தனிமை
மாதா
சார்லஸ் டார்வின் பரிணாமக் கோட்பாட்டின்படி, குரங்கிலிருந்து வந்த மனிதன் குரங்குகளைப் போல் கூட்டமாக வாழ விரும்புகிறான். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரும் தனிமையில் வாழ்ந்ததாக குறிப்புகள் இல்லை. விதவைகள், மனைவியை இழந்தோர், நோயாளிகள், ஆகியோர் தனிமையாக வாழவில்லை. எந்த மனிதரும் சமூகத்தில் அடுத்தவர் துணையின்றி வாழமுடியாது. பண்டமாற்றம் நிகழ்ந்தது. தேவைகளையும், நிறைவுகளையும் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் நவீன வாழ்க்கை முறை எத்தனையோ மனிதர்களைத் தனியனாக்கியுள்ளது. வீடிருந்தும் வீடற்றவர்களாக உணர வைக்கிறது.
18ம் நூற்றாண்டுக்குப் பிறகு தொழிற் புரட்சி வந்து அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டது. தனியார், பொதுத்துறை, தனிநபர், சமூகம் என பெரிய அளவில் ஏற்றம் கண்டன. சந்தைப் பொருளாதாரம் உருவாகி முதலாளித்துவத்தின் குழந்தையாக தனிமை பிறந்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் அதிகமான விவாகரத்துகளினாலும், பிறப்பு விகிதம் குறைவினாலும், கணவன், மனைவி இருவரும் வெளியே வேலைக்குச் செல்வதாலும் தனியாக வாழும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. குடும்பம் சிதைவதாலும், சமுதாய நெருக்கடிகளாலும் சிலர் தனிமையில் வாழ்கிறார்கள். சக மனிதர்களிடமிருந்து விலகியோ, விலக்கி வைத்தோ இருப்பதிலிருந்துதான் தனிமை உருவாகிறது. செய்த பாவங்களுக்குத் தண்டனையாக கூட சிலர் தனிமையை நினைக்கிறார்கள். அவர்கள் நரகத்திலோ, சுடுகாட்டிலோ, பாலைவனத்திலோ இருப்பது போல் உணர்கிறார்கள். நகரங்களின் நெருக்கமும், இரைச்சலும் தனிமையை மேலும் வளர்க்கிறது.
தற்கால தனிமை என்பது மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டு இருப்பது மட்டுமல்ல, தனிமை மக்களின் மனதில் குடிகொண்டிருக்கிறது. குடும்பத்தாலீ,; நண்பர்கள், உறவினர்கள், காதலி, காதலன் உடனிருந்தாலும் கூட சிலர் தனிமையில் இருப்பதாகவே உணர்கிறார்கள். சமூகத்தைப் பற்றிய பயமும் தனிமையை உறுதி செய்கிறது. மனதளவில் உறுதியானவர்கள் கூட தனிமைப்பட்டு தளர்ந்துவிடுகிறார்கள். மேலும் தனிமையில் இருப்பவர்களுக்கு மனம் விரைவில் வெறுமையடைகிறது.
தனிமை என்பது காரணம் தெரியாத உடல் நலக் குறைவா? நோயியலில் இருதயக் கோளாறு, நீரழிவு நோய், சிறுநீரகப் பிரச்சனை ஆகியவற்றை விட தற்காலத்தில் பொதுவாக அறியக்கூடியது தனிமைதான். தொற்று நோயைப் போல பரவிவரும் தனிமை எவ்வாறு உருவாகிறது, அதைத் தீர்ப்பததற்கு வழி என்னவென்று பல முனைகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். தனிமை என்பது ஒரு உணர்வு. ஒரு நிகழ்ச்சியில் நூறுபேர் இருந்து, அவர்களில் நமக்கு ஒருவருமே தெரியாமல் இருந்தால் நாம் தனிமையை உணர்கிறோம்.
சுமார் 1500 பேர் உங்கள் முகநூலில் இணைந்திருக்கலாம். அதில் பாதிப்பேருக்கு மேல் “லைக்”;போட்டு உங்களை தொடர விரும்பாதவர்கள். மீதியுள்ளோர் பள்ளி கல்லூரித் தோழர்கள், குறிப்பிட்ட அரசியல், சாதி அமைப்;பைச் சேர்ந்தவர்கள்,திடீர் நண்பர்கள் ஆகியோர் இருக்கலாம். இவர்களிடம் நாட்டு நடப்புகள், சமூக நிகழ்வுகள், மேற்போக்கான குடும்ப விஷயங்கள், தன்னுடைய “சாதனைகள்” ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளலாம். இவர்களோடு இணையம் மூலம் உரையாடல் நடத்தலாம்;. ஆனால் இவர்களெல்லாம் நமக்கு அப்பால் இருப்பவர்கள். இது படிப்படியாக உயர்ந்து பின் போதையாக மாறிவிடுகிறது. இவற்றினால் தனிமையைப் போக்க முடியாது. தனியர்களுக்கு சமூகப் பாதுகாப்புதான் முக்கியமே தவிர, இணைய தளம் அல்ல.
ஒருவர் கூட்டு குடும்பத்தில் வாழ்கிறார். இருபது பேர் ஒரே வீட்டில் பழகுகிறார்கள். ஒன்றாக உணவருந்துகிறார்கள். யாரிடமும் மனதளவில் உறவு இல்லை. மனம் விட்டு பேசமுடியாது. சமூகத்தோடு இணைந்து வாழமுடியவில்லை. இதுதான் தனிமை.
ஒருவர் தனியாக இருக்கலாம். ஆனால் அவருக்கு உலகம் முழுக்க நண்பர்கள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கானோர் நேசிக்கிறார்கள். அவர் தனிமை கிடையாது. உதாரணமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனியாக சோதனை செய்கிறார். பல அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளியிடுகிறார். ஆனல் உலகம் முழுக்க அவருக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கானோர் நேசிக்கிறார்கள் அது தனிமை இல்லை
மனிதனின் ஒவ்வொரு பருவத்திலும் அதற்கான தனிமை உண்டு. ஒவ்வொரு தனிமையும் ஒரு வகை. தனிமை மானுடனின் இயல்பான நிலை எனப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு தனிமை இல்லாமலி;ருப்பது சிறுவர்களாக இருக்கும் போது மட்டும்தான். இளமைக் காலத்தில் நாம் ஓர் ஆழ்ந்த தனிமையை உணர்கிறோம். நண்பர்கள் சு+ழ இருந்தாலும் அந்த தனிமை கூடவே இருக்கிறது. அதைப் போக்குவதற்கு வாசிப்பும், செயல்பாடும் சிறந்த வழியாக இருக்கும். நாம் ஏன் செயல்பட வேண்டும்? இரண்டு விஷயங்களை நாடுகிறோம். ஒன்று நம் இருப்பை வெளிப்படுத்த செயல்படுகிறோம.; நம்மை பிறருக்குத் தெரிவதும், அவர்கள் நம்மை மதிப்பதும் இன்றியமையாததாக உள்ளது. நாம் சிலவற்றை சிறப்புற செய்;துகொண்டிருக்கிறோம் என்று நாம் உணர வேண்டியிருக்கிறது. அங்கீகாரம், மனநிறைவு இரண்டும் தனிமையை அகற்றுபவை.
என்னால் எங்கும் தனிமையாக இருக்க முடியும். எனக்குத் தனிமைதான் பிடிக்கும் என்று சிலர் சொல்லக்கூடும். கைபேசியும், இணையதளமும் இல்லாவிடில் அத்தகைய தனிமை அவருக்கு குட்டிச் சாவாக இருக்கும். பக்கத்தில் மனிதர்கள் இல்லாமல், வம்புகளில்லாமல் வாழவே முடியாதவர்களாக இருப்பார்கள். சமூக வலைத் தளங்களில் வம்புகளைத் தேடியலைந்து கொண்டிருப்பார்கள்.
முதுமையில் குடும்பம் எனும் பொறுப்பு இல்லாமலாகி, உறவுகள் சற்று சம்பிரதாயமானவையாக ஆகிவிடுகின்றன. ஏனென்றால் அடுத்த தலைமுறை வாழும் உலகம் நாம் புரிந்துகொள்ள முடியாததாக, அயலானதாக உள்ளது. இலக்கு இல்லாமல், செயற்களம் இல்லாமல் இருப்பதன் சலிப்பு தனிமையை உருவாக்குகிறது. சிலர் அரசியல், சாதி, மதச் செயல்பாடுகள், குடும்ப சிக்கல்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு தங்களை மூழ்கடித்துக் கொள்கிறார்கள். மனதிற்குப் பிடித்த ஏதாவது ஒரு துறையில் சேவையில் ஈடுபடுவது தனிமையை இல்லாமலாக்கும். இத்தனிமையின் விளைவான சோர்வை அழித்து ஊக்கம் கொண்டவர்களாக ஆக்கும். இதில் மாற்றம் இல்லாதவர்கள் அன்றாடத்தில் சலிப்புறுகிறார்கள். குடி உட்பட சிக்கலில் சென்று சிக்கிக்கொள்கிறார்கள்.
உலகில் உள்ள முதியவர்களில் பத்தில் ஒருவுபி இந்தியாவில் உள்ளார். இதில் பாதிப் பேர் தனிமையில் வாழ்கிறார்கள். வறுமை, நோய், தனிமை ஆகியவை பெரும்பாலான முதியவர்களைப் பீடித்திருக்கிறது. இந்த மூன்றில் மனரீதியாக அதிக துயரமளிப்பது தனிமையே. பிள்ளைகள் விலகி வெளிநாடுகளுக்கு, வெளியிடங்களுக்கு வேலைக்கு சென்று விடுகிறார்கள். குடும்பத்தில் இருக்கும் போதே மரியாதைக் குறைவாக நடத்துதல், கவனிப்பு இன்மை, அலட்சியம் போன்றவைகள் உளவியல் ரீதியாக ஒரு மனிதனுக்கு தனிமை உணர்வை உருவாக்குகின்றன. எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. உறவினர்களையும், நண்பர்களையும் சந்திக்க முடியாமல் தொலைக்காட்சியிலும், கைபேசியிலும் தங்களைப் புதைத்துக் கொள்கிறார்கள். குடும்பத்திலும், வெளியிலும் அவமானங்கள் வருகின்ற போது எதற்காக இந்த உசிரை வச்சிக்கிட்டு இருக்கனும். செத்துத் தொலைக்கலாம் என்ற முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். சிலர் குடிபோதைக்கு அடிமையாகி தங்களை அழித்துக் கொள்கிறார்கள். சிலருக்கு மனநல பாதிப்பு ஏற்படுகிறது.
இலக்கியத்தில் தனிமையைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது? 1667ல் ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் தனது இழந்த சொர்க்கம் என்ற கவிதைத் தொகுப்பில் தனிமையைப் பற்றி விவரித்திருக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் தனிமையைப் பற்றி முதன்முதலாக வந்த செய்தி இதுதான் என அறியப்படுகிறது.
ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செகாவ் எழுதிய, உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான “பந்தயம்” என்ற கதையில் பணத்திற்காக ஆசைப்பட்டு ஒருவன் பதினான்கு ஆண்டுகள் தனிமைப்பட்டு, கதை முடிவில் பணம் பெரிதல்ல, தனிமனித வாழ்க்கையும், சுதந்திரமுமே முக்கியம் என்பதை கதாபாத்திரத்தின் மூலம் செகாவ் வெளிப்படுத்தியிருப்பார். தனிமையில் இருந்த காலத்தில் அந்த மனிதன் உலக இலக்கியங்களையும், தத்துவ நூல்களையும் வாசித்தே தனிமையை வீழ்த்தியிருப்பான்.
தனிமையில் வாழ்ந்து வரும் பேக்கரி உரிமையாளரான ஒரு முதிர்கன்னி, தனது வாடிக்கையாளர் ஒருவருடன் ஒரு தலைக் காதல் ஏற்பட்டு, எதிர்பாரா முடிவாக அக்காதல் தோல்வியில் முடியும். பின்னர் அப்பெண் தனது வாழ்வாதாரமான பேக்கரித் தொழிலையும், அதன் தொடர்ச்சியான ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் அடிப்படையாகக் கொண்டு தனிமையை வெல்லுவாள் என ஓ.ஹென்றி “சு+னியக்காரியின் ரொட்டித்துண்டு” என்ற கதையில் விவரித்திருப்பார்.
தமிழில் ராஜம் கிருஷ்ணன் எழுதிய “தனிமை” என்ற சிறுகதையில், வயதான தாயாரை தனமையில் விட்டுவிட்டு, அவளுடைய இரண்டு பெண் மக்கள் வேலை தேடி வெளிநாடு சென்று விடுகிறார்கள். பக்கத்து வீட்டுப் பெண் வந்து விசாரித்து விட்டு, வளர்ப்பு மகளான நானே எனது பெற்றோரை வி;ட்டுப் பிரிவதில்லை. பெற்ற மகள்களான அவர்கள் ஏன் உங்களைத் தனிமையில் விட்டுச் சென்றார்கள் என்று கேட்பாள். தனிமை எவ்வாறு உருவாகிறது என்பதை கதாசிரியர் விரிவாகச் சொல்லியிருப்பார்.
தனிமை மன அழுத்தத்தை தணிக்கும் என்பது திசை திருப்பும் முயற்சியே. தனிமையின் சோகம் சரிசெய்யக்கூடியது தான். காலத்திற்கு காலம் தனிமை மாறுபடுகிறது. நவீன கால தனிமையைப் போக்குவதற்கு பல வழிகள் திறந்திருக்கின்றன. அதே வேளையில் பலரும் நினைப்பது போல கேளிக்கைகள், பொழுது போக்குகள் எவருக்கும் தனிமையைப் போக்குவதில்லை. நாம் வாழ்நாள் முழுக்க ஓய்வு, கேளிக்கைக்காக ஏங்கியிருந்திருப்போம். ஆகவே முதிய வயதில் முழு நேரமும் ஓய்வும், கேளிக்கையுமாக வாழ வேண்டுமென்று கற்கனை செய்திருப்போம். ஆனால் அதிகம் போனால் ஓராண்டு அவ்வாறு ஈடுபட முடியும். அதன் பின் சலிப்பே எஞ்சும். ஏனென்றால் கேளிக்கையில் நாம் பார்வையாளர்கள். எந்த வகையிலும் பங்கேற்பாளர்கள் அல்ல. வெறும் பார்வையாளர்களாக இருப்பதில் செயலின்மை உள்ளது. மானுட உடலும், உள்ளமும் செயலுக்காக வடிவமைக்கப்பட்டவை. செயலின்மையால் சோர்வும், சலிப்பும் அடைபவை. மற்ற ஈடுபாடுகளுடன் ஒப்பிடுகையில் வாசிப்பு மிக மேலானது. ஏனென்றால் அதில் நமது பங்கேற்பு இல்லாமல் முடியாது. வாசிப்பையட்டி எழுதவும் ஆரம்பித்தால் அது செயற்களமே. ஆனால் அது அனைவராலும் செய்யக்கூடியது அல்ல.
இலக்கிய வாசிப்பு மன அழுத்தத்தை, வெறுமையைக் குறைத்து, கதையில் உலவும் பாத்திரங்களோடு உரையாட வைக்கிறது. கதையோடு இணைந்து புத்தகம் வாசிப்பவரும் புதிய வாழ்க்கையை வாழ முடியும். நேருக்கு நேர் உரையாடலும், எழுதுதலும் மனிதரின் தனிமையைக் குறைக்கும். வாசிப்பதினால் உலகில் எப்போதும் தனிமையை பொழுது போக்கு அம்சமாகவே நாம் உணரலாம். வலீசித்த இலக்கியக் கதாபாத்திரங்களின் அனுபவங்களை நம் அனுபவங்களாக உணர்ந்து, அதன் நாயகர்களுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, அது அளிக்கும் வெவ்வேறு உலகங்களில் நாம் மானசீகமாக வாழலாம்.
தொடர்புக்கு:- 9442452505