தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து திரு ரவியைத் திரும்பப் பெற வேண்டும்! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு தீர்மானம்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டம் பிப்ரவரி 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று நாட்கள் புதுச்சேரியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் வனஜா, பஞ்சாப் மாநில குழு செயலாளர் தோழர் பந்த் சிங் பிரார், புதுச்சேரி மாநில குழு செயலாளர் தோழர் ஏ.எம்.சலீம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி போக்குகள் குறித்த வரைவு அறிக்கையையும், அமைப்பு நிலை பணிகள் மற்றும் வருங்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பரப்புரைகளுக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தார்.
வரைவு அறிக்கையில் பா.ஜ.க அரசாங்கத்தின் மக்கள் விரோத, அரசியல் அமைப்பு விரோத நடவடிக்கைகளை கட்சியின் பொதுச் செயலாளர் அம்பலப்படுத்தினார். 9 ஆண்டுகால பா.ஜ.க தலைமையிலான மோடி ஆட்சியில் இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டு இருக்கிறது; சாதிய கொடுமைகள், சிறுபான்மையினர் மீதான பாகுபாடுகள் அதிகரித்துள்ளன. மோடி ஆட்சியின் கூட்டாட்சி முறைக்கு எதிரான போக்கினை அம்பலப்படுத்திய அவர், 2023-24 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையைக் கடுமையாக விமர்சித்தார். சமூக நலத்துறை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு இருப்பது பா.ஜ.க ஆட்சி மற்றும் அதன் அமிர்த காலத்தின் முன்னுரிமைகளை வெளிப்படுத்துகிறது. வேலையின்மை, விலையேற்றம் ஆகிய பிரச்சனைகள் குறித்து மோடி அரசாங்கம் அக்கறை கொள்வதில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போன்ற முக்கியமான திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிக அளவில் குறைக்கப்பட்டுள்ளதை கட்சியின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போருக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்பதை அவர் தெளிவுபடுத்தினார். நேட்டோ அமைப்பின் மூலமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தப் பிரச்சனையில் தலையிடுவது, போர் மேலும் தீவிரமடைய வழிவகுத்திடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மார்க்சிய சித்தாந்தத்தின் மீது அவதூறு கருத்துகளை வெளியிட்ட தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என். ரவியைக் கண்டித்தும், ஆளுநர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தீர்மான விவரம் பின்வருமாறு:
மார்க்சிய சித்தாந்தத்தின் மீது அவசியமற்ற, அவதூறு கருத்துகளை வெளியிட்ட தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என். ரவியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து திரு ரவியைத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு இந்திய குடியரசுத் தலைவரை வற்புறுத்துகிறது.
தீன் தயாள் உபாத்யாயாவின் நூலகள் (தமிழ் மொழிபெயர்ப்பு) வெளியீட்டு நிகழ்ச்சியொன்றில் பேசிய திரு ரவி, இந்தியாவின் வளர்ச்சியை மார்க்சிய சித்தாந்தம் சிதைத்தது என்று கூறியுள்ளார். மேலும், டார்வினின் பரிணாமத் தத்துவத்தை அறிவியலுக்கு விரோதமானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
திரு ரவியின் இத்தகைய பகுத்தறிவுக்கு ஒவ்வாத, அறிவியலுக்கு எதிரான, தேவையற்ற கருத்துகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கடுமையான ஆட்சேபத்தைப் பதிவு செய்கிறது. கம்யூனிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்திடவும், அறிவியல் மனப்பான்மையின் வளர்ச்சிப் போக்கிற்கு முட்டுக்கட்டை போடவும் இது போன்ற திட்டமிட்ட பரப்புரைகளை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க அணி செய்து வருகிறது.
தான் வகித்து வரும் ஆளுநர் பதவிக்குக் களங்கத்தை உண்டாக்கும் வகையில், திரு ரவி மேற்கொண்டு வரும் அத்துமீறிய நடவடிக்கைகளை தேசியக் குழு தீவிரமாக கவனத்தில் கொள்கிறது. ஒரு ஆளுநராக, அவர் தனது கடமைகளை நிறைவேற்றுவதில்லை. மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய 15 மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இந்துத்துவ சித்தாந்தத்தைப் பரப்பும் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் போலவே அவர் செயல்பட்டு வருகிறார். ஒருபுறம், மாநிலங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை நிலைகுலைப்பதற்காகவும், மற்றொரு புறம் இந்துத்துவ சித்தாந்தத்தைப் பரப்புவதற்காகவும், பா.ஜ.க ஆளுநர் பதவியின் அதிகாரங்களைத் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, முற்போக்கு திராவிட பண்பாடு ஆழமாக வேர்விட்டுள்ள தமிழ்நாட்டில், மூடநம்பிக்கைகளையும், பிற்போக்குத்தனத்தையும் விதைத்திட வேண்டும் என்று பா.ஜ.க மூர்க்கத்தனமாக முயன்று வருகிறது.
ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தேசியக் குழு மீண்டும் வலியுறுத்துவதுடன், மார்க்சிய சித்தாந்தத்தின் மீது அவதூறு கருத்துகளை வெளியிட்ட ஆளுநரைக் கண்டிப்பதுடன், தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து அவரை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவரை வலியுறுத்துகிறது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள் பின்வருமாறு:
தீர்மானம் 1: மார்ச் 20 அன்று நடைபெறவுள்ள ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் நாடாளுமன்றம் நோக்கிய பேரணிக்கு ஆதரவு.
தீர்மானம் 2: ‘வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை’ எனும் அடிப்படையில் கண்டோன்மெண்ட் போர்டு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
தீர்மானம் 3: உயிரி எரிபொருள் கொள்கை மீதான தீர்மானம்
தீர்மானம் 4: உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
தீர்மானம் 5: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.
தீர்மானம் 6: 2023 ஜனவரி 30 அன்று டெல்லியில் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் ஏற்கப்பட்ட செயல்திட்டத்திற்கு ஆதரவு
தீர்மானம் 7: இயற்கை பேரிடர், பயிர் காப்பீடு மற்றும் COP27 குறித்த தீர்மானம்
தீர்மானம் 8: ஹிண்டன்பெர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அம்பானி குழும நிறுவனங்களின் முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைத்திட வேண்டும்.
தீர்மானம் 9: ஓய்வூதியம் கோரி தீர்மானம்