கட்டுரைகள்

தியாகத் தழும்பேறிய வரலாறு!

த. லெனின்

இந்தியாவை ஒரு சமத்துவ நாடாக மாற்ற வேண்டும் என்ற கனவின் ஊடாக 1925 டிசம்பர் 26 அன்று பிறந்தது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.

1924ல் எஸ்.ஏ.டாங்கே, முஸாபர் அகமது, நளினி குப்தா, உஸ்மானி ஆகிய நான்கு பேருக்கும் நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கான்பூர் சதி வழக்கை போட்டு கம்யூனிஸ்ட்களை ஒழித்து விட்டோம் என்று வெற்றிக் களிப்பில் வெள்ளை அரசு இருந்தபோதுதான், கம்சனை அழிக்கப் பிறந்த கிருஷ்ணனைப் போல இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது.

புகழ்பெற்ற கவிஞரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஹஸ்ரத் மொஹானி வரவேற்புக் குழுவின் தலைவராக பொறுப்பேற்க தென்னகத்தின் முதல் கம்யூனிஸ்ட் மா.சிங்காரவேலர் தலைமை உரையுடன் அமைப்பின் முதல் மாநாடு தலைமறைவாக கான்பூர் நகரில் நடந்தேறியது.

கட்சி பிறப்பதற்கு முன்பே வெள்ளை ஆட்சியால் தடை செய்யப்பட்டது. பலர் சதி வழக்குகளால் சிறைச்சாலையில் வாடி வந்தனர். இந்த போர்க்குணமிக்க புரட்சியாளர்களும், தேசபக்தர்களும் இணைந்து உருவாக்கியதே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.

போர்க்குணமிக்க வன்முறை சாகசங்களாலும் ஈடு இணையற்ற தியாகங்களாலும் வெள்ளை ஆட்சிக்கு எதிராக போர் புரிந்த தேசபக்தர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சங்கமித்தனர்.

புகழ்பெற்ற கதார் கட்சியை (கதார் என்றால் புரட்சி என்று பொருள்) சார்ந்த லாலா ஹர்தயால், சோகன்சிங் பாக்னா மற்றும் இந்தியாவை ஆயுதப் போராட்டம் மூலம் கைப்பற்றுவதற்காக வெளிநாட்டிலிருந்து காமகட்டமாரு கப்பல் மூலம் வருகை தந்த போராளிகள் பலர் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

கல்வி கற்க வெளிநாட்டிற்கு சென்ற எம்.என்.ராய், அபானி முகர்ஜி, வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா, டாக்டர் பூபேந்திரநாத் தத்தா (சுவாமி விவேகானந்தரின் தம்பி) மற்றும் பலர் மாஸ்கோவில் கம்யூனிஸ்ட்டாகி, அங்கேயே சிலர் அங்கேயே சிலர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை 1920ல்  நிறுவினர். ஆனால், ஒன்றுபட்ட கட்சி வெளிநாட்டில்  கட்சி உருவானதை ஒருமனதாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன், 1925 டிசம்பர் 26 தான் கட்சி அமைக்கப்பட்ட தினமாக ஏற்றுக் கொண்டது.

1922 லிருந்து 1924 வரை இந்தியாவின் வடமேற்கு பகுதியில் நுழைந்த முஹாஜிர்கள் எனப்படும் இஸ்லாமிய புரட்சியாளர்கள் மீது நான்கு பெஷாவர் சதி வழக்குகள் போடப்பட்டன. இதிலிருந்து பலர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

நவஜவான் சோசலிஸ்ட் படையை நடத்திய பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட பிறகு அவருடைய தோழர்கள் அஜய்கோஷ், ஷிவ்வர்மா, சோஹன் சிங் கோஷ் ஆகியோர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

சிட்டகாங் ஆயுதக் கிடங்கு தாக்குதல் புகழ் சூரியா சென்னின் சீடர்களும், புரட்சிப் போராளிகளுமான கணேஷ் கோஷ் மற்றும் கல்பனா தத் ஆகியோர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

ஒத்துழையாமை இயக்கத்திற்கு காந்தி அறைகூவல் விடுத்த போது சத்தியாகிரகிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மறுத்த, கார்வால் ஆயுதப்படை சார்ஜன்ட் சந்திரசிங் கார்வாலி சிறை தண்டனைக்குப் பிறகு வெளியே வந்தவுடன், புரட்சிகர இயக்கமாம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

வெள்ளை காலனியாதிக்கத்திற்கு எதிராக வெகுண்டெழுந்து போராடிய மணிப்பூர் ஜன நேத்தா (மக்கள் தலைவர்) இராபோர்ட் சிங் சிறை வாசத்தின்போதே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

விடுதலைப் போராட்ட புரட்சியின் பல்கலைக்கழகங்களாக விளங்கிய அந்தமான், தியோலி, பக்ஸா, ஹிஜ்லி மற்றும் பிற சிறைகளில் இருந்து விடுதலை அடைந்தவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

1921 நவம்பர் 30லிருந்து டிசம்பர் 2 வரை ஜாரியாவில் நடைபெற்ற ஏஐடியூசியின் இரண்டாவது மாநாட்டில் முதல் தீர்மானம் இந்திய மக்கள் சுயராஜ்யம் அடையும் நேரம் வந்து விட்டது  என்றது.

1928ல் சைமன் கமிஷன் பம்பாயில் வந்து இறங்கியபோது, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏஐடியூசி தொழிலாளர்கள் பூரண சுயராஜ்யம் வேண்டும் என்றும், சைமன் கமிஷனே திரும்பிப் போ என்றும் கேட் வே ஆப் இந்தியா வரை ஊர்வலம் சென்றனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மகாசபை கூட்டம் 1928ல் கல்கத்தாவில் நடைபெற்றது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏஐடியூசி தொழிலாளர்கள் காங்கிரஸ் மாநாட்டுப் பந்தலில் நுழைந்து பூரண சுயராஜ்யம் தேவை என்று தீர்மானத்தை முன்மொழிந்தனர்.

மீரட் சதி வழக்கில் கைதானவர்களுக்கு வாதிட நேரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. காந்தி சிறைக்கே சென்று அவர்களைச் சந்தித்தார். இவர்களில் பெரும்பகுதி கம்யூனிஸ்ட்கள்.

இவர்கள் மீது வாசிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் பிரிட்டிஷ் இந்திய இறையாண்மையை பேரரசிடம் இருந்து பறித்துக் கொள்ள இந்தியாவிலிருந்து தங்களுக்கு தெரிந்த, தெரியாத ஒவ்வொருவருடனும் சேர்ந்து சதி செய்ததாக வெள்ளை காவல்துறை குற்றம் சுமத்தியது.

அந்தமான் தனி கொட்டடி சிறையில் மிருகத்தனமான சித்திரவதைக்கு பிறகு பலர் இறந்தனர். விடுதலையடைந்த அனைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். ஆனால், எவரும் ஒருபோதும் வீரசவார்க்கரை போல மன்னிப்புக் கடிதம் எழுதியதில்லை!

நாடு விடுதலைப் பெற்ற போது, நவகாளியில் எழுந்த வகுப்புக் கலவரத்தை அடக்க நேரில் சென்றார் தேசப்பிதா காந்தி. ஆனால், நவகாளிக்கு சில மைல் தூரத்தில் இருந்த லால் ஹஸ்நா பாத் என்ற ஊரின் கதை அனேகருக்குத் தெரியாது. அங்கு ஏராளமான கம்யூனிஸ்ட் விவசாயிகள்  அங்கு வந்த ஆயிரக்கணக்கான இந்துக்களுக்கு திரண்டு நின்று பேருதவிகளை செய்தனர். கலகக்காரர்களை மாவட்ட எல்லைக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தனர். அப்படி தடுத்து நிறுத்திய தோழர் லால் மோகன் சென் அந்தமான் சிறையில் இருந்து வெளிவந்து கம்யூனிஸ்டானவர். அவர் இக்கலவரத்தில் களப்பலியானர்.

புடம்போட்ட தியாக வரலாற்றுக்குச் சொந்தமான கம்யூனிஸ்ட் கட்சி 1925ல் தொடங்கியது.
 இதைப்போலவே, கூட்டிக் கழித்துப் பார்த்தால் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் 1925 நவம்பர் 27 ஒரு விஜயதசமியன்று ஹெட்கேவரால் தொடங்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்சின் குறிக்கோளாக வேதகால பழம்பெருமையான தர்மத்தை நிலைநாட்டுவது என்றும், நமது சமுதாயத்தில் ஒரு பிரிவினர் (பிராமணர்) தூய ஒழுக்கமும், தியாகம் முதலிய பண்புகளுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வாழ்வு அனைத்தையும், ஞானத்தை வளர்க்கிற பணியில் ஒப்படைத்திருந்தார்கள். இந்த சமூகத்திற்கு ஆணி வேர் இவர்கள்தான். உண்மையில் ஹிந்து ராஷ்டிரத்தின் சிரஞ்சீவியாக வாழ்ந்து வரும் ரகசியம் இதுதான் என்று தனது உயர்சாதிப் பிடிப்பை வெளிப்படுத்திக் கொண்டது.

ஆர்.எஸ்.எஸ். ஒரு இந்து அமைப்பு மட்டுமே. தான் ஒரு பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கம் அல்ல என்பதை பிரகடனப்படுத்தியது. இந்தியா சோசலிசத்தை நோக்கி செல்வதை தடுக்கவே இது உருவாக்கப்பட்டது என்றும் கூறிக் கொண்டது.

அரசியலை இந்துமயமாக்கு, இந்துக்களை ராணுவ மயமாக்கு என்ற பாசிச முழக்கத்தை எப்போதும் எடுத்து வைத்தது.

முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் எதிரிகள். கம்யூனிஸ்ட்கள் பயங்கரவாதிகள் என்றது. பாசிச கோட்பாடுகளை, வெறுப்பு அரசியலை உச்சி முகர்ந்து கொண்டாடியது.

விடுதலைப் போராட்ட தியாகிகளை பற்றி ஆர்.எஸ்.எஸ். வரையறுத்த போது இத்தகைய மனிதர்கள் பின்பற்றத்தக்கவர்களாக நமது சமுதாயத்தால் பார்க்கப்படவில்லை என்றது.

மனுஸ்மிருதி விதிகள் உலகத்தாருக்கே ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டிருக்கிறது. ஒரு இயல்பான அடக்க ஒடுக்கமான (சாதி) சமூகத்தை அது படைத்தது. ஆனால், நமது அரசியல் சாசன சட்டத்திற்கு அதில் ஒன்றும் இல்லை என்று ஒதுக்கிவிட்டது என்று மனுஸ்மிருதியை உயர்த்திப் பிடித்தனர்.

1930ல் காந்தி சட்டமறுப்பு இயக்கத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது, தண்டியாத்திரையை அவர் துவக்கிய போதும், சத்தியாகிரகத்தில் சங் பங்கேற்காது என்று ஹெட்கேவார் நாடு முழுவதும் செய்தி அனுப்பினார்.

1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தி அறிவித்த போது, அதில் ஆர்.எஸ்.எஸ். பங்கேற்க கூடாது என்று சுற்றறிக்கை விட்டது. இந்து மகா சபைத் தலைவர் வி.டி.சாவர்க்கரோ இந்துக்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்க கூடாது என்று ஆணையே இட்டிருந்தார். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தையும் காட்டிக் கொடுத்த காரியத்தையும் செய்தவர் தான் இவர்.

கம்யூனிஸ்ட்களும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முழுமையாக பங்கேற்கவில்லைதான். காரணம் இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரை எதிர்த்து சோவியத் முகாமும், மேற்கத்திய நாடுகளும் இணைந்து போர்நடத்தியது ஆகும். இந்நிலையிலும்கூட நாட்டிலேயே இதில் முதல் களப்பலியானது கம்யூனிஸ்ட் மாணவர் ஹெமு கெலனி ஆவார். அந்த இயக்கத்தில் புகழ்பெற்ற அருணா ஆஸப் அலி, பத்ரி சர்க்கார், கிரந்தி சின்ஹா, நானா பட்டீல் மற்றும் அவரது நெருங்கிய தோழர்கள் அனைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தது வரலாறு.

ஹைதராபாத் நிஜாமை எதிர்த்த வீர தெலுங்கானா, திருவாங்கூர், கொச்சி, பாட்டியாலா ஆகிய சமஸ்தானங்களில் கம்யூனிஸ்ட்கள் முன்னணியில் நின்று இந்தியாவில் இணைப்பதற்கான போராட்டங்களை நடத்தினர்.

காஷ்மீரை இணைக்க தேசிய மாநாட்டுக் கட்சியின் ஷேக் அப்துல்லாவோடு இணைந்து கம்யூனிஸ்ட்கள் பணியாற்றினர். பிரஞ்சு இந்தியப் பகுதியான பாண்டிச்சேரியின் விடுதலைப் போராட்டத்தை வ.சுப்பையா தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வெற்றி அடைந்தது.
போர்ச்சுகீசிய இந்தியப் பகுதியான கோவாவின் விடுதலைக்கு உயிர் நீத்த 35 பேரில் 25 பேர் கம்யூனிஸ்ட்கள்.

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்வதைத் தடுக்க நெல்லை, மதுரை, கோவை, ராமநாதபுரம், சென்னை சாதி வழக்குகளைப் போட்டு எவ்வளவோ முயன்றனர். ஆனாலும், இருள் அகற்றும் ஆதவனாக எழுச்சிப் பெற்றது. இப்படி ரத்த சாட்சிகளே கம்யூனிஸ்டுகளின் நாட்டுப்பற்று சின்னங்களாகக் காட்சியளிக்கிறது.

காலிஸ்தான் தனி நாடு கேட்டு பஞ்சாபில் சீக்கிய பயங்கரவாதிகள் போராடியபோது, இந்து ராஜ்யமும் அல்ல, காலிஸ்தானும் அல்ல. ‘வாழ்க இந்தியா’ என்று தனி நாடு கேட்டவர்களை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தை நடத்தியது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. பஞ்சாப் மாநிலச் செயலாளர் தர்ஷன் சிங் கனடியான்,  அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் அமலோக் ராம், ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் நச் சத்தார் சிங் உட்பட 200 பேர் கொல்லப்பட்டனர்.

இப்போராட்டத்திற்கு பிறகு மத்திய சட்டமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். ஆனால் இந்து மகாசபை தலைவர் சியாமபிரசாத் முகர்ஜி, நிதியமைச்சராக முஸ்லீம் லீக் தலைமையிலான  பஸ்லுக் ஹக் அமைச்சரவையில் அமைச்சராக பற்றிக் கொண்டிருந்தார்.  இந்த அமைச்சரவை குழு தான் “தனி பாகிஸ்தான்” வேண்டுமென்று கேட்டு தீர்மானம்  நிறைவேற்றியது. இதுதான் அவர்களது தேச பக்தி!

சுதந்திரம் பெற்ற இந்தியாவில் மொழி வழி மாநிலம் அமைக்க போராட்டம் நடைபெற்றபோது, மொழி வழி மாநிலம் அமைந்தால் இந்தியா சிதறுண்டு போகும் என்று கூறி அதை எதிர்த்தது.
இந்து மதம், இந்து மொழி (சமஸ்கிருதம்), இந்து கலாச்சாரம், இந்து நாடு, இந்து ராஷ்டிரா என்பதே அதன் இலக்கு. அரசியல் சாசனம் சொன்ன இந்தியா ஒரு சமதர்ம மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்பதை அவர்கள் ஏற்பதில்லை.

சுதந்திர சமஸ்தானங்களை இந்திய ஒன்றியதோடு இணைப்பது, நிலவுடைமைக்கு உச்சவரம்பு, தேசியமயமாக்கல், பொதுத்துறை உருவாக்கம், சோசலிச திட்டமிடல் ஆகியவற்றை கம்யூனிஸ்ட்கள் முன்மொழிந்தனர். இவற்றை ஆர்.எஸ்.எஸ். முற்றாக எதிர்த்ததுடன், சமஸ்தானங்கள் ஒழிக்கப்படக் கூடாது என்றும் அந்த மன்னர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது ஆர்.எஸ்.எஸ்.

சோவியத் எதிர்ப்பு, அமெரிக்க ஆதரவு, ஹிட்லரின் ஜெர்மனிக்கும், பாசிச முசோலினியின் இத்தாலிக்கும் ஆதரவு தரும் நிலைப்பாட்டை அவ்வப்போது எடுத்துச் சொன்னது ஆர்.எஸ்.எஸ்.

கலாச்சார தேசியத்திற்கு பாசிசம் காட்டும் வழியே மேலானது. இந்து இந்தியாவின் வளர்ச்சிக்கும் ஏற்றுது. இந்துக்களின் மறுமலர்ச்சிக்கும் தெளிவான வழிமுறையை கோட்பாடுகள் காட்டுகிறது என்றார் ஆர்.எஸ்.எஸ்.சின் ஸ்தாபகர்களில் ஒருவரான பி.எஸ்.மூஞ்சே.

1948 ஜனவரி 30ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ்.சின் நாதுராம் கோட்சேயால் காந்தி கொல்லப்பட்டார். அதை ஒட்டி இவர்கள் பெரிதும் புகழ்கிற அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையிலான உள்துறை அமைச்சகம், ஒரு தெளிவான அறிக்கை வெளியிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தடை செய்தது.

ஆர்.எஸ்.எஸ். இந்துக்களிடையே ஒன்றுமையை வளர்ப்பதுதான் தங்களின் நோக்கம் என்று கூறுகிறது. ஆனால் நடைமுறையில் அப்படி நடந்து கொள்ளவில்லை. ஆனால், விரும்பத்தகாத பயங்கரமான நடவடிக்கைகளில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ளனர். பொதுச் சொத்துக்களுக்கு தீயிடல், சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்களில் அவர்களுக்கு தொடர்பிருப்பது தெரிய வருகிறது. சட்டவிரோதமான ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும், குண்டுகளையும் அவர்கள் சேகரித்துள்ளனர் என்றதுடன், அவர்களின் நடவடிக்கைகள் ரகசியமாக உள்ளது என்று சுட்டிக்காட்டியது.

அதன் பின்  தேசிய கொடியை மதிப்போம், அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி நிற்போம், அமைதியாக வழிமுறைகளில் வெளிப்படையாக இனி செயல்படுவோம், கலாச்சாரப் பணியில் தான் இனி ஈடுபடுவோம், அரசியல் பணியில் ஈடுபட மாட்டோம் என்று தனது அமைப்பு விதியிலேயே வரையறுத்து வல்லபாய் பட்டேலிடம் தங்கள் மீதான தடையை விலக்க வைத்தது. ஆனால் இன்றோ தேசப்பிதாவை கொன்றவர்களுக்கு விழா எடுத்து கூத்தாடிக் களிக்கிறது. இதுதான் ஆர்.எஸ்.எஸ்!

இதுவரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று முறை தடை செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் விடுதலைக்காகப் போராடியது, விடுதலைக்குப் பிறகு அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காகப் போராடியது என்பதால் ஆகும். ஆர்.எஸ்.எஸ்ஸும் மூன்று முறை தடை செய்யப்பட்டது. இது ஆங்கிலேயர் ஆட்சியால் அல்ல. சுதந்திரம் பெற்ற பிறகு, தேசப்பிதா காந்தியைக் கொன்றதாலும், நெருக்கடி நிலை காலம் மற்றும் பாபர் மசூதியை இடித்த காரணத்திற்காகவும் தடை செய்யப்பட்டது.

இப்படித் தொடர்ந்து மிகக் கேடான பிற்போக்கு பாத்திரத்தை வகித்த ஆர்.எஸ்.எஸ்.தான் இன்று அரசியல் பிரிவான பா.ஜ.க. ஆட்சியின் வழியே நாட்டின் சொத்துக்களை நாசம் செய்கிறது. கார்ப்பரேட் கூட்டு களவாணித்தனத்திற்கு கவரி வீசுகிறது. எதிர்ப்போரை ஈவு இரக்கமின்றி தேசத்துரோகி என்கிறது. மொத்தத்தில் ஆர்.எஸ்.எஸ். இன்று ரிலையன் சேவா சங்கமாக மாறிவிட்டது.

எனவே மீண்டும் ஒரு விடுதலைப் போர் எழ வேண்டும்! துணிந்து போர்க்களம் புகுவோம் என் தோழனே!

தொடர்புக்கு: 94444 81703  

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button