தமிழ்நாட்டில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்ய வருகை தரும் மத்திய குழு அறிவிப்பு

தமிழ்நாட்டில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்ய வருகை தரவுள்ள மத்திய குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக விளை நிலங்கள் மற்றும் சாலைகள் போன்றவை வெகுவாக சேதமடைந்துள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்ய வருகை தரவுள்ள மத்திய குழு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில் குழுவினர் உடனடியாக தமிழகம் வருகின்றனர். இந்த குழுவில் விவசாயம், உழவர் நலன், நிதி, நீர்வளம், மின்சாரம், சாலை போக்குவரத்து, ஊரக வளர்ச்சி ஆகிய 6 முக்கியத் துறைகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நாளைய தினமே தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த குழுவிடம் உரிய விவரங்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குழுவினர் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்து ஒரு வாரத்தில் மத்திய உள்துறைக்கு அறிக்கை அளிப்பர். இந்த ஆய்வு முடிவில் கொடுக்கும் அறிக்கையைப் பொருத்துதான் தமிழகத்திற்கு மத்திய அரசின் நிதி எவ்வளவு என்று நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.