தலைமறைவு நாயகன் ‘சாட்டோ’ வின் நினைவை நிறுத்துவோம்!

-ஆனந்த் பாசு
‘சாட்டோ’ என்று அறியப்பட்ட வீரேந்திர சட்டோபாத்யா ஒரு பிரிட்டிஷ் காலனித்துவ
எதிர்ப்பாளரும் புரட்சியாளரும் ஆவார் . 1902 இல் இந்தியாவை விட்டு வெளியேறிய அவர், மீண்டும் தாயகம் திரும்பவே இல்லை. இந்தியாவை விட்டு வெளியேறிய பின்னர், சாட்டோவின் அசாதாரண தலைமறைவு வாழ்க்கை பெரும் கொந்தளிப்பால் நிரம்பியது; சாகசங்கள் நிறைந்தது.
இந்திய தேசியவாதத் தலைவரும் கவிஞருமான சரோஜினி நாயுடுவின் இளைய சகோதரரான சாட்டோ, 1880ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் பிறந்தார். அவரது தந்தை அகோரேநாத் சட்டோபாத்யாயா அன்றைய ஹைதராபாத் சமஸ்தானத்தில் ஒரு கல்வியாளராகத் திகழ்ந்து, முற்போக்கான சீர்திருத்தங்கள் மூலம் தனது முத்திரையைப் பதித்தவர். மேலும், இவர் ‘நிஜாம் கல்லூரி’ எனும் பிரசித்தி பெற்ற ஒரு கல்வி நிறுவனத்தை நிறுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய குடிமைப் பணியில் நுழைவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், சாட்டோ, இங்கிலாந்திலேயே பிரசித்தி பெற்ற ‘மிடிள் டெம்பிள்’ கல்வி நிலையத்தில் சட்டம் பயிலச் சேர்ந்தார். அங்கு அவர் போர்க்குணமிக்க கருத்துக்களைப் பகிரங்கமாகப் பகிர்ந்ததால், ‘அவரை மிடிள் டெம்பிள்’ நிறுவனம் சட்டக்கல்வி கற்பதில் இருந்து வெளியேற்றியது.
1910 ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில், இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் ஒரு புரட்சியாளனாக இடம்பெற்ற, அப்போது லண்டனில் கல்வி பயின்று கொண்டிருந்த மதன் லால் திங்ரா, பிரிட்டிஷ் அதிகாரி விலியம் ஹட் கர்சன் வில்லியைக் கொலை செய்ததைத் தொடர்ந்து, சாட்டோ, லண்டனிலிருந்து பாரிஸுக்கு இடம் பெயர்ந்தார். அங்கு மேடம் காமாவுடைய புரட்சிக் குழுவுடன் சாட்டோ பணியாற்றத் தொடங்கினார்.
பாரிசில், சாட்டோவிற்கு, ரெனால்ட்ஸ் எனும் நங்கையுடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ரெனால்ட்ஸ் அவர்களுடைய குழந்தைகள் கத்தோலிக்கராக வளர்க்கப்படுவார்கள் என்று வலியுறுத்தியதால், மண முறிவு ஏற்பட்டது. பிறகு, கல்கத்தாவிலிருந்து ராய் என்பவருடன் திருமண முன்மொழிவு ஏற்பட்டது. அவர் பிற மொழிகளை உட்கிரகிப்பதில் வல்லவராய் இருந்தார். மொழியியல் மற்றும் இனவியல் ஆகியவற்றில் தீவிர ஆர்வமும் கொண்டிருந்தார். அவர் அறிவார்ந்த கட்டுரைகளை எழுதினார். மேலும், அவரது அரசியல் நடவடிக்கைகளுடன் இந்துஸ்தானியும் கற்பித்தார். 1910 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், அவர் தனது சகோதரி மிருணாளினி மற்றும் அவரது அபிமானி பால்முகுந்த் ஆகியோரை ஏற்றுமதி
செய்யப்பட்ட மரச்சாமான்களில் ஆயுதங்களை மறைத்து வைத்துக் கடத்தும் பணியில் ஈடுபடுத்தினார்.
சாட்டோவின் கடிதங்களை இடைமறித்து, ஆங்கிலேய அதிகாரிகள் வேவு பார்த்த போது, இது அவர்களுக்குத் தெரிய வந்தது. இதையொட்டி, ஹைதராபாத்தில் வசித்து வந்த அவரது தந்தை அகோரேநாத்தின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில் மிருணாளினி மற்றும் பால்முகுந்த் இடையேயான கடிதப் பரிமாற்றம் தவிர
வேறு எதுவும் கிடைக்கவில்லை. இவரது பாரிஸ் குழு விரைவிலேயே கலைக்கப்பட்டு, சாட்டோ சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் பின்னர் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு மீண்டும் இடம் பெயர்ந்தார்.
ஜெர்மனியில் உள்ள ஹாலேவில் முனைவர் பட்டப் படிப்பில் சேர்ந்தார். சாட்டோ பல்வகைப்பட்ட வட்டங்களில் பழகினார். இந்த காலகட்டத்தில்தான் ஐரோப்பா முழுவதும் இருந்த பிரெஞ்சு மற்றும் இத்தாலிய அனார்கிஸ்டுளுடன்* இவருக்கு நட்புறவு ஏற்பட்டது. காலனித்துவ எதிர்ப்பு மற்றும் சர்வதேச அனார்கிஸ்டுகளுடைய உலகில்
மூழ்கிய சாட்டோ, செப்டம்பர் 1914ல், முதலாம் உலக யுத்தச் சூழலில், ‘இந்திய விடுதலைக் குழு’ என்று பின்னர் அழைக்கப்பட்ட ஜெர்மனிவாழ் மாணவர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட பெர்லின் கமிட்டியை நிறுவ உதவினார். இந்த பெர்லின் கமிட்டி, பிரிட்டிஷ் இந்தியாவின் அண்டை நாடாக விளங்கிய ஆஃப்கானிஸ்தான் அமீரின் பிரிட்டிஷ் எதிர்ப்புத் திட்டங்களை மேலும் தீவிரப்படுத்தவும், பிரிட்டிஷ்-இந்திய ராணுவ வீரர்களை சீர்திருத்தி, ஆயுதங்களையும் வீரர்களையும் இந்தியாவிற்குக் கடத்தவும், ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு ஒரு பணிக்குழுவை அனுப்பியது.
இதன் பிறகு, சாட்டோ ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகருக்குச் சென்று புதிய சங்கங்களை, குறிப்பாக போல்ஷிவிக்குகளுடன்* வளர்த்தெடுத்தார். அவர் பெர்லின் கமிட்டியை, ‘சின் ஃபெய்ன்’ எனும் ஐரிஷ் விடுதலை இயக்கத்துடனும், எகிப்திய தேசியவாத இயக்கத்துடனும் ஒப்பிட்டு, இந்திய விடுதலைப் பிரச்சினையை சர்வதேசமயமாக்க கடும் முயற்சிகள் மேற்கொண்டார். இங்கேயும், சாட்டோ மீது சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பிரிட்டிஷ் உளவுத்துறை அவரைத் தொடர்ந்து உளவு பார்த்துக் கொண்டே இருந்தது.
1915ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஏற்கனவே லண்டனில் இருந்த போது அறிமுகமான ஹில்டா மார்கரெட் ஹவ்சின் என்கிற ஆங்கிலப் பெண்மணி, அவரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் சந்தித்தார். சந்தித்துவிட்டுத் திரும்பியவுடன் அவர் லண்டனில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, டொனால்ட் குல்லிக் என்ற பிரிட்டிஷ் ரகசிய ஏஜென்ட், சுவிட்சர்லாந்திற்குச் சென்று, மார்கரெட் ஹவ்சினின் விடுதலைக்கு உதவும்
சாக்கில், சாட்டோவைச் சந்தித்தார். குல்லிக்கின் நோக்கம் காட்டோவைப் பிரெஞ்சு அல்லது இத்தாலிய எல்லைக்குள் இழுப்பது அல்லது கொன்று விடுவதாகத்தான் இருந்தது. ஆனால், டொனால்ட் குல்லிக் தன் திட்டத்தை நிறைவேற்றுவதில் தோல்வியையே தழுவினார். அந்த நேரத்தில், சோமர்செட் மௌம் எனும் பிரிட்டிஷ் இரகசிய சேவையில் இருந்த எழுத்தாளர், இந்த தோல்வியுற்ற படுகொலை சதித்திட்டத்தை, தான் எழுதிய கதை ஒன்றில், ‘சந்திர லால்’ என்கிற சாட்டோவை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாகப் பதிவு செய்துள்ளார்.
1920 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இடதுசாரி-பெண்ணிய பாட்டாளி வர்க்கப் போராளி ஆக்னஸ் ஸ்மெட்லியைச் சந்தித்தார். ஏழ்மையான கிராமப்புற பின்னணியில் இருந்து வந்த ஸ்மெட்லி, நியூயார்க்கில் லாலா லஜபதி ராயுடன் பணிபுரிந்த போது, இந்து-ஜெர்மன் சதி வழக்கில் 1918ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டவர். சாட்டோவின் பால் பெரிதும் ஈர்ப்பு கொண்ட அவர், அவரை ரகசியப் புரட்சிகர இயக்கத்தின் உருவகமாகவும், அதன் மிக சிறந்த அயலகக் கதாநாயகனாகவும் கருதினார்.
1921ல் ஸ்மெட்லி, சாட்டோ மற்றும் மற்றவர்களுடன் மாஸ்கோவிற்குப் பயணம் செய்து, ‘கமின்டர்ன்’ என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட, 1919 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘கம்யூனிஸ்ட் இன்டெர்னேஷனல்’ எனும் சோவியத் கட்டுப்பாட்டு சர்வதேச அமைப்பின் ஒத்துழைப்பை நாடினார். பெர்லின் கமிட்டி ஜூலை மாதம் நடந்த ‘கமின்டர்ன்’ மூன்றாம் காங்கிரஸில் கலந்து கொண்டது. பிறகு, லெனினைச் சந்திக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், மாஸ்கோவை விட்டு வெறுங்கையுடன் வெளியேற வேண்டியதாயிற்று.
ஜெர்மனி வந்ததும் மீண்டும் பிரிட்டிஷ் உளவாளிகளால் வேட்டையாடப்பட்டு, இந்த ஜோடி தொடர்ந்து தலைமறைவாய் சுற்ற வேண்டி வந்தது. அந்த சமயத்தில் சாட்டோ ஆர்சனிக் நச்சுக்கிரையாகி நோய்வாய்ப்பட்ட போது, ஸ்மெட்லி அவருக்குப் பணிவிடை செய்து நலம் பெறச் செய்தார். அதன் பிறகு, ஸ்மெட்லி சாட்டோவைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்தாள். இருவரும் இணைந்து வாழ்ந்த எட்டு வருட கால கொந்தளிப்பான உறவு இருவரையும் ஆழமாக காயப்படுத்தியது.
1920 களில், சாட்டோ இந்தியாவிற்கு செய்திகளை வழங்குவதற்காக, இந்திய செய்தி சேவை மற்றும் தகவல் பணியகத்தை அமைத்தார். அவர் தனது மைத்துனர் ஏ.சி.என்.நம்பியாருடன் இணைந்து, இந்திய-ஜெர்மன் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில், இரண்டு வர்த்தக இதழ்களைத் தொடங்கினார். இவை அவரது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான வழிமுறையாகவும் அமைந்தன. பிறகு, 1926 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில், காலனித்துவ எதிர்ப்பு மாநாட்டை ஏற்பாடு செய்ய சாட்டோ உதவினார். இந்த மாநாடு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கூட்டிணைவு உருவாவதற்கு வழிவகுத்தது.
நாசியிசத்தின் அச்சுறுத்தல் பூதாகரமாக உருவெடுத்த நிலையில், சாட்டோ 1931 ஆம் ஆண்டு ஜெர்மனியை விட்டு மாஸ்கோவிற்குப் புறப்பட்டார். அதன் பிறகு, அவர் லெனின்கிராட்டில் உள்ள மானுடவியல் மற்றும் இனவியல் நிறுவனத்தில் (IAE) ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். ‘சாட்டோ’வின் பெயர் இப்போது ‘வீரேந்திரநாத் அகோர்னாடோவிச் சட்டோபடாயா’.
பெர்லினில் இருந்து தனது குழந்தைகளுடன், தனது ஜெர்மன் மனைவி சார்லோட்டின் வருகைக்காக சாட்டோ காத்திருந்தார். ஆனால், அவளைப் பற்றி எதுவும் தெரியவில்லை. பிறகு, அவர் சக ஆராய்ச்சியாளரான லிடியா
கருனோவ்ஸ்காயாவுடன் நெருங்கிப் பழகி 1933 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு, அவர் ஒரு பயனுள்ள கல்வி மற்றும் ஆய்வுப் பணியைச் செய்ததுடன், தனது அரசியல் கடமைகளையும் நிறைவேற்றினார். ஆனால், அது நீடிக்கவில்லை. ஜூலை 16, 1937 அன்று இரவு சோவியத் அதிபர் ஸ்டாலினின் ரகசிய காவல்துறையினரால் கொண்டு செல்லப்பட்டார். லிடியா தீவிரமாக அவரைத் தேடியது
வீணானது. அவர் இறந்துவிட்டார் என்று அவருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்து.
ஆனால், ரஷ்ய வரலாற்றாசிரியர் மித்ரோகின், சாட்டோ 1937ஆம் ஆண்டு, செப்டம்பர் 2ஆம் தேதி தூக்கிலிடப் பட்டதைக் காட்டும் ரஷ்ய உளவு நிறுவனமான, தேசியப் பாதுகாப்புக் கமிட்டி என்று பொருள்படும் கே.ஜி.பி யின் ஆவணங்கள் கிடைக்கப் பெற்றார். அதன்படி, சாட்டோவின் நினைவு நாள் செப்டம்பர் 2. அவருடைய வீர, தீரச் செயல்களை நெஞ்சில் நிறுத்தி, அன்னாரின் நினைவைப் போற்றுவோம்!
(கௌதம் பெம்மாராஜுவின் கட்டுரையிலிருந்து)
தொடர்புக்கு – 73584 42610