தினமலர் இதழ்களை தினமும் விற்று தினமலருக்கு பணம் கொடுக்கிறது ரயில்வே!
டி எம் மூர்த்தி முகநூல் பதிவிலிருந்து
இன்று காலை 6 மணிக்கு, சென்னையிலிருந்து மதுரை செல்லும் ‘தேஜஸ்’ ரயிலில் ஏறினேன். டிக்கெட் 920 ரூபாய்.
டிக்கெட் பரிசோதகர் கூடுதலாக ரூ.20 கொடுக்குமாறு கேட்டார். “எதற்கு” என்றேன். “பேப்பருக்கும் தண்ணீர் பாட்டிலுக்கும்” என்றார்.
” நான் உங்களிடம் கேட்கவே இல்லையே. நீங்களாகவே கொடுத்து விட்டு, எப்படி விலைகேட்கிறீர்கள்?”
அவர் கையிலிருந்த பயணிகள் பட்டியலைக் காண்பித்து, “ரயில்வே வசூலிக்கச் சொல்கிறது” என்றார்.(நான் ரயில் பெட்டியில் ஏறும்போதே, எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் ‘தினமலர்’ பத்திரிகை கிடந்தது).
“தினமலருக்கு ரயில்வே ஏன் ஏஜென்ட் வேலைபார்க்கிறது? அந்தப் பேப்பரை நான் விலை கொடுத்து வாங்கியே தீரவேண்டும் என கட்டாயப்படுத்த ரயில்வேக்கு என்ன அதிகாரம்? பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். நான் பணம் தரமுடியாது” என உறுதியாகச் சொன்னேன்.
அவர் பேசாமல் நகர்ந்தார். ஆனால் மற்றவர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டே சென்றார்.
ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொண்ட குடும்பம் பக்கத்து இருக்கைகளில் பயணம் செய்தது. மூன்று பேருக்கும் தினமலர் கொடுத்து, பேப்பர்களுக்கான விலையை வசூலித்தார். என்ன கொடுமை இது! அனைவரும் வாய்பேசாமல் பணம் கொடுத்தது வியப்பாக உள்ளது! “ஊமைச் சனங்கள்’
தேஜஸ் ரயிலில் 14 பெட்டிகள். ஒரு பெட்டிக்கு எழுபத்தி எட்டு இருக்கைகள். (14×78=1092)இந்த ஒரு ரயிலில் மட்டும் 1092 தினமலர் இதழ்களை தினமும் விற்று தினமலருக்கு பணம் கொடுக்கிறது ரயில்வே!
மதுரையிலிருந்து சென்னைக்கு திரும்பும் போதும் விற்பார்களா எனத் தெரியவில்லை. மோடிக்கும் பாரதிய ஜனதாவுக்கு ஜால்ரா போட்டால் என்னென்ன வகையான வாய்ப்புகளையெல்லாம் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்கள் வாரி வழங்குகிறார்கள்!