தமிழ்நாடு ஆளுநரே! நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு உடனே அனுப்பிடுக! எனக்கோரி AISF உண்ணாவிரதப் போராட்டம்
நாள்: 11.12.2021 இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை நேரம்: காலை 9 மணி
இந்தியாவில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை கட்டணமில்லாமல் பெறுவதற்கு உரிமை உண்டு. சாதி, மதம், இனம், மொழி, பொருளாதாரம் உள்ளிட்ட பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.
ஆனால், தற்போதைய நிலை என்ன?
பணம் படைத்தவர்களும், உயர்சாதியினரும் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையை ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
பல்வேறு கனவுகளோடும், லட்சியங்களோடும் கல்வி நிலையங்களில் நுழையும் மாணவர்களை “நுழைவுத் தேர்வு” என்ற பெயரில் கொலை செய்து வருகிறது, பாஜக அரசு. குறிப்பாக, மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வால் இதுவரை தமிழ்நாடு 25க்கும் மேற்பட்ட மாணவர்களை பலி கொடுத்திருக்கிறது.
“நீட் தேர்வை கொண்டு வந்து மருத்துவப் படிப்பை தரப்படுத்தப் போகிறோம்; தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு இனி யாரும் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் தர வேண்டியதில்லை” என்று சொல்லி தான் ஒன்றிய பாஜக அரசு நீட் தேர்வை திணித்தது.
ஆனால், தற்போதைய நிலை என்ன?
இந்தியாவில் தலைசிறந்த மருத்துவ கட்டமைப்பைக் கொண்டிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இந்தியாவின் 8 மருத்துவர்களில் ஒருவர் தமிழ்நாட்டில் பயின்றவர் தான். சுமார் 8700 துணை சுகாதார மையங்கள், 1800 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 385 சமுதாய சுகாதார மையங்கள், 279 வட்டார மருத்துவமனைகள், 25 அரசு மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டது தான் தமிழ்நாடு சுகாதாரத் துறை. பிரசவ காலத்தில் தாய்-சேய் இறப்பு விகதம் குறைவு, உடல் உறுப்பு மாற்றுதல் மற்றும் தானம், சுகாதார விழிப்புணர்வு என பலவற்றில் தமிழ்நாடு முன்னிலையில் தான் இருக்கிறது. இதனால்தான், சமீபத்தில் தமிழ்நாட்டின் மருத்துவச் செயல்பாடுகளை பார்வையிட வந்த மகாராஸ்டிரா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் அவர்கள் வியந்து பாராட்டிச் சென்றார். சில பலவீனங்கள், குறைகள் இருந்தாலும் இப்படிப்பட்ட வலுவான மருத்துவக் கட்டமைப்பு “நீட் தேர்வு” வருவதற்கு முன்னரே உருவானது என்பதை மறுக்கவும், மறக்கவும் இயலாததாகும்.
“நீட் தேர்வு தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அரசு ஆரம்ப சுகாதார மையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்களே இருக்க மாட்டார்கள்; சேவை மனப்பான்மை மறைந்துபோய், பணம் சம்பாதிக்கும் மனப்பான்மை கொண்ட மருத்துவர்களே இருப்பார்கள்” என்று கல்வியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
ஏனென்றால், “நீட் தேர்வின் மூலம் மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களில் 97.5 % பேர் தனியார் பயிற்சி மையங்களில் (Neet Coaching Center) பயின்றவர்கள்” என்கிறது நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு. கோச்சிங் சென்டர்களில் ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அதிலும், நீட் தேர்வில் முதல் முறையே அதிக மதிப்பெண்களை எடுத்துவிட முடியாது. 2 அல்லது 3 ஆண்டுகள் லட்சக்கணக்கில் கோச்சிங் சென்டர்களில் செலவு செய்து தேர்வெழுதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் 71.42% பேர். 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றிருந்தால் கோச்சிங் சென்டர்கள் ஆண்டுக்கு சுமார் 5000 கோடி கொள்ளையடிப்பது தடுக்கப்பட்டிருக்கும்; ஏழை, எளிய சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மருத்துவம் பயில முடியும் என்ற நிலை தொடர்ந்திருக்கும்.
நீட் தேர்வு வந்ததற்குப் பின்னாலும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு கல்லூரி நிர்வாகங்கள் கோடிக்கணக்கில் நன்கொடை வசூலிப்பது தொடர்கிறது. மேலும், 12ஆம் வகுப்பில் பாஜக ஆளும் உத்திரப் பிரதேசத்தில் தேர்ச்சி விகிதம் 72.6%. ஆனால், தமிழ்நாட்டில் 92.54%. இவ்வாறு இருக்கையில், எப்படி உத்திரப் பிரதேசம் நீட் தேர்ச்சி விகிதத்தில் முன்னணியில் இருக்கிறது என்பது புதிராகவே இருக்கிறது. அதுமட்டுமா? நீட் தேர்விற்கு முன்னால், தமிழக மருத்துவ இடங்களில் 99% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் சேர்ந்தனர். தற்போது, ஒரு பிரபல தனியார் கல்லூரியில் சேர்ந்தவர்களில் 9 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்; மீதமுள்ளவர்கள் அனைவரும் உத்திரப் பிரதேசம், பீகாரைச் சேர்ந்தவர்கள். இதற்கு பெயர் தான் “தரமான மருத்துவப் படிப்பு” என்று பெருமைபட்டுக் கொள்வதா?
இப்படிப்பட்ட அநீதியான நீட் தேர்விற்கு எதிராகத்தான் தமிழ்நாடு அரசு, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரி “நீட் விலக்கு சட்ட முன்வரைவை” சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது. இச்சட்ட முன்வரைவு சட்டமாக வேண்டுமென்றால் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இச்சட்ட முன்வரைவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் வேண்டுமென்றே கிடப்பில் போட்டுள்ளார். கிடப்பில் போடப்பட்டது சட்ட முன்வரைவு மட்டுமல்ல; தமிழ்நாட்டு மாணவர்களின் கனவும், மாநில உரிமையும் தான்.
சுமார் 25 மாணவர்களை பலி வாங்கிய, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை அழித்துக் கொண்டிருக்கின்ற நீட் தேர்விற்கு எதிராக அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக,
“தமிழ்நாடு ஆளுநரே! நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு உடனே அனுப்பிடுக!” எனக்கோரி வருகின்ற 11.12.2021 அன்று தமிழ்நாட்டில் 7 மையங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவிருக்கிறது.
போராட்டம் வெற்றி பெற நிதியும், ஆதரவும் தாரீர்!
“ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைவருக்கும் சமமான, தரமான கல்வி கிடைக்கப் போராடுவோம்”
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்