தனியார்மய முனைப்பு மற்றும் தேசிய சொத்துக்கள் விற்பனை நடவடிக்கைகளை மோடி அரசாங்கம் உடனடியாக நிறுத்திட வேண்டும்! டி. ராஜா வலியுறுத்தல்
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முனைப்பை மோடி அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது மற்றும் நிதி மயமாக்கல் ஆகிய கொள்கைகள் மூலமாக தேசிய சொத்துக்கள் அனைத்தையும் விற்பனை செய்வதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் தீவிர முனைப்புடன் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய விஷயம் ஆகும்.
வலதுசாரி, அமெரிக்க மாதிரி பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட மிகப்பெரும் நஷ்டங்களை ஈடுகட்டவும், கார்ப்பரேட்டுகளுக்கான வரியை மேலும் உயர்த்தி போதுமான நிதி ஆதாரங்களைத் திரட்டுவதில் அரசாங்கம் அடைந்த தோல்வியை மூடி மறைக்கவும், நடப்பு செலவினங்களைச் சமாளித்திட வருவாய்க்கான ஆதாரங்களைத் திரட்டவும், தேசத்தின் நீண்டகால சொத்துக்களை விற்பனை செய்வது வேதனைக்கு உரியதாகும்.
இது போன்ற விற்பனை நடவடிக்கைகள் நமது இறையான்மைமிக்க தேசத்தின் பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் இறையாண்மையைப் பாதிக்கக்கூடியதாகும். அது மட்டுமின்றி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பயனளிக்கக்கூடிய நடவடிக்கைகள் ஆகும். பிற்போக்கான இது போன்ற வலதுசாரி நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் மோடி அரசாங்கம், தேசத்தின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி யில் உள்ள இந்திய அரசாங்கத்தின் பங்கு மூலதனத்தை விற்பனைக்கு அறிவித்துள்ளது.
எல்ஐசி நிறுவனத்தின் 22 கோடி பங்குகளைத் தனியாருக்கு விற்பதன் மூலம் மத்திய அரசாங்கத்திற்கு ரூ- 20000 கோடி அளவிற்கு வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தேச நலனுக்கும், எல்ஐசி பாலிசிதாரர் நலன்களுக்கும் எதிரான இந்த நடவடிக்கை முற்றிலும் பிற்போக்கான நடவடிக்கை ஆகும்.
எனவே, தனியார்மய முனைப்பு மற்றும் தேசிய சொத்துக்கள் விற்பனை நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்திட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது