ஜப்பான் பொருளாதார மேம்பாட்டுக்காக 49000கோடி டாலர்
டோக்கியோ, நவ.21- கோவிட் 19 பாதிப்பிலிருந்து ஜப்பானின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 49000 கோடி டாலரை ஒதுக்குவதாக அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டில் கோவிட் பாதிப்பு ஏற்பட்டபிறகு ஜப்பான் அரசு வெளியிடும் மூன்றாவது அறிவிப்பு இதுவாகும். ஏற்கனவே பிரதமர்களாக இருந்த ஷின்சோ அபே மற்றும் யோஷிஹிடே சுகா ஆகிய இருவரும் நிதி ஒதுக்கீட்டை அறிவித்து இருந்தார்கள். 40 லட்சம் கோடி யென்னை ஒதுக்குவதாக சுகாவும், 38 லட்சம் கோடி யென்னை ஒதுக்குவதாக ஷின்சோ அபேவும் அறிவித்தனர்.
தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு மூலம் நிறைய செலவினங்களுக்கு அனுமதி தர அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு மக்களிடம் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வுகளை ஏற்படுத்தும் என்று பிரதமர் புமியோ கிஷிடா கூறியுள்ளார். வருமான வரம்பை நிர்ணயித்து 18 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப் போகிறார்கள். அதேபோல செவிலியர்கள் மற்றும் குழந்தைப் பராமரிப்பாளர்கள் ஆகியோருக்கு சம்பள உயர்வு கிடைக்கப்போகிறது. எதிர்பாராத அளவுக்கு இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் சுருங்கியதுதான் இந்த அறிவிப்புக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், கடந்த இரு அறிவிப்புகளும் பெரும் தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை என்று சில வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு அது போன்ற ஒன்றதாக மாறி விடக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் ஜப்பான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.