ஜே.என்.யு வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி வன்முறை வெறியாட்டம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
ஜே.என்.யு வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி அமைப்பினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த பிப்ரவரி 19 ஆம் நாள் ஜே.என்.யு வளாகத்தில் அமைந்துள்ள மாணவர் சங்க அலுவலகச் சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த மாபெரும் தலைவர்களான பெரியார், பகத்சிங், பாபாசாகேப் அம்பேதகர், கார்ல் மார்க்ஸ், ஜோதிபா மற்றும் சாவித்ரி பூலே ஆகியோரின் படங்களைச் சேதப்படுத்தி, ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி அமைப்பினர் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறை வெறியாட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
சித்தாந்த வேறுபாடு கொண்டிருக்கும் இடதுசாரி மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்டுள்ள ஜே.என்.யு மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருப்பது இது முதல் முறையல்ல. ஜே.என்.யு வளாகத்தில் நிலவி வரும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி அமைப்பினர் முயன்று வருகின்றனர். மாணவர் சங்க அலுவலகம் மற்றும் மாணவர் சமுதாயத்தின் மீதான வன்முறை வெறியாட்டத்தைக் கட்சி கண்டிக்கிறது.
இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளாத பல்கலைக்கழகத்தின் மெத்தனம் மற்றும் டெல்லி காவல்துறையின் போக்கு குறித்து கட்சி கேள்வி எழுப்புகிறது. இது போன்ற சம்பவம் நடைபெறுவது இது முதல்முறை அல்ல. இந்தச் சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்திட வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கட்சி வலியுறுத்துகிறது.