டிசம்பர் 29 – கூட்டாட்சி முறை பாதுகாப்பு நாள் – சி.பி.ஐ தேசிய நிர்வாகக் குழு அறைகூவல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி ராஜா, புதுடெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகமான அஜாய் பவனில் இன்று (05.12.2022) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட செய்தி அறிக்கை பின்வருமாறு:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகமான அஜாய் பவனில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தோழர் பினாய் விஸ்வம் தலைமை வகித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா அறிக்கைகளைச் சமர்ப்பித்தார்.
அக்டோபர் மாதம் விஜயவாடாவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு குறித்து தேசிய நிர்வாகக் குழு ஆய்வு செய்தது. புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு கட்சிப் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
கூட்டாட்சி முறையைப் பாதுகாப்போம், ஆளுநர் பதவி ஒழிப்பு – ஆகியவற்றுக்கான பிரச்சாரம்.
தேசத்தின் கூட்டாட்சி முறையைப் பாதுகாத்திட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியாகத் திரள வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு அறைகூவல் விடுக்கிறது.
நமது அரசியலமைப்பின் அடித்தளங்களைத் தகர்ப்பதற்காக, ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தேசிய நிர்வாகக் குழு எச்சரிக்கை செய்கிறது. இந்த நோக்கத்திற்காக, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் அதிகார மையப்படுத்துதலின்படி, ஆளுநர் பதவி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில், ஆளுநர் அலுவலகங்கள் பா.ஜ.க வின் கட்சி அலுவலகங்களாகச் செயல்படுகின்றன. இந்தப் பின்புலத்தில், ஆளுநர் பதவி ஒழிப்பு கோரிக்கையை முன்வைப்பதற்கான காலம் கனிந்துவிட்டதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. எனவே, இந்தக் கோரிக்கையை முன்னிட்டு, டிசம்பர் 29 -ஐ, கட்சியின் அனைத்து அணிகளும் “கூட்டாட்சி முறை பாதுகாப்பு நாளாகக்” கடைபிடிக்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு அறைகூவல் விடுக்கிறது. அந்த நாளில், கட்சியின் மாநில குழுக்கள் பல்வேறு வகையான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கட்சியின் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.