தமிழ்நாட்டில் மேலும் 6 சுங்கச்சாவடிகளா? மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் மேலும் 6 சுங்கச்சாவடிகளா?
மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் :
தமிழ்நாட்டில் மேலும் 3 நெடுஞ்சாலைகளில் புதிதாக 6 சுங்கச்சாவடிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைக்கவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், புதிய சுங்கச்சாவடிகளை அமைப்பது தமிழகத்தின் வளர்ச்சியை பாதிக்கும்; இதை ஏற்கமுடியாது.
தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் விழுப்புரம் -வேலூர் இடையிலான 121 கி.மீ தொலைவும், கடலூர் – விருத்தாசலம் – சேலம் இடையிலான 92 கி.மீ தொலைவும், அவினாசி – அவினாசி பாளையம் இடையிலான 33 கி.மீ தொலைவும், தஞ்சாவூர் – பெரம்பலூர் இடையிலான 66 கி.மீ தொலைவும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் இருந்து வந்தன. மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் நிதியுதவியுடன் இந்த சாலைகள் 4 வழிச் சாலைகளாகவும், இரு வழிப் பாதைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து இந்த தேசிய நெடுஞ்சாலைகள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதல் இரு சாலைகளில் தலா இரு சுங்கச்சாவடிகள், அடுத்த இரு சாலைகளில் தலா ஒரு சுங்கச்சாவடி என்று மொத்தம் 6 சுங்கச்சாவடிகள் புதிதாக அமைக்கப்படவுள்ளன. இந்த சாலைகளில் மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்ட பிறகு 6 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைகளை போக்குவரத்துத் தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்துவதும், விரிவாக்குவதும் மத்திய நெடுஞ்சாலைத் துறையின் கடமை. இது நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செய்ய வேண்டிய பணியாகும். தேசிய நெடுஞ்சாலையை இருவழிப் பாதையாக மாற்றியதற்காக சுங்கக்கட்டணம் வசூலிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. தேசிய நெடுஞ்சாலைகளையும், மாநில நெடுஞ்சாலைகளையும் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துவதற்காகத் தான் அனைத்து வாகனங்களிடமும் சாலை வரி வசூலிக்கப் படுகிறது. அதுமட்டுமின்றி பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ரூ.18 சாலை மற்றும் உட்கட்டமைப்பு கூடுதல் தீர்வையாக வசூலிக்கப்படுகிறது. சுங்கக்கட்டண வசூல் மூலம் கிடைப்பதை விட, கூடுதலான வருவாய் இந்த வரிகள் மூலம் கிடைக்கிறது. அவ்வாறு இருக்கும் போது புதிய சுங்கச்சாவடிகளைத் தொடங்கி அவற்றின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே செல்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் சுங்கச்சாவடிகள் உள்ளன. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 800-க்கும் கூடுதலான சுங்கச்சாவடிகள் இருந்தாலும், அவற்றில் 566 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றில் 48 சாவடிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இப்போது புதிதாக திறக்கப்படுபவற்றையும் சேர்த்தால் தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 54 ஆக உயரும். இது இந்தியா முழுவதும் கட்டணம் வசூலிக்கப்படும் சுங்கச்சாவடிகளில் 10 விழுக்காடு ஆகும். ஒரு நாட்டின் சுங்கச்சாவடிகளில் 10% ஒரே மாநிலத்தில் பெரும் அநீதி; சட்டத்தை மீறிய செயலாகும்.
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 1800 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகள் சுங்கச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5324 கீ.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகளில் 5134 கி.மீ நீள சாலைகள், அதாவது 96.43% சுங்கச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. அதேநேரத்தில் தேசிய அளவில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 51,019 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகளில் 29,666 கி.மீ நீள சாலைகளுக்கு, அதாவது 19.64% சாலைகளுக்கு மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேசிய அளவில் 19.64% தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 96.43% தேசிய நெடுஞ்சாலைகளுக்கு கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?
2008-ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைகள் சுங்கக்கட்டணம் நிர்ணயம் மற்றும் வசூல் விதிகளின்படி இரு சுங்கச்சாவடிகளுக்கு இடையில் குறைந்தபட்சம் 60 கி.மீ தொலைவு இருக்க வேண்டும். அதன்படி கேரளத்தில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை மூன்றாக குறைக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டிலும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 16 ஆக குறைக்கப்பட வேண்டும் என்று மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு சட்டப்பேரவையிலேயே அறிவித்துள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் தமிழ்நாட்டில் புதிய சுங்கச்சாவடிகளை மத்திய அரசு அமைக்கவிருப்பது கண்டிக்கத்தக்கது; இது தடுக்கப்பட வேண்டும்.
சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையும், சுங்கக்கட்டணமும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால் தமிழ்நாட்டில் அத்த்யாவசியப் பொருட்களின் கடுமையாக உயரும்; மாநிலத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். எனவே, தமிழ்நாட்டில் புதிதாக 6 சுங்கச்சாவடிகளை திறக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் இப்போது உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சாவடிகளை மூடி 16 ஆக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.!
ALSO READ : ஆளுங்கட்சி அராஜகம் : கமல்ஹாசன் குற்றச்சாட்டு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!