திரிபுராவில் பா.ஜ.கவின் பாசிச தாக்குதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு, அம்மாநில இடதுசாரி தலைவர்கள், ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது பா.ஜ.க கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறை வெறியாட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
நிலைமையை மதிப்பீடு செய்திட, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் பினாய் விஸ்வம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொலிட்பீரோ உறுப்பினரும் திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சருமான தோழர் மாணிக் சர்க்கார், சி.பி.ஐ(எம்) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இ கரீம், பி.ஆர்.நடராஜன், பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா மற்றும் ஏ.ஏ.ரஹீம் ஆகியோர் கொண்ட குழு நேற்று (10.03.2023) திரிபுரா சென்றது. பா.ஜ.கவின் பாசிச வெறித் தாக்குதலால் சுமார் 1000 நபர்கள் தாக்கப்பட்டுள்ளனர், இடதுசாரி கட்சித் தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் கடைகள் 20 சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 3 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். திரிபுராவில் உள்ள பிஷால்கரில் பா.ஜ.க வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களை இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் குழு தோழர் மாணிக் சர்க்காருடன் சந்தித்த போது, பா.ஜ.கவின் பாசிச அரசியல் மேலும் அம்பலமானது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு இது போன்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்திய அரசியலமைப்பிற்கு இணங்க அமித் ஷா செயல்பட வேண்டுமென்றும், இது போன்ற தாக்குதல்களைத் திரிபுரா முதலமைச்சர் தடுத்து நிறுத்திட வேண்டுமென்றும், இடதுசாரி கட்சி ஊழியர்கள் மீது பாசிச தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்துகிறது.