திருமகன் ஈவெரா மறைவு: ஆற்ற முடியாத துயரம் – அஞ்சலி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான திருமகன் ஈவெரா (46) உடல் நலிவால் மரணமடைந்தார் என்ற துயரச் செய்தி நெஞ்சை பிளக்கும் வேதனையாகும்.
பெரியார் ஈ.வெ.ராவின் கொள்ளுப் பேரனும், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் பேரனுமான திருமகன் ஈ.வெ.ரா, அழகும் அறிவும் ஒரு சேரப் பெற்றவர். அதிர்ந்து பேசும் சுபாவத்தின் சுவடும் இல்லாத பண்பாளர். 2004 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோபிச்செட்டிபாளையம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவெகிச இளங்கோவனுக்கு ஆதரவாக இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அமைத்த பிரச்சார மேடையில் முதன்முதலாக பேசத் தொடங்கியவர் திருமகன் ஈவெரா.
2021 ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்று, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானவர். கடந்த இரண்டாண்டுகளில் தொகுதி வளர்ச்சியில் முனைப்போடு செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர்.
காங்கிரஸ் கட்சியிலும் பல நிலைகளில் பொறுப்புகளை ஏற்று சிறப்பாக செயல்பட்டு மூத்த தலைவர்களின் பாசத்தையும், இளைய தலைமுறையின் நம்பிக்கையையும் பெற்றவர்.
திருமகன் ஈவெரா இறந்து போனார் என்ற செய்தியை எளிதில் ஏற்க முடியவில்லை. அவரது மறைவால் எதிர்காலம் பண்புமிக்க தலைவர் ஒருவரை இழந்து நிற்கிறது. அவரை இழந்து நிற்கும் ஈவெகிச இளங்கோவன், அவரது இணையர் திருமதி வரலட்சுமி ஆகியோரை காலம்தான் தேற்ற வேண்டும்.
திருமகன் ஈவெரா மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து தவிக்கும் அவரது இணையர் திருமதி பூர்ணிமாவுக்கும், மகளுக்கும் காங்கிரஸ் நண்பர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.