தமிழ்நாடு அரசே! திராவிட மாடல் ஆட்சியே! ஏழை மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான தரமான, இலவச பயிற்சிகளை வழங்கிடுக!
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முயலும் அதே வேளையில், ஏழை மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான தரமான, இலவச பயிற்சிகளை வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து இன்று (09.09.2022) சென்னையில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி பின்வருமாறு:
நீட் நுழைவுத் தேர்வில் அரசுப்பள்ளி மாணாக்கர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறவில்லை என்பது கவலை அளிக்கிறது.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முயலும் அதே வேளையில், ஏழை மாணவர்களுக்கு தரமான இலவச நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வு பயிற்சிகளை வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
நீட்டிலிருந்து விலக்கு பெற்றாலும் கூட, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகளைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும்.
அரசுப்பள்ளி மாணாக்கர்கள் நீட் தேர்வில் குறைந்த அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது கவலை அளிக்கிறது. 80 விழுக்காட்டினருக்கும் மேல் தோல்வியுற்று இருப்பதாக வரும் புள்ளிவிவரம் வருத்தத்தைத் தருகிறது. இந்தப் பிரச்சனையில் அரசு கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கைகளை மேலும் தீவிரப் படுத்த வேண்டும். அதே சமயத்தில், ஏழை மாணவர்களுக்கு “நீட்” உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான தரமான இலவச பயிற்சியை வழங்கிட கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.
தமிழக அரசின் ஒதுக்கீட்டிற்குரிய மருத்துவ இடங்களுக்கு நீட்டிலிருந்து விலக்கு பெற்றாலும் கூட, நீட் பயிற்சி மையங்களைத் தொடர்ந்து சிறப்பாக தமிழ்நாடு அரசு நடத்திட வேண்டும்.
தங்கும் வசதியுடன் கூடிய மையங்களை வட்டாரம் தோறும் உருவாக்கிட வேண்டும். ஏனெனில், தமிழக அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு , நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றாலும் கூட … AIIMS, JIPMER, ராணுவ மருத்துவக் கல்லூரி, தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட மருத்துவ நிறுவனங்களில் உள்ள மருத்துவ இடங்களுக்கும், அகில இந்திய தொகுப்பு இடங்கள் உட்பட ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவம், ஆயுஷ் மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கும், வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கும், நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகியுள்ளது.
தமிழக மாணவர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்கள் ,அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் சேர உரிமை உண்டு. அகில இந்திய அளவில் இருக்கின்ற ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களிலும், ஆயுஷ் மருத்துவப் படிப்பு இடங்களிலும், தமிழக மாணவர்கள் சேர உரிமை உண்டு. அதற்குத் தகுதி படைத்தவர்களாக நமது மாணவர்களை உருவாக்க வேண்டும்.
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கும் கூட, மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும், தேர்வு எழுத வேண்டும், வெற்றி பெற வேண்டும். அப்பொழுது தான் அந்த இடங்களை அவர்கள் பெற முடியும். இத்தகைய நிலையில், சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி குறைந்துள்ளது கவலை அளிக்கிறது. நேரடி பயிற்சி வகுப்புகளை அரசு போதுமான அளவு நடத்தாதது இப்பின்னடைவிற்கு மிக முக்கியமான காரணம் எனத் தெரிகிறது.
உயர்கல்வி முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு வரும்வரை.., மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஏராளமான உயர்கல்வி படிப்புகள் இருக்கும் வரை.., தி.மு.க வின் தேர்தல் அறிக்கையிலும், இதர தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளது போல், ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு, தரமான இலவச பயிற்சியை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு எடுத்திட வேண்டும். இம்மையங்களுக்கு தனியாக பயிற்சியாளர்களை நியமனம் செய்திட வேண்டும்.
அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்திட வேண்டும். ஆசிரியர் காலிப்பணி இடங்களை உடனடியாக, நிரத்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும்.
தேசியத் தேர்வு முகமை (NTA) கூட, மாவட்ட அளவில் நீட் போட்டி தேர்வுக்கு பயிற்சி வழங்கப்படும் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அவ்வாக்குறுதியை உடனடியாக NTA நிறைவேற்ற வேண்டும்.
மருத்துவக் கல்வி உட்பட அனைத்து படிப்புகளிலும் மாநில உரிமைகளைக் காத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
கியூட் (CUET) தேர்வை , மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்கல்வி இடங்களுக்கு ஒன்றிய அரசு திணிக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களும், பட்ட மேற்படிப்பு மாணவர்களும் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருவது கவலையை அளிக்கிறது.
தொடர்ந்து கடுமையான உழைப்பு சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவதும், 24 மணி நேரத்தில் இருந்து 36 முதல் 48 மணி நேரம், வரை தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படுவதும், தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதனால் வேறு வழியின்றி, பலர் மிகுந்த மன வேதனையுடன், பணிபுரிகின்றனர். அதில் சிலர் தற்கொலை போன்ற மிக மோசமான முடிவை எடுத்து விடுகின்றனர்.
பணியிடங்களில் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படுவதும், பணி நேரத்திலும், பணியிடங்களிலும் நிலவும் மனிதநேயமற்ற சூழலும், மனித உரிமை மீறல்களுமே மன அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், இத்தகைய மரணங்கள் ஏற்படவும் காரணமாகின்றன.
எனவே, 8 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும். 8 மணி நேரத்திற்கு மேல் வேலை வழங்கக் கூடாது. பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சிக்கான பணி நேரத்தை வரையறுக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் 2015 ஆம் ஆண்டு டாக்டர் .ஜி. ஆர். இரவீந்திரநாத் அவர்களால் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் ,8 மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக வேலை வழங்கக் கூடாது என அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
நீதிமன்றத்தின் உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மீண்டும் சில நாட்களுக்கு முன்பு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், அந்தச் சுற்றறிக்கைகள் கிணற்றில் போட்ட கற்களாகவே உள்ளன.
கல்லூரி நிர்வாகங்கள் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை.
அதன் காரணமாக, பயிற்சி மருத்துவர்களும், பட்ட மேற்படிப்பு மாணவர்களும் தொடர்ந்து கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
24 மணி நேரப் பணி என தொடங்கி, 36 முதல் 48 மணி நேரம் வரை தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய மனிதநேயமற்ற சூழல் உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாக உடல் ரீதியான ,உள ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகும் பயிற்சி மருத்துவர்களும், பட்ட மேற்படிப்பு மாணவர்களும் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனவே,
இது போன்ற நிலைமைகள் ஏற்படாமல் தடுத்திட, மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து, உரிய தீர்வை அவ்வப்பொழுது உடனடியாக வழங்கும் வகையில், “மாணவர்கள் நல வாரியம்” போன்ற அமைப்புகளை மாநில அளவிலும், மருத்துவக் கல்லூரிகள் மட்டத்திலும் உருவாக்க வேண்டுமென, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் நீண்ட காலமாக கோரி வருகிறது. ஆனால், இதுவரை அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.
எனவே, இந்தக் கோரிக்கையை உடனடியாக ஏற்க வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
பயிற்சி மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பணி நேரம் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய மருத்துவ ஆணையமும்(NMC) 10.08.2022 அன்று மருத்துவ மாணவர்களின் பணிச் சுமை குறித்தும், மோசமான பணிச் சூழல் குறித்தும்,விடுப்புகள் குறித்தும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிட்டத்தக்கது. இதை மீறும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவக் காப்பீடுத் திட்டப் பணிகளை முதுநிலை மருத்துவ மாணவர்களிடமும், பயற்சி மருத்துவர்களிடமும் கொடுப்பதை உடனடியாக கைவிட வேண்டும். இது அவர்களின் துறை ரீதியான பயிற்சியை பாதிப்பதோடு, கூடுதல் பணிச்சுமையை வழங்குகிறது. அரசு மருத்துவமனைகளில் காப்பீடு திட்டம் நீடிக்கும் வரை இப்பணிக்கென தனியாக ஊழியர்களை நியமத்திட வேண்டும். அதேசமயம், அரசு மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது கைவிடப்பட வேண்டும்.அனைத்து சிகிச்சைகளும்,பரிசோதனைகளும் இலவசம் என்ற நிலையை கொண்டுவர வேண்டும்.
அரசு மருத்துவர்களின் பணி நேரம், ஒரு வாரத்திற்கு தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட உச்ச பட்ச பணி நேரத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
24 மணி நேரம் தொடர் பணியை, மீண்டும் மீண்டும் பலமுறை செய்தே ஆக வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் மருத்துவர்களின் உடல் நலம், மன நலம், குடும்ப நலம் பாதிப்படைகிறது. இந்த அவல நிலையை எதிர்த்து வழக்கு தொடர்ந்து, வெற்றி பெற்றும், வேலை நேரம் என்பது குறைக்கப்படவில்லை. மாறாக ,தற்பொழுது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் பணி நேரம் அதிகரிக்கப் பட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
அனைத்து தமிழக அரசு மருத்துவர்களுக்கும், பகல் நேரப் பணி அதிக பட்சமாக 8 மணி நேரம், இரவு நேரப் பணி அதிக பட்சமாக 12 மணி நேரம் என நிர்ணயித்து, உடனடியாக “பணி நேரம் குறித்த உத்தரவை” வழங்க வேண்டும் எனவும், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தாய் சேய் மரணங்களை குறைக்க, பிரசவங்களை போதிய வசதிகள் இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடத்துவதை கைவிட வேண்டும். அனைத்து வசதிகளும் கொண்ட அரசு உயர் மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக் கொள்ளும் போக்கை ஊக்கப்படுத்த வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
வீடுகளில் பிரசவம் பார்ப்பதை விட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்ப்பது சிறந்தது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்ப்பதை விட அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் இருக்கின்ற அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பது தான் தாய்க்கும்- சேய்க்கும் பாதுகாப்பானது .
மகப்பேறு சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகளில், மகப்பேறு மருத்துவர், மயக்க மருத்துவர், குழந்தைகள் மருத்துவர் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அறுவை அரங்கு, இரத்த வங்கி, சுகாதாரத்துறை துணை பணியாளர்கள் இருக்கின்ற மருத்துவமனைகளில் தான் பிரசவம் பார்க்கப்பட வேண்டும். இந்த முறை தான் பாதுகாப்பானது.
எனவே, அதற்கு ஏற்றார் போல் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு வழிகாட்டி தக்க ஆலோசனைகளைக் கூற வேண்டும். அவ்வாறின்றி ஆரம்ப சுகாதார நிலையங்களில், இத்தனை பிரசவங்கள் பார்த்தே ஆக வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்படுத்தக் கூடாது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்போது உள்ள சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்ட மனிதவளத்தையும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் சரியாக திறம்பட பயன்படுத்தப்படாத போக்கு உள்ளது. அதன் காரணமாக பாதுகாப்பற்ற சூழலில் பிரசவங்கள் நடக்க நேரிடுகின்றது.
இதனால், தொடர்ந்து தடுக்கப்படக்கூடிய பல தாய் சேய் மரணங்கள் நடக்கின்றன. அது போன்ற நிகழ்வுகள் நிகழும் போது, உண்மையான காரணங்களை ஆராய்ந்து சரி செய்யாமல், அப்போதைக்கு அங்கு பணி செய்யும் சிலர் மீது நடவடிக்கை எடுப்பது சரியல்ல. இது பிரச்சனைக்குத் தீர்வாகாது.அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து தீர்வுகாண வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.
இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி,பாராமெடிக்கல் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் பி.காளிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.