திருவண்ணாமலையில் பற்றி எரியும் சாதி தீ! – அரசு உடனடியாக தடுக்க வேண்டும்!
– வழக்கறிஞர் கீ.சு.குமார்
அறிவியல் வளர்ச்சியின் உச்சத்தில் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. வலைதள வளர்ச்சியால் உலகம் ஒற்றைக் குடையின் கீழ் உள்ளங்கைகளில் அடங்கிக் கிடக்கிறது. ஆனாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்ட சாதிய கட்டமைப்பும், தீண்டாமை கொடுமையும் இன்றைய கார்ப்பரேட் மற்றும் இந்துத்துவா தாக்கத்தால் புதிய உயிர்ப்போடு தலைவிரித்து ஆடுகிறது.
ஆம்! திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம், தென்முடியனூர் கிராமத்தில் தீண்டாமை கொடுமைக்கும், சமூகப் புறக்கணிப்புக்கும் உள்ளாகி 2500 குடும்பங்கள் வசிக்கும் ஒரு தலித் கிராமமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அக்கிராம இளைஞர்கள் கொடுத்த தகவலை அடுத்து தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் தென் முடியனூர் விரைந்தோம்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் தங்கராசு, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலாளர் ரஹமதுல்லா ஆகியோரை நேரில் தொடர்பு கொண்டு தகவல்களை திரட்டினோம். நம்மோடு தோழர்கள் ராஜசேகர், ராதாகிருஷ்ணன், ராஜீவ்காந்தி ஆகியோர் உடன் வந்தனர்.
களத்தில் நாங்கள் கண்ட காட்சிகள் எங்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
காலனி பகுதியில் ஆதிக்க சாதியினர் நடத்தி வந்த மளிகை கடை, எழுதுபொருள் கடை, டீ கடை, பால் கடை, காய்கறி கடை, முடி திருத்தகம் ஆகிய அனைத்தும் மூடப்பட்டு தலித் மக்களுக்கு அத்தியாவசியப் பண்டங்கும், சேவைகளும் தடை செய்யப்பட்டிருந்தது.
பால் கொள்முதல் மையம் மூடப்பட்டதால், தலித் மக்கள் தாங்கள் கறந்த பாலை வயல் வெளியில் ஊற்றினார்கள். ஓட்டல், சிற்றுண்டிகளில் உணவு வழங்கப்படவில்லை. தலித் மக்கள் பயிர் செய்து வந்த விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வாய்க்கால் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் வயலில் பயிர்கள் வாடிக்கொண்டிருந்தன.
கரும்பு வெட்டவும், இதர கூலி வேலை செய்யவும் இவர்கள் அழைக்கப்படவில்லை. காலனி மக்களின் பறை இசைக்குழுவை ஊர் பகுதியில் யாரும் அழைக்கக் கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது. வேலை கிடைக்காததால் ஆண்களும், பெண்களும் வீதியோரம் பதற்றத்தோடு அமர்ந்திருந்தனர். அந்த கிராமத்தை 250 போலீசார் சுற்றி வளைத்து கண்காணித்து வந்தனர். இவற்றையெல்லாம் நாம் களத்தில் கண்டபோது நாம் எந்த நூற்றாண்டில் வசிக்கிறோம்? என்ற கேள்வி நமக்கு எழுந்தது.
ஏன் இந்த நிலை?
தலைநகர் சென்னையிலிருந்து சுமார் 170 கி.மீ. தொலைவில்தான் உள்ளது திருவண்ணாமலை மாவட்டம். அனைவருக்கும் அருள் பாவிக்கும் அண்ணாமலையார் கோவிலும், கிரிவலப் பாதையும், ஆண்டுக்கொரு முறை நடைபெறும் தீபத் திருவிழாவும் உலகப் புகழ்பெற்றவை.
அங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது பழம்பெரும்கிராம் தென்முடியனூர். இந்தியாவில் இருண்ட ஆதிக்க வடிவமான ஊர் – சேரி முறை இன்றும் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது. ஊர்ப்பகுதியில் ஐந்தாயிரம் குடும்பங்களும், சேரிப்பகுதியில் 2500 குடும்பங்களும் வசிக்கின்றனர். ஊருக்கும் – சேரிக்கும் இடைப்பட்ட மையப்பகுதியில் உள்ள காலி நிலத்தில் 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அழகுமுத்து மாரியம்மன் கோவிலும், அதே காலத்தில் கட்டப்பட்ட உயர்நிலைப் பள்ளிக் கூடமும் அமைந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த உயர்நிலைப் பள்ளியை இடித்து விட்டு அந்த இடத்தில் வர்த்தக கட்டிடம் கட்டுவது, பள்ளிக் கூடத்தை ஊர்ப்பகுதியில் (உயர்சாதியினர் வசிக்கும் பகுதியில்) கட்டுவது என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஊருக்குள் பள்ளிக்கூடம் அமைந்தால் பட்டியலின ஆண், பெண் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, இயங்கி வரும் இடத்திலேயே தொடர்ந்து பள்ளி இயங்க வேண்டும் என தலித் மக்களால் போராட்டம் நடத்தப்பட்டு இறுதியில் பள்ளிக்கூடம் இடிப்பது கைவிடப்பட்டது.
நாங்கள் சென்றபோது சாதிகளை அறியாத, சின்னஞ்சிறு குழந்தைகள், பள்ளி மாணவர்கள் ஒற்றுமையோடு துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
பள்ளி இடப் பெயர்வை தடுப்பதற்காக டாக்டர் அம்பேத்கர் சமூக எழுச்சிப்படை என்ற அமைப்பை தொடங்கினர். பள்ளிக்கு அருகில் உள்ள அழகுமுத்து மாரியம்மன் கோவில் கட்டப்பட்ட நாள் முதல் ஆதிக்க சாதியினருக்கு மட்டுமே இங்கு வழிபாட்டு உரிமை. பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை இல்லை. இக்கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது கூடுதல் செய்தி.
இக்கோவிலுக்குள் சென்று வழிபட உரிமை கேட்டு கடந்த 30 ஆண்டுகளாக தலித் மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அம்பேத்கர் மக்கள் எழுச்சிப் படையினர் கடந்த ஜனவரி மாதம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அடுத்து இந்து அறநிலையத்துறை உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கோட்ட வருவாய் அலுவலர் மந்தாகினி ஆகியோர் முன்னிலையில் ஆயுதம் தாங்கிய காவல்துறை பாதுகாப்புடன் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி ஆலயத்திற்குள் சென்று தலித் மக்கள் வழிபாடு நடத்தி பொங்கல் வைத்து கொண்டாடினர். சாதி தீ விசிறி விடப்படுவதற்கு இதுவே காரணம்!
இவர்களின் ஆலய நுழைவால் அம்மன் தீட்டுப்பட்டு விடுவாள், ஊர் கட்டுக்கோப்பு உடையும், அமைதி சீர்குலையும் என ஆதிக்க சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கோவிலுக்கு அருகிலேயே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொலைக்காட்சிகளும், அச்சு, மின்னணு ஊடகங்களும் 80 ஆண்டுகளுக்கு பின்பு தலித் மக்கள் ஆலய நுழைவு என சாதனை செய்திகளை உலகம் முழுவதும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. ஆனால், ஆதிக்க சமூகத்திற்கு எங்கிருந்தோ வந்த அழுத்தத்தின் காரணமாக அறநிலையத்துறை அதிகாரிகள் அன்று இரவே கோவிலை பூட்டினார்கள்.
சமத்துவ பொங்கல் வைத்த பின்னர் தான் கோவில் திறக்கப்படும் எனக் கூறி இன்று வரை கோவில் திறக்கப்படவில்லை.
சமத்துவப் பொங்கல் எப்போது? அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரியுமா?
ஆதிக்க சாதியைச் சார்ந்த உயர்மட்ட அழுத்தமே கோவில் மூடப்பட்டதற்கான காரணம் என்று தலித் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோவில் பூட்டப்பட்டதை தொடர்ந்து இரவோடு இரவாக இளைஞர் படை அமைக்க காரணமாக இருந்த முருகன் என்பவரின் தலை துண்டிக்கப்படும் என நேரில் வந்து ஆதிக்க சாதியினர் மிரட்டி உள்ளனர். அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூவமாக பங்கெடுத்த இந்திரா என்பவரின் மளிகைக் கடை தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
80 ஆண்டுகளாக கட்டிக் காத்த தீண்டாமை சனாதன தர்மத்தை இன்றைய இளைஞர்கள், தான் கற்ற கல்வியால் ஆலய நுழைவை சாத்தியமாக்கினார்கள். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சாதியினர் 2500 குடும்பங்கள் வசிக்கும் ஒட்டுமொத்த கிராத்தையே, தீண்டாமை கொடுமைக்கும், சமூக புறப்பணிப்புக்கும் உள்ளாக்கி இருக்கிறார்கள்.
ஜனவரி 30 ஆலய நுழைவு அன்று நடுநிலை வகித்த மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை, இந்து அறநிலையத்துறை ஆகிய அனைத்தும் இன்றைய சமூகப் புறக்கணிப்புக்கும், தீண்டாமை கொடுமைக்கும் பதில் ஏதும் சொல்லாமல் மவுனம் சாதிக்கிறார்கள்.
உண்மை செய்திகளை உலகுக்கு தெரிவிக்க வேண்டிய காட்சி ஊடகங்களையும், பத்திரிகைகளையும், செய்தி வெளியிடாமல் அதிகார வர்க்கம் தடுக்கிறது.
நடந்து கொண்டிருப்பது சாதிய வன்கொடுமையின் உச்சம் என தெரிந்தும், குற்றவாளிகள் மீது வன்கொடுமை வழக்குகள் பதியப்படவில்லை. கொலை மிரட்டல் விடுத்தவரையோ, கடையை தீ வைத்து கொளுத்தியவரையோ இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை.
ஆண்டான் – அடிமை சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட வர்க்க சுரண்டல் முறை தற்போது எவ்வாறு கார்ப்பரேட் முறைக்கு மாற்றப்பட்டு சுரண்டல் முறை தொடர்கிறதோ, அதே போல் பொருளாதார சுரண்டலுக்காக கட்டமைக்கப்பட்ட இந்த சாதிய அமைப்பு இன்று புதிய பரிணாமம் அடைந்துள்ளது.
சமூக பொருளாதார அறிவியல் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பயன் தராத இந்த சாதிய அமைப்பு அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் மட்டுமே லாபம் தருகிறது என்பதை ஆதிக்க சமூகங்கள் உணர வேண்டும்.
தென்முடியனூர் கிராமத்தில் பற்றவைக்கப்பட்டுள்ள சாதி தீயை மேலும் பரவ விடாமல் உடனடியாக அணைக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பிரச்சினையைத் தீர்க்க முன்வர வேண்டும்.
தொடர்புக்கு: kskumaradvocatehc@gmail.com