திருக்குறள் வ.உ.சி. உரை நூல்கள்: முதல்வர் வெளியீடு
சென்னை,நவ.18- கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 150-வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முன்னெடுப்பாக வ.உ.சி. பன்னூல் திரட்டு மற்றும் வ.உ.சி. திருக்குறள் உரை ஆகிய நூல்களைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி.யின் 150-வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முன்னெடுப்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள வ.உ.சி. பன்னூல் திரட்டு முதல் தொகுதி மற்றும் வ.உ.சி. திருக்குறள் உரை -இரண்டாம் தொகுதி ஆகிய நூல்களை தலைமைச் செயலகத்தில் வியா ழனன்று(நவ.18) முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி முதல்வர் 14 வகையான அறிவிப்புகளைச் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதில், “வ.உ.சிதம்பரனார் எழுதி யுள்ள அனைத்துப் புத்தகங்களும் புதுப்பொலி வுடன் புதுப்பிக்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாகக் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்பதும் ஒன்றாகும். அதன் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பள்ளிக் கல்வித்துறைச் சீராய்வுக் கூட்டத்தின்போது, முதல்வர் அறிவிப்பின்படி, வ.உ.சிதம்பரனார் எழுதி வெளிவராத படைப்புகள் மற்றும் அச்சில் இல்லாத படைப்புகளை வ.உ.சி. நூற்களஞ்சிய மாக நான்கு நூல் திரட்டுகளாக பதிப்பிக்கலாம் என்று அறிவுறுத்தினார். அதன்படி, விடுதலைப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழரும், பழம்பெரும் நூல்க ளைத் தேடி பதிப்பித்து உரை எழுதியவருமான வ.உ.சிதம்பரனாரின் எழுத்துகள் வ.உ.சி. நூல் களஞ்சியமாகத் தொகுக்கப்பட்டு, அவரது 150-ஆம் பிறந்த ஆண்டான இந்த ஆண்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கள் கழகத்தால், குறைந்த விலையில் வெளி யிடப்படுகிறது.
முதல் கட்டமாக வ.உ.சிதம்பரனார் எழுதி வெளிவராத படைப்புகள் மற்றும் அச்சில் இல்லாத படைப்புகளைத் தொகுத்து, முதல் தொகுதி – வ.உ.சி. பன்னூல் திரட்டு எனும் தலைப்பிலும், இரண்டாம் தொகுதி – வ.உ.சி. திருக்குறள் உரை எனும் தலைப்பிலும் இரண்டு தொகுதிகள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப் படுகிறது. வ.உ.சி. எழுத்துகளை ஆய்வு செய்து வெளி வராத படைப்புகளைச் சேகரிப்பதில் புலமை பெற்றுள்ள சென்னைப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் வீ.அரசு பதிப்பாசிரியராக இருந்து இப்பெருந்திரட்டுகளைத் தொகுத் துள்ளார். புகழ்பெற்ற ஓவியர் டிராட்ஸ்கி மருது அட்டைப்படம் வடிவமைத்துள்ளார். இந்த நிகழ்வில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கள் மேலாண்மை இயக்குநர் டி.மணிகண்டன், உறுப்பினர் செயலர் எஸ்.கண்ணப்பன், துணை இயக்குநர் டி.சங்கர சரவணன், ஆலோசகர் ச.அப்பண்ணசாமி, பதிப்பாசிரியர் பேராசிரியர் வீ.அரசு, ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் கலந்துகொண்டனர்.
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 85ஆவது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை ராஜாஜி சாலை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,பி.கே.சேகர்பாபு, துறைமுக கழகத் தலைவர் சுனில் பாலிவால் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.