தூய்மை பணி தொழிலாளர்களைப் பலியிடும் தனியார்மயம்: உள்ளாட்சியில் நல்லாட்சி எப்போது?
ம. இராதாகிருஷ்ணன்
மக்கள் சுகாதாரத்துடன் வாழ தூய்மை பணியாளர்கள் தங்கள் மதிப்பை இழந்து மிக மோசமான சூழலில், தங்கள் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் இழந்து பணிபுரிந்து வருகின்றனர். மேலோட்டமாகப் பார்த்தால் தூய்மை பணி என்பது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில் அவர்கள் உயிரைப் பறிக்கும் விஷக்கழிவுகளோடு தான் நாள்தோறும் பணிபுரிகின்றனர். கழிவு நீர் அகற்றுவது, மக்கும், மக்காத குப்பைகளை அகற்றுவது, இறந்த விலங்குகளை அகற்றுவது, இறந்த பறவைகள் ,கால்நடைகள் எலி, பூனை போன்ற சிறு பிராணிகள் முதற்கொண்டு சாலையில் அடிபட்டு சாகும் நாய்கள் வரை அனைத்தையும் அகற்றுவது; மருத்துவமனை மற்றும் பொது இடங்களில் இறந்தவர்களின் சடலங்களை அகற்றுவது; தெருக்களில் பொதுவாக காணப்படும் மனித கழிவுகள், கால்நடைகள் செல்லப்பிராணிகளின் கழிவுகள் ,சானிட்டரி நாப்கின்கள், அழுகிய உணவுப் பொருட்கள் அகற்றுவது; கழிவு நீர் குழாய்கள் பாதாள சாக்கடை மற்றும் வீடுகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சுத்தம் செய்தல் போன்ற ஆபத்தான வேலைகளைச் செய்கின்றனர். இப்படியான பணி சூழலில் பாதுகாப்பு உபகரணங்களோ பிற உரிமைகளோ கூட தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படுவது இல்லை.
இப்படியான வேலைகளை எல்லா நாட்டவரும் செய்கின்றனர். ஆனால், மற்ற நாடுகளில் உள்ளதைப் போல் தூய்மை பணியாளர்களின் கண்ணியத்தின் மீது கவனம் செலுத்துவது, எந்திரமயமாக்குவது என்ற நோக்கிலான செயல்பாட்டில் இந்தியா, உலகில் மிகவும் பின் தங்கிய நாடுகளுக்கும் பின்தங்கி உள்ளது. அதனால் தான் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் வேலையை கைகளால் செய்து முடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆட்படுகின்றனர். பல்வேறு நோய்களோடு வாழ்கின்றனர்.
இத்தனை கடுமையாகத் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வரும்போதும் கூட வீதிகளில், சாலைகளில் குப்பைகளும் ,கழிவுகளும் கிடக்கின்றன. கழிவுநீர் குழாய்கள் அடைத்துக் கொண்டு நாற்றமடிக்கிறது. சாலைகளில் சகிக்கமுடியாத நாற்றத்தோடு கழிவு குப்பைகளை அள்ளிச் செல்லும் வாகனங்களைக் காணமுடிகிறது. அவ்வாறு வாகனங்களில் அள்ளிச் சென்று குப்பைகளை மலை என குவித்து வைக்கின்றனர். அருகாமையில் வசிக்கும் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர் என்னும் அவல நிலையும் நீடிக்கிறது.
உலகம் எங்கும் உற்பத்தியாகும் நவீன பொருட்களை வாங்க தூண்டும் நுகர்வு கலாச்சாரம், இத்தகைய சீர்கேடுகளுக்கு காரணமாக உள்ளது. புதிய புதிய கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இவற்றுக்குப் பின்னால் கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிக நலன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தம் லாபவெறிக்காக எந்த நிறுவனம் அதிக பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் குவிக்கிறதோ, அந்த நிறுவனம் அதிக அளவு கழிவுகளையும் சேர்த்துக் குவிக்கிறது, விற்பனை செய்கிறது.
அதே சமயத்தில், உலகில் பல நாடுகள் வசதியானவரின் வாழ்விடங்களில் தூய்மை திட்டங்களை செயல்படுத்தி, உழைக்கும் மக்கள் வாழ்விடங்களைக் குப்பை மேடாகக் கருதி வருகின்றன. இதன்படியே, தூய்மை திட்டங்களை வகுக்கின்றன. இந்தியாவும் இதில் விதிவிலக்கு இல்லை. இதன் காரணமாக, நவீன தாராளமய பொருளாதார வளர்ச்சியின் பலன்களை அனுபவிக்கும் கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் மற்றும் வசதிபடைத்தவர்களும் சொகுசாக வாழ, குப்பை கழிவுகளிலும் சுகாதார சீர்கேடுகளிலும் சிக்கிச் சீரழிபவர்களாக பெரும்பாலும் உழைக்கும் மக்களே உள்ளனர்.
கடல்களின் பாதுகாப்புத் தொடர்பாக செயல்பட்டு வரும் ஓஷியான (OCEANA) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமேசான் நிறுவனத்தின் காற்றடைத்த பிளாஸ்டிக் பைகள் மட்டுமே உலகை 600 முறை சுற்றும் அளவுக்கு சூழலில் கலந்து உள்ளன என்று தெரிவிக்கிறது. மேலும் 2020 ஆம் ஆண்டு மட்டும் 1. 066 கோடி கிலோ கிராம் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இது சராசரியாக ஒவ்வொரு நிமிடமும் ஒரு டெலிவரி வேன் முழுவதற்குமான குப்பையை கடலில் கொட்டுவதற்கு சமம். கவலை தரத்தக்க வகையில் அமேசானின் பிளாஸ்டிக் பைகள் மறுசுழற்சி செய்யத்தக்கவை அல்ல. 610 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்யும் அமேசான், வர்த்தக உலகின் ஜாம்பவானாக வால்மார்ட் நிறுவனத்தையே முறியடித்து முன்னேறிக் கொண்டுள்ளது. அதனோடு அதன் பிளாஸ்டிக் குப்பைகளும் ஒரே வருடத்தில் 29 சதம் அதிகரித்துள்ளன. ஜெர்மனியில் அந்நாட்டு அரசின் உறுதியான உத்தரவால் மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தி பல நூறு மில்லியன் பார்சல் அனுப்பும் அமேசான் ஏனைய நாடுகளில் இதனைக் கடைபிடிப்பது இல்லை” என்று ஓஷியானா தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஏர் குவாலிட்டி லைஃப் இன் டெக் (AKULI)அமைப்பு தனது ஆய்வு அறிக்கையில், இந்தியாவின் கங்கை சமவெளி பகுதி தான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதி என்று தெரிவிக்கிறது .
2022 ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் தரவரிசை பட்டியல் கொலம்பியா மற்றும் ஏல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் உலகில் உள்ள 180 நாடுகளில் திடக்கழிவு மறுசுழற்சி ,கடலில் உள்ள பிளாஸ்டிக் மாசு ஆகியவற்றை உள்ளடக்கிய கழிவு மேலாண்மையில் இந்தியா 151 வது இடத்தில் உள்ளது. அதில் தமிழகம் பின்தங்கிய பல வட மாநிலங்களை விட பின்தங்கி உள்ளது. இந்தியாவைவிட சூடான், துருக்கி ,ஹைத்தி, லைபீரியா, பபுவா நியூகினி, பாகிஸ்தான், பங்களாதேஷ் வியட்நாம், மியான்மர் ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. மொத்தத்தில் சுற்றுச்சூழல் தரவரிசையில் 180 வது இடத்தில் கடைசியாக இந்தியா உள்ளது.
உலகை அச்சுறுத்திய கொரோனா கிருமித் தொற்று வெளிப்பட்ட நேரத்தில், உலக சுகாதார நிறுவனம் (WHO) உலகில் உள்ள நகரங்களில் 10 சதம் நகரங்கள் மனிதர்கள் வாழத் தகுதியற்றவனாக சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது என்று எச்சரித்துள்ளது. நகரங்கள் மற்றும் கிராமங்களில் பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை தந்து அதிக நிதி ஒதுக்கி செலவிட அரசுகள் முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. இன்றைய நிலையில் சவாலான இந்த கழிவுகளை அகற்றி உரிய முறையில் உடனுக்குடன் மறுசுழற்சி செய்யப்படவில்லை என்றால் மக்கள் அனைவருக்குமே சுகாதார கேட்டை உருவாக்கும். பல்வேறு நோய்களைத் தரும். தொற்று நோய்கள் தடுக்க முடியாதவை என்று WHO தெரிவித்தது.
2016 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படி பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை என இரண்டு பிரிவுகள் உள்ளன. அதில் பெரும் நிறுவனங்கள் தங்களின் பொருட்களை பிளாஸ்டிக் பேப்பர்களில் அடைத்து விற்பனை செய்தால் ,அந்த பிளாஸ்டிக் கழிவுகளை மீண்டும் சேகரித்து அவற்றை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை ஆறு மாதங்களுக்குள் செய்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கிறது.
இந்தியாவில் திடக்கழிவு மேலாண்மையில் முதல் படிநிலை கழிவுகளைத் தரம் பிரித்துப் பெறுவதும், அவற்றின் தன்மைக்கேற்ப கையாள்வதும் தான். இந்த முதல் படியைக் கூட தமிழகம் முழுமையாக நிறைவேற்றவில்லை. பார்க்கும் இடங்களில் எல்லாம் மூன்று வண்ணங்களில் குப்பை தொட்டிகளை வைத்து விட்டால் மட்டும் போதும் என்ற மனநிலையே நீடிக்கிறது. அவை தனித்தனியே பிரித்தெடுக்கப்பட்டு அதனதன் தன்மைக்கேற்ப கையாளப்பட வேண்டும். குப்பைகளைத் தரம் பிரித்துச் சேகரிக்காமல் மொத்தமாக எடுத்துச் சென்று பின்னர் அவற்றைத் தரம் பிரிக்கப் பெரும் மனித உழைப்பு தேவைப்படுகிறது.
இந்த நிலையில் கழிவு மேலாண்மைப் பணிகளைத் தனியாரிடமும் ஒப்பந்ததாரர்களிடமும் தருவது என்பதைக் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் அரங்கேற்றி வருகிறது. ஒன்றிய அரசும் தனியார் முகமைகள் மூலம் இதனை நிறைவேற்ற வேண்டும் என்று தான் தெரிவிக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது, இப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின், “இந்த ஒப்பந்த, தனியார் முறையானது ஏற்படுத்தும் சீரழிவுகளை நான் நன்கறிவேன்” என்று குறிப்பிட்டது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.
இந்தச் சவாலான குப்பைகளை, கழிவுகளை அகற்றும் பணியைத் தனியாரிடம், ஒப்பந்ததாரரிடம் தந்ததன் விளைவு, அது கொள்ளை லாபத்திற்கு பயன்பட்டிருக்கிறது என்பது அனுபவம். சமூக அக்கறையோடு மக்களின் பொது சுகாதாரத்தைப் பேணுவதற்கு அது பயன்படவில்லை. இந்த அனுபவத்தில் இருந்து தான் முதல்வர் அவ்வாறு தெரிவித்தார் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
கொள்ளை லாபமீட்டுவதை நோக்கமாக கொண்ட ஒப்பந்ததாரர்களிடமிருந்து மீட்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அமைப்புகள் நேரடியாக கழிவகற்றும் பணியை மேற்கொள்வது சமூக அக்கறையுடன் கூடிய சேவையாகும். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள “உள்ளாட்சியில் நல்லாட்சி” என்பதும் இதனால் சாத்தியமாகும். ஆனால் தற்போதும் தமிழ்நாடு அரசு தனியார்மயமாக்கல், காண்ட்ராக்ட் மயமாக்கல் என்பதை நோக்கியே பயணிக்கிறது. ஆபத்தை உணர்ந்து அதே ஆபத்தான வழியில் பயணிப்பது மக்களின் சுகாதாரத்திற்கு பாதுகாப்பற்ற தன்மையையும், தொழிலாளர்களின் வாழ்வை சீரழிப்பதையும், தனியார் கொள்ளை லாபத்தையும் ஒருங்கே பெற்றது ஆகும்.
எனவே, வியாபார நோக்கம் கொண்ட தனியார்மயமாக்கல், ஒப்பந்தமயமாக்கல் நடவடிக்கையை ஊக்குவிக்காமல், சேவை நோக்கம் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளே நேரடியாக இந்தப் பணிகளை மேற்கொள்ளச் செய்வதற்கு தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.