கட்டுரைகள்

தமிழ்நாடு என்று பெயர்வரக் காரணமானவர்..!

நீ.சு. பெருமாள்

“இந்தத் தீர்மானத்தை உணர்ச்சி பூர்வமாக, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆதரிக்கிறேன். என் ஆழ் மனதில் உள்ள கோரிக்கை இன்றுதான் நிறைவேறுகிறது. திமுக ஆட்சியில் தான் இந்தத் தீர்மானம் வர வேண்டும் என்று கடவுள்தான் முடிவு செய்துள்ளார் போலும். காங்கிரஸ் கட்சியினர் 10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு என்று பெயர் வைத்திருந்தால் அந்தக் கட்சியின் நிலைமையே வேறாக இருந்திருக்கும். மாண்புமிகு முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் இந்தத் தீர்மானத்தை வாசித்து முடித்தபோது, என் இருக்கையில் இருந்து எழுந்துபோய் சென்று உடனடியாக கட்டித் தழுவி வாழ்த்த நினைத்தேன்” என்று ஜுலை 18-ல் 1967 ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றியவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம். இவர் குறிப்பிட்ட அந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இதே கோரிக்கையினை முன்வைத்து 70 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தவர் தியாகி சங்கரலிங்கனார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராக இருந்தவர் தியாகி சங்கரலிங்கனார். திருச்செங்கோடு ராஜாஜி ஆசிரமத்தில் தங்கி நெடுநாள் வாழ்ந்தவர். 1956 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் 12 கோரிக்கைளை முன் வைத்து அன்றைய முதலமைச்சரான காமராசருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மகஜர் ஒன்றை சங்கரலிங்கனார் அனுப்பி வைக்கிறார். ஜனாதிபதி, கவர்னர் பதவிகளை ஒழிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் கதராடை மட்டுமே அணிய வேண்டும், இந்தியா முழுக்க மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், இந்தியாவில் ஓடும் ரயில்களில் அனைத்து மக்களும் ஒரே வகுப்பில் சமமாகப் பயணம் செய்ய வேண்டும், வெளிநாட்டு விருந்தினர்களுக்கு ஆடம்பரம் இல்லாத சைவ உணவுகளைக் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளின் வரிசையில் முக்கியமானதாக, சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் அதில் இருந்தது. மகஜர் வழங்கிய பிறகு எந்த ஒரு பதிலும் இல்லாத சூழலில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஜூலை 27-ல் 1956 ஆம் ஆண்டில் தொடங்குகிறார். இந்த உண்ணாவிரதப் போராட்டம் நெடுநாளைய போராட்டமாக இருக்கும் என்பதை உணர்ந்த சங்கரலிங்கனார். பொதுமக்கள் யாருக்கும் தொந்தரவில்லாத விருது நகருக்கு வெளியில் காட்டுப் பகுதியாக இருந்த சூலக்கரை என்னும் இடத்தில் குடிசை ஒன்றை அமைத்து, மறவாமல் அந்தக் குடிசையின் மீது தான் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் கொடியினையும் ஏற்றிவைத்து போராட்டத்தை துவங்குகிறார். கோரிக்கைகளில் இருந்த நியாயங்களை உணர்ந்து கொண்ட அன்றைய சட்டமன்ற எதிர்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு வருகின்றனர். “உங்களின் கோரிக்கைகளை நாம் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். அதற்காக நீங்கள் மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது சரியல்ல. குறைந்தபட்சம் போராட்ட இடத்தையாவது மாற்றுங்கள் என்கின்றனர். வேண்டுகோளை ஏற்று தன்னுடைய போராட்டத்தை விருதுநகர் முத்துமாரியம்மன் கோயில் அருகில் இருக்கும் திடலுக்கு மாற்றிக் கொள்கிறார் சங்கரலிங்கனார்.
நாட்கள் நகர்ந்து வாரங்கள், மாதங்கள் என உண்ணாவிரதப் போராட்டம் நீள்கிறது. மக்கள் அதிக அளவில் உண்ணாவிரதப் பந்தலுக்கு வருகை தந்து ஆதரவு தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் கட்சிக் கொடியை உண்ணாவிரதப் போரட்டகளத்தில் வைத்துக் கொண்டே காமராஜரை எதிர்ப்பது குறித்து காங்கிரஸ் கட்சி ஆத்திரம் கொள்கிறது. சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு நேர் எதிரில் வந்து, லட்டு, அல்வா போன்ற திண்பண்டங்களை எறிந்து அவமானப்படுத்துகின்றனர்.
ஒரு கட்டத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் சங்கரலிங்கனார் உயிருக்கு ஆபத்தாகப் போகிறது என்கிற நிலை நெருங்குகிற நேரத்தில், அன்றைய எதிர்கட்சித் தலைவர் பி.ராமமூர்த்தி நேரிடையாக உண்ணாவிரதப் பந்தலுக்கு வருகிறார். “மாகாணம் முழுவதிலும் மக்களைத் திரட்டிப் போராடுவோம். உங்களின் உயிர்வலி எங்களுக்கு வேதனையைத் தருகிறது. தயவு செய்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுங்கள்” என்கிறார் பி.ஆர்.
“வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்கிற பெயருடன்தான் செயல்பட்டோம். இப்போது மொழிவாரி மாநிலமாகப் பிரிந்த நிலையில், தமிழர்கள் வாழும் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று ஏன் பெயர் வைக்கக் கூடாது?! அரசியல் சட்டத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றுதான் உள்ளது அதனைத் திருத்துவது கடினம் என்கிறார்கள். நாம் உருவாக்கிய அரசியல் சட்டம் தானே அதுவும் காமராசர் சொன்னால் நேரு செய்யமாட்டாரா?” என நீண்ட நெடிய உரையாடலை பி.ஆர் அவர்களுடன் நடத்துகிறார் சங்கரலிங்கனார்! இருந்த போதிலும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார்.
தட்சிணப் பிரதேசங்கள் என இந்தியாவை பிரதேச வாரியாக பிரிக்க நேரு முயற்சி எடுத்தபோது, அப்படிப் பிரிக்க வேண்டாம். இந்த மாதிரியான பிரிவினைகள் வீணான குழப்பத்திற்குத்தான் வழிவகுக்கும் என காமாசர் சொன்னதும் நேரு கை விட்டார் என்பதும் அன்றைய சம காலத்து வரலாற்றுச் செய்தி.
அதைத்தான் சங்கரலிங்கனார் சுட்டிக்காட்டி, காமராசர் நினைத்தால் தமிழ்நாடு என பெயர் வைக்க முடியாதா? என்று மறைமுகமாக பி.ஆரிடம் கேட்டிருந்தார்.
உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடும் முயற்சியில் பி.ஆர் தோற்றுப் போன நிலையில் அண்ணா களத்திற்கு வருகிறார். எதிர்கட்சிகள் எல்லாமே தங்களின் கோரிக்கையை ஆதரிக்கிறோம். உங்கள் உயிர் எங்களுக்கு முக்கியமானது. எதிர்காலத்தில் நாம் எல்லாம் இணைந்து கோரிக்கைகளை வென்றெடுப்போம் என்று அண்ணா வலியுறுத்துகிறார்.
என் உயிர் போனால்தான் கோரிக்கைகள் நிறைவேறும் என்றால் அதற்காக நான் கவலைப்படுவதாக இல்லை என்று கனத்த இதயத்துடன் சங்கரலிங்கனார் அண்ணாவிடமும் மறுதலித்துப் பேசுகிறார். இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகியது. பத்திரிக்கையாளர்கள் காமராசரை நெருங்கி சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து கேள்விகள் கேட்கின்றனர். “நான் என்ன செய்ய முடியும் அவர் வைத்த 12 அம்ச கோரிக்கைகளில் 10 கோரிக்கைகள் மத்திய அரசைக் சார்ந்தது. வேறொன்றும் சொல்வதற்கில்லை என்று சொல்லி விட்டுப் புற்ப்பட்டுப் போகிறார்.
ஒருபக்கம் தியாகி சங்கரலிங்கனாரின் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. இருந்த போதும் சளைக்காமல் அரசாங்கத்திற்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதங்களை எழுதிக் கொண்டே இருந்தார். அரசு எதையும் செவி சாய்க்காத நிலையில் கடைசியில் மரண வாக்குமூலம் என்னும் தலைப்பில் ஒரு கடிதம் எழுதுகிறார் சங்கரலிங்கனார். இந்தப் போராட்டத்தின் முடிவு என்பது என் மரணமாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஒரு வேளை அப்படி மரணமடைந்து விட்டால் என்னுடைய உடலை இன்றைய எதிர் கட்சியான கம்யூனிஸ்ட்டுகளிடம் ஒப்படைத்து விடுங்கள். என்னுடைய இறுதி அடக்கத்தை தோழர்கள் செய்யட்டும் என்று எழுதினார். இதை எழுதிய இரண்டொரு நாட்களில் மயக்க நிலைக்குச் செல்கிறார் சங்கரலிங்கனார். அக்டோபர் 10 ஆம் தேதியன்று மயங்கிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட மூன்றாவது நாளில் சுயநினைவிற்கு வராமலேயே, கோரிக்கைகள் ஏதும் நிறைவேறாத ஏக்கத்துடன் தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் அனல் மூச்சு நின்று போகிறது. கடைசியாக அவர் அளித்த மரண வாக்குமூலத்தின்படி சங்கரலிங்கனாரின் உடலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களான கேடிகே தங்கமணி மற்றும் கே.பி.ஜானகி அம்மாள் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று கையெழுத்திட்டு பெற்றுக் கொள்கின்றனர்.
விருதுநகர் சூலக்கரையில் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் மதுரை தத்தனேரி இடுகாட்டில் தீக்கிரையாகி முடிந்து போனது!
சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளில் இருந்த நியாயங்களை ஏற்று அனைத்து கட்சிகளின் அமைப்புகளும் தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்து காங்கிரஸ் அரசிற்கு அழுத்தம் தரப்பட்ட சூழலில் தவனை முறையில் பெயர் மாற்றத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது.
1961 பிபிரவரியில் தமிழில் சென்னை ராஜ்ஜியம் என்பதற்குப் பதிலாக தமிழ்நாடு என்று எழுதிக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் எழுதும்போது மட்டும் மெட்ராஸ் என்று எழுதினால் போதும், எனவே இனிமேல் தமிழ்நாடு சர்க்கார், தமிழ்நாடு சட்டசபை என்றே அழைக்கப்படும். அரசியல் சட்டத்தில் ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்று இருப்பதை மாற்றவும் தேவையில்லாமல் இதை அமல்படுத்துகிறோம் என்று அன்றைய நிதி அமைச்சர் சி.சுப்ரமணியம் பேசினார்.
ஆனாலும் சங்கரலிங்கனார் தியாகியின் கனவுகள் வீண் போகவில்லை. 11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா முதல்வரான உடன் மெட்ராஸ் ஸ்டேட் என்று ஆங்கிலத்திலும், சென்னை மாகாணம் என தமிழிலும் அழைக்கப் படுவதை மாற்றும் வகையில் ஆங்கிலத்திலும், தமிழிலும் தமிழ்நாடு என்றே அழைக்கப்படும் என்கிற வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் முதலமைச்சராக இருந்த அண்ணா முன்மொழிந்தார்.
காங்கிரஸ் உள்ளிட்ட அனைவருமே வழிமொழிந்து ஆதரித்தனர். ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தை அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் ஏற்றுக் கொண்டு அரசியல் சட்டத்தில் இருந்த மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று திருத்தம் செய்தார். தமிழ்நாடு என்கிற பெயரை மிக எளிதாக காமராசராலும் செய்திருக்க முடியும். ஆனால் காலம் அண்ணாவைத்தான், காத்திருந்து பெயர் மாற்ற வரலாற்றிற்கு சொந்தம் கொண்டாடியது. “நான் டெல்லி செல்கிற போதெல்லாம் சவாண் என்கிற அமைச்சர் மிஸ்டர் மதராசி என்றுதான் என்ணை அழைப்பார். இந்தத் தீர்மானத்திற்குப் பிறகு என்னை மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள யாரையும் மதராசி என்று அழைக்க முடியாது என்று நினைக்கையில் பூரிப்படைகின்றேன்.”என மகிழ்ச்சியுடன் தீர்மானத்தின் மீது நன்றி தெரிவித்துப் பேசினார் அண்ணா. ஆம்…. நவம்பர் 1 தமிழ்நாடு தினம் எனப் பெயர் சூட்டி கொண்டாட நினைப்பது மேற்ச் சொன்ன வரலாற்றுச் செய்திகளை மறப்பதற்கு சமமானது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button