ஜூன் 19 – கோவில் மனைகளில் குடியிருப்போர், கடைகள் வைத்திருப்போரின் வாழ்வுரிமை கோரிக்கை மாநாடு
19.06.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள பொதிகை தொலைக்காட்சி நிலையம் அருகில் அண்ணா கலையரங்கில் கோவில் மனைகளில் குடியிருப்போர், கடைகள் வைத்திருப்போரின் வாழ்வுரிமை கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது.
தாய் தமிழ்நாட்டில் மக்கள்தொகை பெருக்கம் காரணமாகவும், தம் வாழ்வாதாரத்திற்காகவும் வேலைவாய்ப்பினைத் தேடியும், குடிபெயர்ந்து, தாய் திருநாட்டில் தலை வைத்துச் சாய்ந்து கொள்ள மனை நிலம் இல்லாத மக்கள், பராமரிப்பும், பாதுகாப்பும் இல்லாமல் காலி மனையாக, மேடுபள்ளமாகவும், புதர் மண்டியும், கல், மண் குவியலாகவும் இருந்த கிராம நத்தம், நத்தம் புறம்போக்கு, சர்க்கார் புறம்போக்கு மற்றும் கோயிலுக்கு சொந்தமான இடங்களில், அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தின் அனுமதியோடும், தங்கள் கடுமையான உழைப்பாலும், கடன் வாங்கி பணச்செலவு செய்தும் மனை நிலமாக்கி அதில் வீடு, கடை கட்டி குடும்பங்களாக வாழ்ந்து, அடிமனை நிலத்திற்காக கோவில் நிர்வாகத்திற்கு முறை தவறாது `பகுதி’ முறையில் பணம் செலுத்தி வந்துள்ளார்கள். இதில் மற்ற இடங்களில் குடிபெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் பட்டா பெற்று நிம்மதியாக வாழ்ந்து வரும் நிலையில், கோவில் மனைகளில் குடிபெயர்ந்தவர்கள் மட்டும் இன்றளவும் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.
அன்றாட உழைப்பில் கிடைத்த, அற்ப சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வந்த இவர்களுக்கு 1998ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை, மனைநிலத்தை சதுர அடி கணக்கில், அதன் சந்தை விலை மதிப்பில் கணக்கிட்டு வாடகை வசூலிக்க உத்தரவிட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டதை, சங்க பொதுச் செயலாளரும், அப்போதைய சட்டமன்ற உறுப்பினருமான தோழர் வை.சிவபுண்ணியம் சட்டமன்றத்தில், அப்போதைய முதல்வர், கலைஞர் மு. கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த உத்தரவு 27.4.2000ல் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், 2003ல் சட்டப்பிரிவுகள் 34, A, B, C, D புகுத்தப்பட்டு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சந்தை மதிப்பில் வாடகை வசூலிக்க வகை செய்யப்பட்டது. சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்த கோவில்மனை குடியிருப்போருக்கும், கடை வைத்திருப்போருக்கும் ஆறுதல் அளிக்கும் விதமாக 2007ல் அப்போதைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி 456 மற்றும் 2010ல் 298 அரசாணைகளை அறிவித்து காலம் காலமாக கோயில் மனைகளில் குடியிருந்து / கடை வைத்து வாழ்ந்து வருபவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தார்.
2016ல் மேற்கண்ட அரசாணைகளைப் புறந்தள்ளி மறுபடியும் சட்டப்பிரிவு 34 A-ன் படி சந்தை மதிப்பில் அறநிலையத்துறையால் வாடகை முன் தேதியிட்டு அறிவிக்கப்பட்டு, அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது பலமுறை முறையிட்டும் அறநிலையத்துறை கண்டு கொள்ளவில்லை.
தமிழ்நாடு கோவில்மனை குடியிருப்போர் சங்கத்தின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்ட தற்போதைய அரசு, தீர்வு காண, மூத்த அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக்குழுவை 9.12.2021ல் அமைத்து பரிசீலித்து வருகிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி தொகுதி) அறநிலையத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் 4.5.2022 அன்று பங்கு கொண்டு மிகச் சிறப்பாக நமது கோரிக்கைகளை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தார். அதற்கு அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே. சேகர்பாபு, கோவில் மனைகளில் குடியிருப்போர் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு நல்ல தீர்வு காணும் என்றும், அதுவரை கோவில் மனைகளில் வாழ்பவர்களை வெளியேற்ற இந்த அரசு அழுத்தம் தராது என்றும் உறுதியளித்ததை நன்றியோடு நினைவு கூறுகிறோம்.
கோயில் மனைகளில் குடியிருப்போர் கோரிக்கைகள்:
- கோயில் மனைகளில் குடியிருப்பவர்களையும், கடை வைத்திருப்பவர்களையும் ஒட்டு மொத்தமாக ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அவமதிப்பதை தடுக்க வேண்டும்.
- மனை நிலத்திற்கு 1998க்கு முன்பிருந்தபடி பகுதி முறையில் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- சதுர அடி கணக்கில் சந்தை மதிப்பில் வாடகை கணக்கிடும் அரசு உத்தரவு 34-A ரத்து செய்யப்பட வேண்டும்.
- தானமாகப் பெறப்படாத, கோயிலுக்கு சொத்துரிமை இல்லாத, இடங்களில் வசிப்போர் அறியாமையால் கோயிலுக்கு வாடகை செலுத்தியதாலேயே உரிமை கொண்டாடுவதை நிறுத்தி அங்கு வாழ்பவருக்கே மனைப் பட்டா வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
- இனாம் ஒழிப்பு சட்டப்படி ரயத்துவாரி முறையில் கோயில் பெயர் வருவாய்த் துறையில் தவறுதலாகப் பதியப்பட்டுள்ள, குடியிருப்போருக்கே சொந்தமான, கிராம நத்தம், குடிக்காணி, பட்டின நத்தம், பட்டினமனை, அரசு புறம்போக்கு போன்ற வகையான மனைகளில் வசிப்போருக்கு மனையை சொந்தமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோயில் மனைகளின் நில மதிப்பிற்கு மேலேயே வாடகையாகப் பணம் செலுத்தியுள்ள கோயில் மனைகளில் வாழ்வோருக்கு கருணை அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும்.
- நிபந்தனையின்றி பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அத்தியாவசிய தேவைகளான மின்சாரம், கழிவு நீர், குடிநீர் இணைப்பு பெற தடைவிதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- மனை நிலத்தை கோயில் உரிமையாக்கி, மேல் கட்டுமானத்தை விற்கவும், வாங்கவும் வங்கிக் கடன் பெறவும் ஏற்ற வகையில் உரிமைப்பட்டா வழங்கக் வேண்டும்.
- முறையாக பட்டா, இணைப்பட்டா வைத்துள்ளவர்களையும் அச்சுறுத்தி, அதிரடி நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- அறநிலையத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீதிமன்றங்களை பொது நீதிமன்றங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்.
மேலும், கலைஞர் மு கருணாநிதி முதல்வராகவும், தற்போதைய முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அப்போது துணை முதல்வராகவும் இருந்தபோது கோயில் மனைகளில் வாழ்வோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வழிவகைகள் செய்யப்பட வேண்டும். கருணை உள்ளத்துடன் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் தமிழ்நாடு அரசு மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கோரிக்கை மாநாட்டில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சரிந்து வரும் தங்கள் வாழ்வாதாரத்தினை நிலைநிறுத்திக் கொள்ள, ஏற்பட்டுள்ள இந்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, குடும்பம், குடும்பமாக கலந்து கொண்டு நம் பலத்தை நிரூபிக்கும் விதமாக இம்மாநாடு அமைய கோயில் மனைகளில் குடியிருப்போரும் / கடைகள் வைத்திருப்போரும் பெருமளவு கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டுமாய் மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு, தமிழக இந்து சமய திருக்கோவில்களின் வீட்டுமனை வாடகைதாரர்கள் சங்கம், தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கம், தமிழ்நாடு திருக்கோவில் கடைகள் கட்டிட வாடகைதாரர்கள் நல சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.