஐயம் இராது. ஆனால், மனிதகுல வரலாற்றின் முன்னேற்றப் போக்கில் நிகழும் மெய்யான செயல்முறையைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை ஆகும்.
காந்தியாரின் பிறந்தநாள் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில், அவர்தம் பெயரோடு பிணைந்து இருக்கும் பெருமையை விடுத்து பின்னடைவை எவர் நினைவு கூறுவர்? நமது புராணக் கதைகளில் உள்ளபடி, பல யுகங்களாக மழையின்றி வறண்டு வாடிப் போன பூமியில்… தனது சங்கொலியின் மூலம் புதுவெள்ளம் பொங்கிப் பெருக்கெடுத்து பேரானந்தம் கொண்டு பாய்ந்தோடச் செய்த பாகிரதன் போல், மந்தகதியில், சிந்திக்கும் திறனற்று, உறக்கத்தில் ஆழ்ந்திருந்த மக்களைத் தட்டியெழுப்பிய இவர் போன்ற ஒற்றை மனிதரை இந்திய வரலாற்றில் இதுவரை நாம் கண்டதில்லை என்பதை எவரால் மறந்துவிட முடியும்?
முதல் உலகப் போருக்குப் பின், நமது மக்களின் அதிருப்தி மேலும் அதிகரித்திருந்தது. அப்போது, இந்தியாவில் நடந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஆட்சியைப் “பேயரசு” என்று சாதுவாகவும், சகிப்புத்தன்மை கொண்டவராகவும் காணப்பட்ட காந்தியார் நெஞ்சுரத்தோடு கூறினார். அத்தகைய ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டியது நல்லவர்களின் கடமை என்று வீரமுழக்கம் செய்த அந்த மனிதரை இந்தியத் திருநாடு எவ்வாறு மறந்துவிட முடியும்?
ஒரு மந்திரவாதியைப் போல் அவர் இந்தியாவை உலுக்கியெடுத்து, தமது இயக்கத்தின்பால் வெகுமக்களை ஈர்த்து, கனவிலும் நாம் கண்டுணர முடியாத அளவிற்கு உத்வேகம் நிறைந்த இந்து-முஸ்லீம் சகோதரத்துவத்தை சிற்சில ஆண்டுகளுக்காவது சாத்தியப்படுத்திய அந்த மகத்தான நாட்களை இந்தியத் திருநாடு எவ்வாறு மறந்துவிட முடியும்? இந்த நாடு இதுநாள் வரை எத்தனையோ சிறந்த தலைவர்களைக் கண்டிருக்கிறது. ஆனால் காந்தியாரைப் போல், தம் மக்கள் மீது அக்கறை கொண்டு அவர்களோடு தன்னை முழுவதுமாகப் பிணைத்துக் கொண்ட ஒரு தலைவரைக் கண்டதுண்டா?
ஒருவேளை, இது பற்றியெல்லாம் மாமேதை லெனினுடைய கவனம் ஈர்க்கப்பட்டிருந்தால், 1922-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது காந்தியார் பேசிய மறக்கவொண்ணா வார்த்தைகளை உலக சோஷலிஸ்டு இயக்கத்தின் முன் நிலைநிறுத்தி சிறப்பித்துப் பேசியிருப்பார்.
காந்தியார் பேசியதாவது:
“நகரவாசிகள் அனுபவிக்கும் வசதி வாய்ப்புகள், அந்நிய சுரண்டல்காரர்களுக்கு அவர்கள் செய்த ஊழியத்திற்கு கிடைத்த தரகுத் தொகை என்பதையும், அந்தத் தரகுத் தொகை மற்றும் இதர இலாபங்கள் உழைக்கும் மக்களிடமிருந்து உறிஞ்சப்படுகிறது என்பதையும் அவர்கள் சிறிதும் அறிந்தாரில்லை. பிரிட்டிஷ் இந்தியாவில் சட்டத்தால் நிறுவப்பெற்ற அரசாங்கம் உழைக்கும் மக்களைச் சுரண்டுவதற்காகவே நடத்தப்படுகிறது என்பதையும் நகரவாசிகள் சிறிதும் அறிந்தாரில்லை. எண்ணற்ற கிராமங்களில் நாம் கண்ணால் பார்க்கும் எலும்புக்கூடுகள் இதற்கு ஆதாரங்களாக இருப்பதை பொய்யான கணக்குகளும், எமாற்றுவாதங்களும் மறுதலிக்க முடியாது. வரலாற்றில் ஒப்புவமை கூறமுடியாத அளவிற்கு கொடிய, மனிதநேயத்திற்கு எதிரான இந்தக் குற்றச்செயலுக்காக, கடவுள் என ஒருவர் இருந்தால், அவரிடம் இங்கிலாந்தும், நகரவாசிகளும் பதில் சொல்ல வேண்டி வரும் என்பதில் எனக்கு ஐயமில்லை.”
செல்வந்தர்கள் இல்லா இயக்கம்
தானோ, காங்கிரஸ் பேரியக்க நடவடிக்கைகளோ பிர்லா போன்ற செல்வந்தர்களிடம் இருந்து பெரும் நிதியுதவிகளால் உந்தப்படுவதில்லை என்று பத்திரிக்கையாளர் லூயிஸ் பிஷ்ஸரிடம் சொல்லும் அளவிற்கு இந்த மனிதர் நேர்மையாளராகத் திகழ்ந்தார். ஒருவேளை, அவை “அறிவிக்கபடாத கடனாக” இருக்கக் கூடும். 1928-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு தெளிவான தருணத்தில் ஜவஹர்லால் நேருவிற்கு பின்வருமாறு எழுதியுள்ளார்: “பெரும் செல்வந்தர்களும், மெத்தப் படித்த வர்க்கத்தாரும் இல்லாத ஓர் இயக்கத்தை நிச்சயம் நாம் ஒரு நாள் உருவாக்க வேண்டும் என்ற உங்களின் கருத்தையே நானும் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கான காலம் இன்னும் கனியவில்லை.”
அவரைப் பொறுத்தவரையில், 1945-1948-ம் ஆண்டுகளில் கூட அத்தகைய காலம் உருவாகவில்லை என்பதுதான் வேதனைக்குரியது. அஹிம்சை பற்றிய அவரது கருத்துக்கு சிறிதளவு வேண்டுமானால் பின்னடைவு ஏற்படலாம் என்றிருந்த நிலையில், அவர் ஒரு மாபெரும் போராட்டதிற்கு அறைகூவல் விடுத்திருக்க முடியும்; அவரே அந்தப் போராட்டத்திற்கு தலைமையேற்றிருக்கவும் முடியும். நமது அடித்தட்டு வெகுமக்களை அரசியல் தளத்திற்கு கொண்டு வந்த இந்தத் தலைசிறந்த மனிதர், அவர்கள் உறுதியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அளவிற்கு முதிர்ச்சி உடையவர்கள் என்பதை எண்ணிப் பார்க்காதது முரணாகவே இருக்கிறது. 1942-ம் ஆண்டில், அரிதினும் அரிதாக, அவரது எண்ணவோட்டத்தில்… நமது நாட்டின் கிராமப்புறங்களில் நிலப்பிரபுக்கள் “தப்பித்து ஓடி புரட்சிக்கு ஒத்துழைப்பார்கள்” என்பது போல தோன்றியிருக்கக்கூடும்.
வெகுமக்களின் வாழ்கையில் அடிப்படை மாற்றம் உண்டாக வேண்டும் என்று ஏங்கித் தவித்த இந்த மனிதர், அந்த மாற்றத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துணிந்தாரில்லை. இந்தத் தடுமாற்றம் அவரது இயல்பான குணாம்சம் என்று நாம் வருந்துகிறோம். ஆனால், இந்தியர்கள் என்ற உணர்வுப் போதத்துடன், அவர் நமக்காக ஆற்றிய அளப்பரிய சேவைகளைக் கருத்தில் கொள்ளும்போது, அவர் மீது ஒருபோதும் அவதூறு சொல்லலாகாது.
தேசத்தின் தந்தை
காந்தியார் அஹிம்சை என்னும் செய்தியை மட்டுமின்றி அதைக்காட்டிலும் பிரகாசமாக மிளிரக்கூடிய அபயம் (அச்சமின்மை) என்னும் அரிய கருத்தையும் நமக்கு வழங்கியுள்ளார். நம் மக்களைத் தட்டியெழுப்பி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீறுகொண்டெழுந்து போராடச் செய்தவர் அவர். நமது அரசியல் போராட்டங்கள் வெறும் வார்தை ஜாலங்களால் நிறைந்திருந்த போது, அதற்கு வீரமார்ந்த புரட்சிகர உள்ளடக்கம் வழங்கியவர் அவர்.
தனது வாழ்க்கையை ஒரு “சத்திய சோதனை” என்று அவர் கருதினார். பிளவுபட்ட இந்தியாவாக நம் நாடு பெற்ற சுதந்திரத்தைக் கண்டு பெருமகிழ்ச்சி கொள்ள முடியாத அவர், தனது பேரார்வத்தைத் துறந்ததோடு தனக்கே உரித்தான வாய்மை பண்போடு அவர்தம் வாழ்க்கையை ஒரு தோல்வி என்று உரைத்திடத் தயங்கவில்லை. அவர்தம் உயிர்த்தியாகம் சோகம் சூழ்ந்தது என்ற போதும், ஒளிரும் பெருங்குணமே இந்த மனிதரின் குறியீடாகத் திகழ்ந்தது.
காந்தியாரின் கருத்துகள் மற்றும் அவரது செயல்பாட்டு முறைகள் மீது இந்திய கம்யுனிஸ்டுகளுக்கு ஏராளமான விமர்சனங்கள் இருந்தன; இப்போதும் இருக்கின்றன. ஆனால், “டால்ஸ்டாயின் இந்திய சீடராம்” – காந்தியாரைப் பற்றிய மாமேதை லெனினுடைய கருத்துருவின் அடிப்படையான உண்மையை அவர்கள் அறிந்தவர்கள் ஆவர். அவரோடு தீவிரமாக முரண்பாடு கொண்டு இயங்கிய போதும் கூட, அவரை ‘தேசத் தந்தை’ என்று போற்றிட நாம் ஒருபோதும் தயங்கியதில்லை. அவர்தம் பிறந்தநாள் நூற்றாண்டின் போதும் அவ்வாறே போற்றி வீரவணக்கம் செய்கிறோம்.
நன்றி – நியூ ஏஜ்
தமிழில் – அருண் அசோகன்