“ஜெய் பீம்” என்னும் முழக்கம்.. சாதி வெறியர்கள் ஆத்திரமடைவது ஏன்?
அ.பாஸ்கர்
“ஜெய் பீம்“ படக் குழுவினருக்கு எதிராக வன்ம வெறியோடு தாக்குதல் நடத்துவது ஏன்?
பழங்குடி மற்றும் மலை வாழ் மக்களுக்கும், சிறுபான்மை சாதிப் பிரிவு மக்களுக்கும் இந்த சமூகம் இழைத்து வரும் அநீதி இதுவரை தடுக்கப்படவில்லை. குடிமக்கள் அனைவரும் அவரவர் திறனுக்கு ஏற்ப முன்னேற சமவாய்ப்பு வழங்க வேண்டும் என அரசியல் அமைப்புச் சட்டம் உறுதியளித்திருந்தும் அது நிறைவேற்றப்படவில்லை.
சமூக அடக்கு முறைகளும் ,ஒடுக்குமுறைகளும், தீண்டாமை செயல்களும் தொடர்ந்து நிலவுகின்றன.
குறிப்பாக சிறுபான்மை சாதி மக்கள் மீது பல வடிவங்களில் தாக்குதல் நடத்தப்படுகின்றன. இதில் ஒரு குறிப்பிட்ட சாதிப் பகுதியினருக்கு எதிராக ஆளும் வர்க்கம், காவல்துறை நிர்வாகம் வழியாக நடத்தும் இரக்கமற்ற தாக்குதலை “ஜெய்பீம்“ தோலூரித்து காட்டுகிறது.
ஜெய் பீம் இளம் இயக்குனர் த.ச. ஞானவேல், குறவர், ஒட்டர், இருளர் போன்ற சாதியினரின் வாழ்வியல் துயரங்களை வெகு இயல்பாக காட்சிப் படுத்தியுள்ளார். திரைப்படம் சொல்லும் மையக் கருத்து மிக மிக முக்கியமானது. நேர்மையானது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் குடிமக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க பல பிரிவுகளில் உறுதியளித்துள்ளது . ஆனால், அரசியல் சட்டத்தின் பலன்களை உரியவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் இதுவரை எந்த ஆட்சியாளர்களும் வெற்றி பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும். இதனை “ ஜெய்பீம்“ அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளது..
“ சட்டம் போராடுவதற்கனா ஆயுதம்“ எனக் கூறும் வழக்கறிஞர் சந்துருவின் வார்த்தை சத்தியமானது. ஆனால், அந்த ஆயுத உதவி கிடைக்காமல், ஏழைகளுக்கு எட்டாக்கனியாவே இருக்கிறது,
குரலற்ற மக்களுக்கு சட்டத்தின் துணையோடு போராடிய வழக்கறிஞர்கள் பலரை தமிழ்நாடு பெருமிதத்தோடு நினைவு கூறி வருகிறது.
மோகன் குமாரமங்கலம், என்.டி.வானமாமலை வரிசையில் பணி நிறைவு பெற்ற நீதியரசர் கே. சந்துரு குறிப்பிடத் தக்கவர். .
நீதியரசர் கே. சந்துரு – இயக்குநர் த. செ ஞானவேல் கலந்து பேசும் சூழல் அமைத்த நெய்வேலி நேர்வுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
களப்போராளி காலத்து வழக்கறிஞர் சந்துரு வாகவே நாயகன் சூர்யா பார்க்க முடிந்தது.
இந்த படத்தின் கருவாக இருப்பது இருளர் இன மக்களின் வாழ்க்கை நிலையும், இவர்களை ஆதிக்க சாதியினர் இழிவாக நடத்தும் சமூக அவலத்தையும் பொதுத் தளத்தின் விவாத்திற்கும், முடிவுக்கும் வைப்பதுதான்.
காவல்துறையினர் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு தீர்வுகாண, எப்படி பொய் வழக்குகளை பதிவு செய்கிறார்கள், அந்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க என்ன சித்தரவதை செய்கிறார்கள் என்பதும் திராவகம் உமிழ்ந்து உணர்த்தப்படுகிறது. ராஜாகண்ணுவையும் அவரது குடும்பத்தினரையும் காவல்துறை உதவி ஆய்வாளரும் காவலர்களும் கடுமையாக தாக்கிய காட்சியில் ராஜாக்கண்ணுவின் துடிப்பில் , நடிகர் மணிகண்டன் கரைந்து போய்விட்டார். அங்கு சாத்தான்குளம் காவல் நிலையக் கொடூரம் காட்சியாக விரிகிறது.
ராஜா கண்ணு வாக வந்த கலைஞர் மணிகண்டன் தமது அனுபவத்தை ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளும் போது “ ராஜா கண்ணு போன்றவர்களால் அடக்குமுறைகளை தாங்கி இந்த அளவு எப்படி உறுதியாக இருக்க முடிகிறது. அது கம்யூனிஸ்டுகளின் சிந்தாந்தம் தந்த வலிமை என்பதை கண்டு வியந்தேன்” என்று கூறியுள்ளார்.
இப்படத்தின் கதாநாயகி லிஜோ மோல் ஜோஸ் செங்கேணியாகவே வாழ்ந்துள்ளார்.
செங்கேணி வயிற்றில் பிள்ளை பை சுமக்கும் கர்ப்பிணியாக இருந்துக் கொண்டு தமது கனவரை தேடி அலையும் போதும் பேசும் ஒவ்வொரு வசனங்களும் திரைப்படம் பார்ப்பவரை கண்ணீர் சிந்த வைக்கிறது. இவரது மூன்றவாது படத்திலேயே நூறு படங்களில் நடித்த அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெய் பீம் படத்தின் கதா பத்திரங்களில் வரும் செங்கேணி மகள், அரசு தரப்பு வழுக்குரைஞர், காவல் உதவி ஆய்வாளர், காவலர்கள் என அனைவரும் பாத்திரமாகவே மாறி நடித்துள்ளது பாராட்டத்தக்கது.
வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு அதிகாரி ஐ.ஜி பெருமாள் சாமியாக வரும் பிரகாஷ் ராஜ் பாதிக்கப்பட்ட மக்களை விசாரனை செய்யும்போது பாதிப்பின் துயரத்தையும், வலியையும் உணர்ந்து வெளிப்படுத்துவது சிறப்பாக அமைந்தது.
திரைப்படத்தை பொருத்தவரை பொதுவுடமை இயக்க ஊழியர்களுக்கு ஊக்கம் தந்தது மட்டும் அல்ல அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் தான் என பொதுமக்களையும் பேச வைத்துள்ளது.
கம்யூனிஸ்டுகளின் பணியை எதிர்மறையாக பேசி, ஒதுக்கி வைக்க அறிவுறுத்தும் குழும ஊடகங்களின் கள்ள மௌனத்தை சம்மட்டி கொண்டு அடித்து நொறுக்கி வருகிறது ஜெய்பீம் .
ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர் சூரியா – ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
தொடர்புக்கு: 94884 88339