ஜெய்பீம் படக்குழுவினருக்கு ஆதரவாக இருப்போம்
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் ந.நஞ்சப்பன் அறிக்கை
தருமபுரி: ஜெய்பீம் படக்குழுவினருக்கு ஆதரவாக இருப்போம் என தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ந.நஞ்சப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பழங்குடி மக்களுக்கு எதிரான அடக்கு, ஒடுக்கு முறைகளையும், சமூக அநீதிகளையும் மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஜெய்பீம் திரைப்படம் சிறப்பாக அமைந்துள்ளது.தயாரிப்பாளரும், நடிகருமான திரு.சூர்யா அவர்களுக்கும், இயக்குனர் திரு.ஞானவேல் அவர்களுக்கும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் பாராட்டுதலையும், நன்றியினையும் தெரிவித்து கொள்கிறது.அனைத்து வகையான ஒத்துழைப்பையும் நல்கி அவர்களுக்கு துணை நிற்போம். சில சில்லரை சச்சரவுகளுக்கு இடம் தராமல் இருந்திருக்க வேண்டும். இதை உணர்வுபூர்வமாக உணர்ந்து படத்தயாரிப்பாளரும், இயக்குனரும் முறைப்படுத்திய பின்னரும் கூட சூழ்நிலையை பயன்படுத்தி தவறான உள்நோக்குடன் சிலர் ஊதி பெரிதாக்குவது பயனற்றது. இத்தகைய முயற்சிகள் வெற்றி பெறாது.
இருளர் பழங்குடி மக்கள் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வாழ்கின்றனர்.தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் காடு மற்றும் மலைப்பகுதியில் வாழ்கின்றனர். வனங்கள் அழிக்கப்பட்ட பகுதிகளில் சிதறுண்டு வாழும் இம்மக்களின் வாழ்க்கை துயரம் நிறைந்ததாகும். எவ்வித பாதுகாப்பற்ற, கேட்பாரற்ற மக்களாக வாழ்கிறார்கள். பல இடங்களில் குடிமக்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. சமூக சான்றுகள் கூட வழங்க மறுக்கப்படும் சமூக அநீதி தொடர்கிறது.பழங்குடிகளான குறவர் மக்கள் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலும், சீர்மரபினர் பட்டியலிலும் வைக்கப்பட்டுள்ளனர். குற்றப் பரம்பரையினர் என ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பட்டியலிடப்பட்டனர். கொடூர தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட இச்சமூக மக்களை அழித்தொழிக்கும் செயலில் ஆங்கிலேய அரசு ஈடுபட்டது. இன்றைக்கும் தமிழ்நாட்டில் சீர்மரபினர் பெயரால் அரசால் அழைக்கப்டுகின்றனர். எங்கு குற்ற சம்பவங்கள், திருடுகள் நடந்தாலும் இம்மக்கள் மீது பழி சுமத்தி, வழக்கு புனைந்து காவல் துறையினரின் மிருகத்தனமான தாக்குதலில் வதைப்பட்டு, சீரழிக்கப்பட்டு சிறைக்குள் அடைக்கும் கொடூர நடவடிக்கைகள் நடந்தேறி கொண்டிருக்கின்றன. வதைப்படும் மக்களுக்கு ஆதரவாக மனிதாபிமானத்துடன் கைகொடுத்தால் வரவேற்கலாம். அதை விடுத்து இம்மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த படத்தின் நோக்கத்தினை சிதறடிக்கும் முயற்சிகள் மனிதத்தன்மையற்ற நடவடிக்கையாகும்.எதிர்ப்புகளை கண்டு தயங்காமல் தொடர்ந்து இத்தகைய படைப்புகளை அளித்து பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தில் தங்களது பங்கினை அளித்து தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். திரைப்பபடத்தின் பெயர் பழங்குடி மக்கள் புரிந்து கொள்ளும்படி வைத்திருந்தால் இன்னும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.