தர்ஷன் சிங் ‘கனடியன்’ கனடா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மற்றும் சிபிஐ தலைவர்
அனில் ரஜீம்வாலே
கனடா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜார்ஜ் கிடோரா கூற்றின்படி, தர்ஷன் சிங் சங்கா பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் (கனடாவின் மேற்குப் பகுதி) மற்றும் கனடாவின் தொழிற்சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தனது முத்திரையைப் பதித்துக் கனடிய தொழிலாளர்களின் புகழ்பெற்ற தலைவரானவர். மற்றொரு கனடிய கம்யூனிஸ்ட் ஹர்ஜித் தௌதாரியா, ‘தர்ஷனின் வாழ்க்கையின் ஆய்வு மற்றும் பங்களிப்பு அவரது பெயரில் ஓர் (அறக்கட்டளை) அமைப்பை உருவாக்கியது’ என்று கூறினார். புலம்பெயர்ந்தவர்களுக்காகவும் கனடா கம்யூனிஸ்ட் கட்சி கொள்கைகளுக்காகவும் தர்ஷன் சிங் பெருமையுடன் போராடினார். இதன் விளைவாய் அவர் தர்ஷன் சிங் ‘கனடியன்’ என்றே புகழப்பட்டார்.
குடும்பப் பின்னணி
தர்ஷன் சிங் சங்கா 1917 மார்ச் 13ல் பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் மாவட்டம், கார்சங்கர் தாலுக்காவின் லங்கேரி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை ஸ்ரீ தேவா சிங், தாயார் திருமதி ராவ். தர்ஷன், பாய் பியரா சிங் லங்கேரி போன்ற கதர் இயக்கத் தலைவர்களின் ஆழமான செல்வாக்கிற்கு ஆளானார். (கதர் இயக்கம், இந்தியச் விடுதலைக்குப் போராடிய, அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளில் வாழ்ந்த பஞ்சாபியர்கள் தொடங்கிய இயக்கம்.). தர்ஷன் பள்ளிக் கல்வியை முடித்தார்.
தர்ஷனது குடும்பம் வெறும் மூன்று அல்லது நான்கு ஏக்கர் நிலமுடைய ஏழை விவசாயக் குடும்பம். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதியிலிருந்து மக்கள் கனடா மற்றும் அமெரிக்காவுக்குப் புலம்பெயரத் தொடங்கினர். அவர்கள் காவல் மற்றும் இராணுவத்திலும் சேர்ந்தனர், பலர் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சென்றனர். கனடாவில் இருந்த தர்ஷனின் மாமாக்களில் ஒருவரான ஹர்ஷ்லி, தர்ஷனைக் கனடா அனுப்பும்படி அவரது தந்தையை வற்புறுத்தினார். எப்படியோ 800 ரூபாயைத் திரட்டிய குடும்பம் தர்ஷனை அனுப்பி வைத்தது. நான்கு நாட்கள் பயணம் செய்து கல்கத்தா சென்றவர் பின்னர் சரக்கு வண்டியில் ஹாங்காங் சென்றார். அப்போது அவர் வயது 18. அது ஒரு கொடுமையான பயணம். அங்கிருந்து படகு எதுவும் கிடைக்காததால், மீன்பிடி மிதவை போன்ற சீன மரக்கலத்தில் சீற்றமான கடலில் ஐந்தாறு நாட்கள் பயணித்து ஷாங்காய் சென்றார். 1937 மார்ச் 13ல் வான்கூவர் வந்தடைந்தார்.
மாமா ஹர்ஷ்லி தான் பணி செய்து வந்த கபூர் லும்பர் கம்பெனியான மரவாடிக்கு அவரை அழைத்துச் சென்றார். ஷர்ஷனுக்கு வேலை வாங்கிக் கொடுத்த மாமா அவர் வேலையை இழந்தார்! இது பற்றி தர்ஷன் சிங் கூறுவார் “கபூர் சிங் எனக்கு ஒரு வேலை கொடுத்தபோது அவர் எனது மாமாவை வீட்டுக்கு அனுப்பி விட்டார். கபூர் சிங்கைப் பொருத்தவரை எனது மாமா பயன்படாத கிழக் குதிரை.” ஏனெனில் அவருக்கு 60 வயது, தர்ஷனுக்கு 20 மட்டுமே. எவ்வளவு கொடுமையாக இருக்க முடியுமோ அவ்வளவு மோசமான நிலையில் அவரது வேலை நிலைமை இருந்தது. பிறகு தர்ஷன், மரம் மற்றும் மரம் அறுக்கும் பல்வேறு ஆலைகளில் பணியாற்றினார். மரவாடித் தொழில் பல்லாயிரக்கணக்கானவர்களை மிக மோசமான நிலைகளில் பணியாற்ற வேலைக்கு அமர்த்தியது. வெள்ளைத் தொழிலாளர்களைவிட மற்ற தொழிலாளர்களுக்குச் சம்பளம் குறைவாகவே வழங்கப்பட்டது. பஞ்சாபி ஆலை முதலாளிகளும்கூட இந்தப் பாரபட்சத்தையே கடைபிடித்தனர்.
தொழிலாளர் இயக்கத்தில்
விரைவில் தர்ஷன் வான்கூவர் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். இளம் கம்யூனிஸ்ட் லீக் (YCL) அமைப்பின் உறுப்பினரானார். அவருக்குக் கனடா கம்யூனிஸ்ட் கட்சி செயற்பாட்டாளர்கள் போர்ஜன் சகோதரர்கள், எமில் மற்றும் பில் தொடர்பு ஏற்பட்டது.
வரலாற்றுப் புகழ் பெற்ற வான்கூர் உள்ளுர் குருத்துவாராவின் சமூகச் செயல்பாடுகளில் தர்ஷன் பங்கேற்று அங்கு இந்திய விடுதலை தொடர்பான பிரச்சனைகள் குறித்துப் பேசினார். விரைவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலிருந்து மற்றொரு பகுதியான அல்பெர்டாவுக்கு இராம் சந்தர் என்ற பெயரில், தனது உண்மையான அடையாளத்தை மறைத்துச் சென்றார். எட்மோன்டன் என்ற பகுதிக்கு வடக்கே 300 கிமீ தொலைவில் வின்ஃபீல்டு அருகில் ஒரு புதர் போன்ற இடத்தின் மேக்டௌகல் ஆலையில் பணியாற்றினார். அங்கே நிலைமை பொறுக்க முடியாத அளவு கடுமையாக, வடக்கில் 24 மணி நேரமும் குளிரான இடமாக இருந்தது. தர்ஷன் சிங், “அந்த இடத்தைக் கனடாவின் நரகம் என்றழைக்கலாம்” என்று சரியாகவே குறிப்பிட்டார்.
300க்கும் அதிகமான சட்டவிரோத புலம்பெயர்ந்தவர்களின் வழக்குகளை நடத்த டாக்டர் பாண்டியா என்ற இந்திய வழக்கறிஞருக்கு அவர் உதவினார். அவர்கள் ஒரு குழுவை அமைத்து புலம்பெயர்ந்தோர் சமூகத்தினரிடமிருந்து சுமார் 400 டாலர்கள் திரட்டினர். 1939ல் கனடாவில் 300க்கும் அதிகமான இந்தியர்கள் சட்டபூர்வ அந்தஸ்து பெற்றனர்.
கனடா இராணுவத்தில் இணைதல்
1939ல் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது, தர்ஷன் சிங் மற்றும் மற்றொரு இந்தியர் கிரிபூ முதல் இந்தியர்களாக இராணுவத்திலிருந்து நியமன உத்தரவு பெற்றனர். பொதுவாக இந்தியர்கள், வாக்குரிமை உட்பட பொது ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டதால், இராணுவத்தில் சேர்வதற்கு எதிராக இருந்தார்கள். ஆனால் தர்ஷன் ‘புரட்சிக்கு அது உதவக்கூடுவதாகும்’ என்று எண்ணினார். அவர் உள்ளத்தில் எதிர்காலம் குறித்த ஏதோ ஒரு திட்டம் இருந்தது.
அவர் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒகனாகன் என்ற இடத்தில் நான்கு மாத இராணுவப் பயிற்சிக்குச் சேர்ந்தார். பயிற்சியில் “நான் ஒருவன் மட்டுமே இந்தியன், மற்ற அனைவரும் வெள்ளையர்கள்” என அதை நினைவுக் குறிப்புகளில் குறிப்பிட்டார். அந்த இராணுவப் பயிற்சித் திட்டம் மிக மிகக் கடுமையானதாக இருந்தது.
தனது இடத்திற்குத் திரும்பியதும் வேறு யாரோ ஒருவரின் போரில் இறப்பதைவிட ஒருவன் தனது சொந்த நாட்டிற்காக உயிரை விடுவதே மேல் என அவர் உணர்ந்தார். இதன் விளைவாய் இந்தியாவுக்கு 1940 ஜூனில் கப்பல் ஏறி, அபி சாந்தனி என்ற சிந்திக்காரருடன் டோக்கியோவில் இடையே தங்கினார். ஹாங்காங் மற்றும் ஷாங்காயில் சில இந்தியர்கள் கைது செய்யப்படுவதாக அறிந்தார். எனவே டோக்கியோவிலிருந்து வான்கூவர் திரும்பியவர் மீண்டும் மரத் தொழிற்சாலைகளில் சுமார் ஆறு ஆண்டுகள் பணியாற்றினார்.
கனடா கம்யூனிஸ்ட் கட்சியில் இணைதல்
கனடாவின் தொழிற்சங்க இயக்கத்திலும் தர்ஷன் தீவிரமாகப் பங்கேற்றார். மரத்தொழில் மற்றும் கனடா தொழிற்சங்க இயக்கத்தின் சக்திமிக்க பிரிவான மர ஆலைத் தொழிலாளர்களின் சங்கங்களில் அவர் பணியாற்றினார். “பட்டினியின் 30கள்” (‘Hungry Thirties’) என்ற ஏழ்மை தலைவிரித்தாடிய (முதல் உலகப் போருக்குப் பின் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சி) காலத்தில் நடந்த 90 சதவீதமான வேலைநிறுத்தங்களைக் கனடா கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிலாளர்கள் ஒற்றுமை லீக் அமைப்பும் தலைமையேற்று நடத்தின. பிரிட்டிஷ் கொலம்பியாவில் கம்யூனிஸ்ட்கள் “அமெரிக்க சர்வதேசிய மரத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள்” (IWA) அமைப்பை நிறுவ முயற்சி மேற்கொண்டனர்.
ஏற்கனவே இளம் கம்யூனிஸ்ட் லீகுடன் தொடர்பில் இருந்த தர்ஷன், குல்தீப் சிங் பெயின்ஸ் மற்றும் ரத்தன் சிங் இருவருடன் 1939ல் கனடா கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். “முதற்கண் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரக் காரணம், நானே இந்தியாவிலிருந்து சோஷலிச இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டவன் …பின்னர் அடுத்த விஷயம் …இந்திய விடுதலைக்குக் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஆதரவளித்தது” என்பதே என்று கூறினார்.
தர்ஷன் சிங் ‘கனடியன்’ என்று பிரபலமானார். யாருமே அவரைத் தர்ஷன் அல்லது சிங் அல்லது சங்கா என்று அழைக்கவில்லை. பின்னர் பஞ்சாப் சட்டமன்றத்தில்கூட ‘கனடியன்’ என்றே அவர் புகழ்பெற்றார்! அவர் கூறுவார்: எனக்கு இரண்டு தாய் நாடுகள், கனடா மற்றும் இந்தியா! “நான் எந்த அளவு இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிறேனோ அதேபோல கனடா நாட்டின் பகுதியாகவும் நான் இருப்பதாக உணர்கிறேன்“
கனடா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் க்ரைக் பிரிட்செட் கூறியபடி, “தொழிற்சங்கத்திலும் கட்சியிலும் தர்ஷன் சிங் மிக முக்கியமான பங்கு வகித்தார், அதன் முக்கியமான காரணம் அவர் மிகச் சிறந்த சொற்போழிவாளர் என்பது. அவருக்கு ஆங்கில மொழியில் தேர்ந்த பயிற்சியும் ஆளுமையும் இருந்தது.” கனடா கம்யூனிஸ்ட் கட்சி தர்ஷன் சிங்கை நாடு முழுவதும் சொற்பொழிவாற்றும் பிரச்சாரப் பயணம் அனுப்பியது. நிகெல் மோர்கன், ஹர்ஓல்டு பிரிட்செட் மற்றும் பிறருடன் அவரும் கனடா தேசம் முழுவதும் பெரும் பணியாற்றினார். மோர்கன் அவரிடம் குறிப்பாக இந்திய, சீன மற்றும் ஜப்பானிய தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்ள உதவும்படி வேண்டிக் கொண்டார்.
1945ல் யூபௌ என்ற இடத்தின் தொழிற்சாலையில் நடந்த நிகழ்வு ஒன்று தர்ஷனின் புகழை எடுத்துக் காட்டும். தொழிலாளர்களின் சிறிய வீடுகள் (பங் ஹவுஸ்) அமைந்த அவர்களின் இருப்பிடத்தில் தொழிலாளர்களின் கூட்டத்தை நடத்துவது எளிய பணியாக இல்லை. தர்ஷனை உள்ளே நுழைய அனுமதி மறுத்து வெளியேறும்படி கூறியபோது, கொட்டும் மழையில் 80க்கும் அதிகமான தொழிலாளர்கள் அவருக்குப் பாதுகாப்பு அரணாகச் சூழ்ந்து கொண்டு சூப்பரின்டெண்டிடம் அவர்கள் தர்ஷனைத் தொட்டால் நாங்கள் வேலைகளிலிருந்து விலகி விடுவோம் என்று மிரட்டிய பிறகு, தர்ஷன் தன் கூட்டத்தைத் தொடர்ந்தார். இந்த நிகழ்வு பரவலாகி பெரும் பலனளித்தது.
குருத்துவாராக்களில் தர்ஷன் பல கூட்டங்களை நடத்தி இந்தியர்கள் மத்தியில் விடுதலை இயக்கம் மற்றும் உள்ளூர் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஹர்ஓல்டு பிரிட்செட் மற்றும் நாகிந்தர் சிங் கில் இருவருடன் அவர் 1943ல் விக்டோரியாவில் மாகாண அரசுடன், சம உரிமைகளை வலியுறுத்த, ஒரு குழுவைத் தலைமை தாங்கி அழைத்துச் சென்றார். இறுதியில் அந்த உரிமை 1946ல் வென்றெடுக்கப்பட்டது. ஒரு பேட்டியில் தர்ஷன் கூறினார்: “மீண்டும் அதே ஆண்டுதான் நாங்கள் தொழிற்சாலைகளின் முழுமையான மாபெரும் வேலை நிறத்தத்தை சில அடிப்படை கோரிக்கைக்காகச் சுமார்40 நாட்கள் நடத்தினோம்.” மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து குவிந்தனர்.
பஞ்சாபியர்கள் கனடா வந்தடைந்தபோது அவர்களுக்கு ஓட்டு உரிமை இருந்தது, ஆனால் 1907ல் அது பறிக்கப்பட்டு விட்டது.
விடுதலை இயக்கங்கள் குறித்து 1945 –46ல் தர்ஷன் சிங் “ஆசியாவின் எழுச்சி” என்றொரு புத்தகம் எழுதினார். டொராண்டோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட அந்நூல் கனடாவின் டாக்டர் நார்மன் பெத்துன் மற்றும் இந்தியாவின் டாக்டர் துவாரகா தாஸ் கோட்னீஸ் இருவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. அவர்கள் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துச் சீன மக்களுக்காகப் போராடித் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்கள் ஆவர்.
இந்தியா திரும்பல்
தர்ஷன் சிங் 1947 டிசம்பர் 16ல் இந்தியா திரும்பினார். இதை விளக்கும்போது அவர், “கனடாவைவிட இந்தியாவுக்கு நான் அதிகமாகத் தேவைப்பட்டேன்” என்று கூறினார். அங்கே அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருந்தன, தீவிரமான அரசியல் பணியும் செய்து கொண்டு இருந்தார். என்றாலும், எதையோ இழந்தது போன்ற அழுத்தமான உணர்வு, அது அவர் இந்தியா திரும்பியே ஆக வேண்டும் என்றது. இந்தியாவில் மக்களுக்கு உண்ணப் போதுமான உணவில்லை என்பதை அறிவார். “நான் அந்த நேரங்களை அறிவேன், அப்போது நாங்கள் புல் விதைகளை உண்டு வாழ வேண்டிய நிர்பந்தம், கோதுமை அல்லது அரிசி அல்லது வேறு எதுவும் இல்லை. மாதக்கணக்கில் ஒரு துளி சக்கரைகூட கிடைக்காத தருணங்களை நானறிவேன்.“ இந்திய மக்கள் கூட்டத்திடையே வாழ்ந்து அவர்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற பலமான உந்துதல் அவருக்கு ஏற்பட்டது. இது அவரைத் தனது கனடா தோழர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு இந்தியாவுக்குப் புறப்படச் செய்தது.
இந்தியா திரும்பிய உடன் அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஆஜர் ஆனார். இரண்டு மாதங்களுக்கு அவர் சுற்றித் திரிந்து நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொது மக்களைச் சந்தித்தார். 1948 மார்ச் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற சிபிஐ இரண்டாவது கட்சிக் காங்கிரஸில் கலந்து கொண்டார், அந்த மாநாட்டில்தான் பிடிஆர் பாதை ஏற்கப்பட்டது. கட்சிக் காங்கிரசுக்குப் பிறகு அவர் தலைமறைவாகி, அப்படித் தலைமறைவாகவே ஐந்தாண்டுகள் இருந்தார். லூதியானாவில் சிபிஐ அலுவலகத்தைப் போலீஸ் தீடீர் சோதனையிட்டதில் அவர் மட்டுமே தப்பினார். தலைமறைவு வாழ்வில் அவரது பெயர் ‘கரம் சந்த்’.
தர்ஷன் சிங் ஜலந்தர் மாவட்டக் கட்சிச் செயலாளராகி, அப்பொறுப்பில் 13 ஆண்டுகள் செயல்பட்டார். பிந்தைய ஆண்டுகளில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான காங்கிரஸ் கட்சியின் ஸ்வரண் சிங்கை எதிர்த்து 1957 தேர்தலில் கட்சி அவரை வேட்பாளராக நிறுத்தியது. தர்ஷன் சிங் தோற்கடிக்கப்பட்டாலும், அவர் 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.
1963ல் அவர் தனது குடியிருப்பை அவரது சொந்த கிராமம் இருந்த ஹோஷியாபூர் மாவட்டத்திற்கு மாற்றிக் கொண்டார். 1967 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு 14ஆயிரம் வாக்குகள் பெற்றபோது, எதிர்த்துப் போட்டியிட்டவர் 20ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதே தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு 800 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அந்தத் தோல்வி நடைமுறை தவறின் காரணமாக அவருக்கு 3900 வாக்குகளை இழக்கச் செய்தது. ஆனால் அவர் 1972 சட்டமன்றத் தேர்தலில் 24ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மிகக் கடினமான நிலைகளில் அவர் 1977 தேர்தல்களில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருமணம் மற்றும் குடும்பம்
தர்ஷன் சிங் கனடியன் 1950ல் புரட்சிகரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணான ஹர்பன்ஸ் கௌர் என்பரைத் திருமணம் செய்து கொண்டார். அவரது தந்தை மற்றும் தாத்தா சிபிஐ உறுப்பினர்கள், கதர் இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள். ஹர்பன்ஸ் தர்ஷன் சிங்குக்குப் பெரிதும் உதவியாக இருந்தார். 1948லிருந்து 1963வரை கட்சி வழங்கிய மாத ஊதியம் ரூபாய் 30லிருந்து 80வரை மட்டுமே பெற்று தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். ஐந்து உறுப்பினர்கள் கொண்ட அவரது குடும்பத்திற்கு நண்பர்களும் தோழர்களும் உதவினர். 1963லிருந்து தர்ஷன் தனது தந்தையின் நிலத்தை மேம்படுத்திக் கூடுதல் வருமானத்திற்கு வழி செய்தார், ஹர்பன்ஸும் 14 மணி நேரம்வரை வயலில் பாடுபட்டார். பயிர்களைப் பார்த்துக் கொண்டதுடன் கால்நடையைப் பராமரித்து அவர் பால் விற்பனை செய்தார்.
கட்சி மற்றும் பிற அமைப்புப் பொறுப்புகள்
சிபிஐ மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்ததுடன் தர்ஷன் சிங் பஞ்சாப் கிசான் சபா செயலாளர், தேசியக் குழு உறுப்பினர் (1963–77), பஞ்சாப் மாநிலக் கட்சி உதவிச் செயலாளர் (1966 –68), பஞ்சாப் மாநிலச் செயலாளர் (1968 –71) ஆகிய பல பொறுப்புக்களில் செயல்பட்டார்.
அவரது கிராமத்திற்கு அருகே கண்டி என்ற இடத்தில் நன்கு செயல்படும் மருந்தகம் ஒன்றைக் கட்டினார்.
1964ல் சோவியத் யூனியனிலிருந்து திரும்பும் வழியில் தர்ஷன் மீண்டும் கனடா விஜயம் செய்து அங்கே இரண்டு மாதங்கள் தங்கினார். இந்தியாவில் கிராமம் கிராமமாக அவர் நடந்தே செல்வதை அறிந்த அவரது கனடிய தோழர் எர்லிங் ஜர்னாசன் (Erling Bjarnason) அவருக்காக ஒரு சைக்கிளை இந்தியாவுக்கு அனுப்பினார். அவரது புத்தகம் ஒன்றின் பின் அட்டையில் இருந்த அவருடைய போட்டோவின் அசல் நெகடிவ் பிலிம் வான்கூவருக்கு மாறிய ஒரு புகைப்படக் கலைஞரிடம் தேடிக் கண்டடையப்பட்டது. அவருடைய குழந்தைகள் தனது தந்தையின் இளமைக்காலப் போட்டோக்களைப் பார்த்தது இல்லை. போட்டோவின் அந்த நெகடிவ் பிரதியை அவருக்கு இலசமாகக் கொடுத்தார்.
இறுதி ஆண்டுகளும் படுகொலையும்
தர்ஷன் சிங் கனடியன் தனது இறுதி ஆண்டுகளில் எழுதுவதற்கு விரல்களை அசைக்கக்கூட முடியாத அளவு, மிகவும் உடல்நலம் குன்றி இருந்தார். சிறிது தேறியதுமே தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்து விடுவார். அமிர்தசரஸ் மற்றும் மோகா போன்ற இடங்களில் (பஞ்சாப்) தீவிரவாதிகளின் பலம்பொருந்திய இடங்களிலேயே கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்றினார், தோழர்களையும் கட்சியையும் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்தார். ஆனால் அவர் தன்னைப் பற்றி கவலைப்பட மாட்டார். அவர் படுகொலை செய்யப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்புதான் அவர் டெல்லியில் இருந்தார்.
1986 செப்டம்பர் 24ல் அமிர்தசரஸ் மாவட்டம் ரய்யா என்ற இடத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். கூட்டம் முடிய தாமதமானதால் தோழர்கள் அவரை அங்கேயே தங்கி மறுநாள் புறப்படலாம் என்றனர். ஆனால் அபாயத்தைப் புறக்கணித்து மகில்பூருக்கு (ஜலந்தர்) பேருந்தில் புறப்பட்டார். மறுநாள் செப்டம்பர் 25 சில உறவினர்களைப் பார்த்துவிட்டு, ஆபத்துக்களைக் குறைத்து மதிப்பிட்டு, சைக்கிளில் லங்கேரி புறப்பட்டார். மற்ற தோழர்களும் அது தீவிரவாதம் குறைவான இடம் என்று குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். ஆனால் மறைவிடத்திலிருந்து திடீரென்று தாக்கிய தீவிரவாதக் கொலையாளிகள் மிக நெருக்கத்தில் அவரைச் சுட்டுக் கொன்றனர். காவலர்கள் அறிக்கைகளைப் புறக்கணித்து மணிக் கணக்கில் தாமதமாக வந்தனர். செய்தி அறிந்து ஆயிரக் கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகில்பூர் போலீஸ் நிலையத்தில் குவிந்து ஹோஷியார்பூர் செல்லும் வழியை மறித்தனர். செப்டம்பர் 26ல் தர்ஷனின் மகில்பூர் கிராமத்தில் பிரம்மாண்டமான அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
அவரது புகழுடம்பு முழு அரசு மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.
கனடா முழுமையும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியது. கனடா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எமில் ஜார்னாசன் தலைமையில் நடந்த பெரும் அஞ்சலிக் கூட்டத்தில், பிந்தைய ஆண்டுகளில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரதமரான உஜல் தோசான்ஞ் (Ujjal Dosanj) உள்ளிட்டோர் உரையாற்றினர். மௌரிஸ் ரஷ், ஹேரி ரன்கின், க்ளே பெரி, எமில் ஜார்னாசன் முதலான பலர் இரங்கற் கூட்டங்களில் பங்கேற்றனர்.
ஒவ்வொரு வகையிலும் தனித்துவமான தர்ஷன் சிங் ‘கனடியான்’ நினைவுகள் நீடு வாழி!
— நன்றி : நியூஏஜ் (ஜூன் 19 –25)
— தமிழில் : நீலகண்டன், என்எப்டிஇ, கடலூர்