டிஜிட்டலாக்கும் கோரிக்கையை கண்டுகொள்ளவே இல்லை- பாரதியின் கையெழுத்துப் பிரதிகள், ஆவணங்களை பாதுகாக்குமா புதுச்சேரி அரசு?
நூறாண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் பாரதி வசித்தபோது அவர் எழுதிய கையெழுத்து பிரதிகள், ஆவணங்கள் ஆகியவற்றை டிஜிட் டலாக்கி பாதுகாக்கும் பணியை புதுச்சேரி அரசு தொடங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இவற்றை அரசு பாதுகாக்குமா என்ற கேள்வி தமிழறிஞர்களிடம் எழுந்துள்ளது.
விடுதலைப் போராட்டத்தின்போது பிரான்ஸ்வசமிருந்த புதுச்சேரியில் ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள வீட்டில் பாரதியார் தனது குடும்பத்துடன் வசித்தார். அவரது வாழ்வில் இனிமையான காலகட்டமான கடந்த 1908 முதல் 1918-ம் ஆண்டு வரை இங்கிருந்துதான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல கவிதைகளை இயற்றினார். குறிப்பாக குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு உள்ளிட்ட படைப்புகளை படைத்தார்.
புதுச்சேரியில் பாரதியார் வசித்த வீட்டை அரசு அருங்காட்சியகமாகவும், நூலகமாகவும் பராமரிக்கிறது. புதுச்சேரியில் பாரதி தங்கி யிருந்தபோது எழுதிய கவிதைகளின் கையெழுத்துப் பிரதிகள், ஆவணங்கள் எல்லாம் அரிய பொக்கிஷங்களாக இங்கு பாதுகாக் கப்படுகின்றன.
நாளடைவில் பாரதி இல்லம் மோசமானதால் கடந்த 2009-ல் தற்காலிகமாக மூடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அதன்பின்னர் பலமுறை அரசை வலியுறுத்தி ‘இந்து தமிழ்’நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியானது. இதையடுத்து 2016-ல் பாரதி இல்லம் திறக்கப்பட்டது. ஆனால் பாரதியின் கையெழுத்துப் பிரதிகளின் நிலை கேள்விக் குறியாகவே உள்ளன.
இதுபற்றி தமிழறிஞர்கள் தரப்பில் விசாரித்தபோது, “பாரதியார் இல்லம் சீரமைப்பின்போது அங்கு பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்ட 17 ஆயிரம் புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை காப்பது மிகப்பெரிய பொறுப்பாக இருந்தது. குறிப்பாக பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள், ஆவணங்கள், அவர் பயன்படுத்திய முக்கிய நூல்கள் 3,000 மட்டும் பாரதிதாசன் அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அதன் பிறகு அவை அங்கிருந்து சுப்பையா நினைவு நூலகத்துக்கு மாற்றப்பட்டன. இல்லத்தில் மீதமிருந்த பாரதியின் அரிய நூல்கள் பத்திரமாக மாற்றி வைக்கப்பட்டன.
பாரதி வீடு பழமை மாறாமல் 2016-ல்புதுப்பித்து நிறைவடைந்தது. நூல்கள் அனைத்தும் பாரதி இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டன. பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் உட்பட முக்கிய நூல்கள் தரைத்தளத்தில் தனியாக உள்ளன. மொத்தம் 17 ஆயிரம் நூல்கள் முதல்தளத்தில் வைக்கப் பட்டுள்ளன.
பாரதி எழுதிய இதழ்கள், அவரது கையெழுத்துப் பிரதிகள், தாகூர், அரவிந்தர் என பலரின் படைப்புகளை பாரதியின் மொழிமாற்ற எழுத்துகள் என பல விஷயங்கள் பாரதி வீட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அவை பொக்கிஷம். பாரதியின் பல முக்கியப் படைப்புகள் அவர் இவ்வீட்டில் வசித்தபோதுதான் படைத்துள்ளார். இங்குள்ள பாரதியின் ஆவணங்கள், படைப்புகள் அனைத்தையும் டிஜிட்டலாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.
நூறாண்டுகள் கடந்த அவரது கையெழுத்துப் பிரதிகள் மற்றும் ஆவணங் களை அனைவரும் அறியும் வகையில் டிஜிட்டலாக்கினால் நீண்ட ஆண்டுகள் பாதுகாக்க முடியும். டிஜிட்டலாக்க பல ஆண்டு களாக கோரிக்கை வைக்கிறோம். ஆனால் அரசு கவனத்தில் எடுக்கவே இல்லை” என் கின்றனர்.
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “பாரதியின் நூல்கள், ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகளை கணினிமயமாக்க ரூ.1 கோடி தேவைப்படும்.
டெல்லியைச் சேர்ந்த தன் னார்வலர்கள் பாரதி இல்லத்தை பார்த்த பின்பு பாரதியின் நூல்கள், ஆவணங்களை கணினிமயமாக்கம் செய்வதற்கான நிதியைவழங்குவதாக தெரிவித்துள்ளனர். ஆவ ணங்கள் மற்றும் நூல்கள் டிஜிட்டலாக்க வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. அரசும் இவ்விஷயத்தை ஆலோசித்து வருகிறது” என்று குறிப்பிடுகின்றனர்.
பாரதியின் ஆவணங்கள், படைப்புகள் அனைத்தையும் டிஜிட்டலாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.