தியாக சீலர் தோழர் ப மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு: புகழ் வணக்கம் செலுத்துவோம்!
அன்புமிக்க தோழர்களே, வணக்கம்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில், தனது அப்பழுக்கற்ற பொது வாழ்வால் தன்னிகரற்று விளங்கும் தோழர் ப மாணிக்கம்!
கடலூர் நகரில், சுயமரியாதை பேணிய, பகுத்தறிவு சிந்தனை கொண்ட சிறு வணிகக் குடும்பத்தில் பிறந்த தோழர் ப. மாணிக்கம் பள்ளிக் கல்வியை முடித்து, உயர்கல்வி பெறுவதற்காக அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சேர்க்கப்பட்டார். அந்தக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் திசை வழி, அண்ணல் காந்தியின் அகிம்சா வழி, இளைஞர்களின் எழுச்சி நாயகனாக விளங்கிய மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்டதால் ஏற்பட்ட ஆவேசம், தியாகி சந்திரசேகர ஆசாத்தின் அஞ்சா நெஞ்சம், தமிழ்நாட்டில் உருவான பிரமணர் அல்லாதோர் இயக்கம், பெரியார் ஈ.வெ.ரா வின் பகுத்தறிவுப் பரப்புரை, சுயமரியாதை இயக்கம் என பல்வேறு கருத்தோட்டங்களையும் விவாதித்து வந்தனர். நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சனைகளின் விவாதக் களமாக அண்ணாமலை பல்கலைக்கழகம் விளங்கியதை வரலாறு பதிவு செய்துள்ளது.
தோழர் ப மாணிக்கத்தை விட இரண்டு வயது மூத்தவரான நாவலர் வி ஆர் நெடுஞ்செழியனும், இரண்டு மாதம் இளையவரான பேராசிரியர் க அன்பழகனும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஈ வெ ரா நிறுவிய திராவிடர் கழகத்தின் முன்னணி பரப்புரையாளர்களாக விளங்கினர்.
தோழர் ப மாணிக்கம் குடும்பம் தேச விடுதலைப் போராட்ட வீரர்கள் வந்து செல்லும் மையாக அமைந்திருந்தது. வீட்டுக்கு வருவோரின் கருத்தோட்டங்கள் குறித்து கவலைப்படால், அவர்களது பொது வாழ்வுப் பணியை ஊக்கப்படுத்துவதில் தோழர் ப மாணிக்கம் குடும்பம் அனைவர் மீதும் அன்புகாட்டி, ஆதரவு கொடுத்து வந்தது.
வீட்டுக்கு வந்து, செல்லும் தேச விடுதலைப் போராட்ட வீரர்களின் கலந்துரையாடல் சிறுவன் மாணிக்கத்தை தேச விடுதலை குறித்து சிந்திக்க வைத்தது. இந்தக் காலகட்டத்தில் கடலூர் தியாகி அஞ்சலை அம்மாள் தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, காலனிய கால காவல்துறையின் அடக்குமுறையை எதிர்கொண்ட விதம், மாணிக்கம் மனதில் பற்றி எரியும் நெருப்பானது.
இந்தச் சிந்தனை நிரம்பிய இளைஞனாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி மாணவனாக இருந்தபோது, தன்னைவிட நான்கு வயது மூத்த மாணவராக இருந்த தியாகச் செம்மல் தோழர் கே. பாலதண்டாயுதத்தின் அச்சம் அறியாத, நெஞ்சுரத்துடன் செயல்படும் துடிப்பால் ஈர்க்கப்பட்டார்.
இடதுசாரி திசைவழியே நாட்டில் சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்கும் என்று தீர்மானித்தார். தேர்ந்தெடுத்த பாதையில் எந்தவித சறுக்கலும், சஞ்சலமும் இல்லாமல் இறுதி மூச்சை சுவாசித்த வரை செயல்பட்டார்.
நெல்லைச் சீமையில் கட்சியைக் கட்டமைக்கும் பணியில் அவரது வெற்றி மைல்கல்லாகப் பதிந்துள்ளது.
மார்க்சிசம் – லெனினிசத்தைக் கற்பித்து, தத்துவ கண்ணோட்டத்தில் தேர்ச்சி பெற்ற, களப் போராளிகளை உருவாக்கியவர்.
கட்சியின் கொள்கை வழிப் பயணத்திற்கு கட்சி அமைப்புகளைக் கட்டமைப்பதிலும், அதன் உயிர்நாடியாக அமையும் ஊழியர்களைத் தேர்வு செய்வதிலும் அவருக்கு நிகர், அவர்தான்.
கட்சி வாழ்க்கையை நெறிப்படுத்தி வழிநடத்துவதில் கட்சி அமைப்பு விதிகளைப் பிசிறில்லாது கடைப்பிடித்தவர். இதில் விருப்பு, வெறுப்புக்கு ஊசி முனையளவும் இடம் தராதவர்.
எட்டுத்திக்கும் நெருக்கடிகள் முற்றி, வெடித்துச் சிதறும் சூழலிலும் சிந்தனையைச் சிதறவிடாமல், பிரச்சினையின் குவிமையத்தில் கவனம் செலுத்தி வெற்றி கண்டவர். ஆம் தோழர். கே. சுப்பராயன் அடிக்கடி கூறிவரும் ” நிலை குலைக்கும் நெருக்கடிகள் தோன்றும் போதும், அதில் நிலை குலைந்து விடாமல், அந்த நெருக்கடியை நிலை குலைத்து, வெற்றி கண்ட வீரர் தோழர் ப மாணிக்கம்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர், கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், மாநிலச் செயலாளர் என உயர் பொறுப்புகளில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டவர்.
தோழர் ப மாணிக்கம் தனது 70 வது வயதில், தனது உடல் நிலையினையும், காலம் முன்னிறுத்திய கடமைகளையும் கருத்தில் கொண்டு, தோழர் இரா நல்லகண்ணு அவர்களை மாநிலச் செயலாளர் பொறுப்புக்கு முன்மொழிந்து, ஒருமனதாக ஏற்கச் செய்தவர். 1992 முதல் ஜூன் 22, 1999 அவரது மறைவு வரை கட்சி அலுவலகத்துக்கு தவறாது வந்து, அவரது அரசியல் கடமைகளை மேற்கொண்டவர்.
அந்த மகத்தான தோழர் ப. மாணிக்கம் பிறந்து நூறாண்டு வரும் 26. 10.2022 ஆம் தேதியில் நிறைவடைகிறது.
தியாக சீலர் தோழர் ப. மாணிக்கம் திருவுருவப் படத்தைக் கட்சி அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் அலங்கரித்து வைத்து புகழ் வணக்கம் செலுத்துவது நமது கடமையாகும்.
தோழர். ப. மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு நிகழ்வு மிகச்சிறப்பாக அமைந்திட, அனைத்து ஏற்பாடுகளையும் கட்சியின் மாவட்ட குழுக்கள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
இரா. முத்தரசன்
மாநிலச் செயலாளர்