கல்லூரி மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்குப் பிரத்யேக இதழ்கள் கொண்டு வரவேண்டும் – தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோரிக்கை
தமிழக அரசு, கல்லூரி மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்குப் பிரத்யேக இதழ்கள் கொண்டு வரவேண்டும் என்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் த அறம் 13.10.2022 அன்று பத்திரிக்கைகளுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:
தமிழக அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு என ‘ஊஞ்சல்’ ‘தேன்சிட்டு’ என்ற இரு இதழ்களை மாதம் இருமுறை கொண்டுவர முடிவு செய்து வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ மாதம் ஒரு முறை வெளியாகும் இதழும் வெளியிடப்பட்டுள்ளது.
இது பள்ளி மாணவ மாணவிகளின் கலை இலக்கிய திறனை அதிகரிக்கும் ஒரு நல்ல முயற்சியாகும். கலை, இலக்கிய, அறிவியல் தகவல்களைப் பள்ளி மாணவர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் நல்ல சாதனமாக இந்த இதழ்கள் பயன்படும்.
அதைப் போலவே பள்ளி ஆசிரியர்களுக்கு துவக்கப்பட்டுள்ள ‘கனவு ஆசிரியர்’ இதழும் ஆசிரியர்கள் மத்தியில் கலை இலக்கிய பண்பாட்டுச் செய்திகளையும், கற்றல் செயல்முறைகளையும் எடுத்துச் செல்ல உதவும். ஆசிரியர்களின் கலை இலக்கிய பண்பாட்டு திறமைகளை வெளிக்கொணர உதவும்.
இந்த மூன்று இதழ்களையும் வெளியிட்ட தமிழக அரசிற்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
இதைப் போலவே கல்லூரி மாணவர்களுக்கும், கல்லூரி ஆசிரியர்களுக்கும் இதழ்கள் கொண்டு வரவேண்டும் என தமிழக அரசை தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக் கொள்கிறது.
மகாகவி பாரதியை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஒரு மாணவர்க்கும், ஒரு மாணவிக்கும் ‘பாரதி இளம்கவிஞர்‘ விருது வழங்கி,ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கும் தமிழக அரசிற்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் த அறம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.