ஜவுளிக்கான ஜிஎஸ்டி உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் 4 ஆயிரம் ஜவுளிக் கடைகள் அடைப்பு
ஜவுளிக்கான ஜிஎஸ்டி உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் நேற்று 4 ஆயிரம் ஜவுளிக் கடைகள் அடைக்கப்பட்டன.
நூல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜிஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரம் ஜவுளிக் கடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தி செய்யும்நிறுவனங்கள் நேற்று கடைஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், ஈரோட்டில் நேற்று ஜவுளிக் கடைகள், கனி ஜவுளிச் சந்தை ஆகியவை அடைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் கலைச்செல்வன் கூறியதாவது:
மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள், தொடர்ந்து உயர்த்தப்படும் நூல் விலை, கரோனா பரவல் தடுப்புக்கான பொதுமுடக்கம் போன்ற காரணத்தால் ஜவுளி சார்ந்த அனைத்து தொழிலும் முடங்கியுள்ளன. விசைத்தறி, டையிங், பிரிண்டிங், பிளீச்சிங், காலண்டரிங், ஆயத்த ஆடை உள்ளிட்ட பிற ஆடை தயாரிப்பு, ஜவுளி விற்பனை என அனைத்து நிலையிலும் ஆர்டர்கள் பெற்று, குறைந்தபட்ச லாபம் கூட ஈட்ட முடியாமல், கடும் நஷ்டத்தை சந்திக்கிறோம்.
இந்நிலையில் ஜவுளிக்கான, 5 சதவீத ஜிஎஸ்டியை 12 சதவீதமாக உயர்த்தி உள்ளனர். இதனால், அனைத்து வகையான ஜவுளி தொழிலும் நஷ்டத்தையும், சிக்கலையும் சந்திக்கும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஜவுளி விலை உயரும்.
ஜவுளி தொழிலை நம்பி பல லட்சம் குடும்பங்கள் உள்ளதால், நூல் விலையை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உயர்த்த வேண்டும். ஜிஎஸ்டி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வகையான ஜவுளி சார்ந்த நிறுவனங்களும் கடையடைப்பில் ஈடுபடுகின்றன, என்றார்.
இதேபோல, கரூர் நெசவு மற்றும்பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம்(வீவிங் நிட்டிங் பேக்டரி ஓனர்ஸ் அசோசியேஷன்) சார்பில் கரூரில் உள்ள 200 ஜவுளிக் கடைகள் நேற்று அடைக்கப்பட்டுஇருந்தன. மேலும், கரூர் செங்குந்தபுரம், காமராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், வையாபுரி நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நெசவு ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும் நேற்று மூடப்பட்டுஇருந்தன. இதனால், ரூ.5 கோடி மதிப்புள்ள ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.