ஜனவரி 8, 2023 – தோழர் கீதா முகர்ஜி பிறந்தநாள் நூற்றாண்டு!
சீரிய கம்யூனிஸ்டாகவும், சிறந்த நாடாளுமன்றவாதியாகவும் திகழ்ந்த தோழர் கீதா முகர்ஜியின் பிறந்தநாள் நூற்றாண்டு ஜனவரி 8, 2023 அன்று தொடங்குகிறது.
‘கீதாதி’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்.
தோழர் கீதா முகர்ஜி 1924 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் கொல்கத்தாவில் பிறந்தவர் ஆவார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழுவின் செயலாளரும், புகழ்வாய்ந்த கம்யூனிஸ்ட் தலைவருமான தோழர் பிஸ்வநாத் முகர்ஜியை 1942 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் நாள் அன்று திருமணம் செய்து கொண்டார்.
கொல்கத்தாவில் உள்ள அஷுதோஷ் கல்லூரியில் படிக்கும் பருவத்திலேயே மாணவ செயல்பாட்டாளராகத் திகழ்ந்த தோழர் கீதா, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தலைவராக விளங்கினார்.
அவர் தனது 15வது வயதிலேயே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 1946 ஆம் ஆண்டில் கட்சியின் மேற்கு வங்க மாநில குழுவிற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், கட்சியின் தேசிய குழு, தேசிய நிர்வாகக் குழு மற்றும் தேசிய செயற்குழு ஆகியவற்றில் உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார். சுதந்திர போராட்டத்தின் போதும், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலங்களிலும் அவர் பலமுறை சிறைப்படுத்தப்பட்டார்.
பெண்கள் விடுதலைக்காகப் போராடிய மாபெரும் தலைவர் கீதா முகர்ஜி. இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்தியத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்ட இயக்கத்தின் முகமாக விளங்கியவர்.
1967 முதல் 1977 வரையில் மேற்குவங்க சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்தார். 1980 முதல் 2000 ஆண்டு வரையிலும் தொடர்ந்து 7 முறை பன்ஸ்குரா தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உழைக்கும் மக்கள் மற்றும் பெண்களின் உரிமைக்குரலாக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்து, அவர்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்கான ஒரு மேடையாக நாடாளுமன்றத்தைப் பயன்படுத்திய ஒரு தலைசிறந்த நாடாளுமன்றவாதியாகவும் அவர் திகழ்ந்தார்.
போற்றுதலுக்குரிய தோழர் கீதா முகர்ஜி, மார்ச் 4, 2000 அன்று காலமானார். அவர்தம் மறைவுக்கு தேசம் முழுவதும் துக்கம் அனுசரித்தது. காலனிய ஆட்சியில் இருந்து தேசம் விடுதலை அடைய வேண்டும் என்று மட்டுமல்லாமல் சுதந்திர இந்தியாவில் மக்கள் அனைவரும் அனைத்துவித சுரண்டல் மற்றும் அடிமைத்தனத்தில் இருந்தும் விடுதலை பெற வேண்டும் என்ற இலட்சிய நோக்குடன், அர்ப்பணிப்புணர்வு மற்றும் உறுதியுடன் அயராது உழைத்த சீரிய கம்யூனிஸ்டாக அவர் திகழ்ந்தார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மங்காத கீர்த்தியாகப் பட்டொளி வீசுகிறார் தோழர் கீதா முகர்ஜி!
நமது கட்சி அணிகள் தோழர் கீதா முகர்ஜியின் பிறந்தநாள் நூற்றாண்டைக் கொண்டாடத் தொடங்கட்டும்!
தோழமையுடன்,
டி ராஜா