‘ஜனசக்தி’ செய்தி எதிரொலி : சென்னை பல்கலைக்கழக உதவி பதிவாளர்கள் மீதான சாதிய வன்முறைக்கு முற்றுப்புள்ளி!
சென்னை பல்கலைக்கழகத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி உதவி பதிவாளராக பதவி உயர்வு பெற்று பணியில் சேர்ந்த 17 தலித் உதவிப் பதிவாளர்களின் மீது தொடர்ந்து நடைபெற்று வந்த சாதிய வன்கொடுமையையும் அதனைக் கண்டும் காணாமல் அனுமதித்து வந்த பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த வார ஜனசக்தியில் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
ஜனசக்தி வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த இக்கட்டுரை தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழக பதிவாளர்கள், துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு பகிரப்பட்டது.
ஜனசக்தி அச்சு ஊடகத்திலும் ஒரு பக்க கட்டுரையாக வெளியிடப்பட்டிருந்தது. இது சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் பேராசிரியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது
இக்கட்டுரையில் கண்டிக்கப்பட்டிருந்த சாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் பதிவாளர்களை உடனடியாக அழைத்து உங்கள் மீதான சாதிய சர்ச்சைகள் உடனடியாக நீக்கப்படும்
பெயர்ப்பலகை வழங்கப்படும்
அடையாள அட்டை மீண்டும் தரப்படும்
சம்பளம் மற்றும் இதர பிரச்சினைகள் உடனடியாக ஒரு வார காலத்திற்குள் தீர்க்கப்படும்
என்று உறுதி அளித்து இருந்தது.
இன்று (01.08.2022) திங்கட்கிழமை தலித் சமூகத்தைச் சார்ந்த 17 உதவிப் பதிவாளர் களுக்கும் அவர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்ட அடையாள அட்டைகள் திரும்ப வழங்கப்பட்டிருக்கின்றன.
மற்ற கோரிக்கைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மகிழ்ச்சியும் திருப்தியும் கொண்ட உதவி பதிவாளர்கள், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் நல்லகண்ணு மாநில செயலாளர் வழக்கறிஞர் கீ சு குமார் ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தார்கள்.
இதர கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படவில்லை என்றால் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் தோழர் நல்லகண்ணு தலைமையில் துணைவேந்தரை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலக்கை எட்டும் வரை போராட்டம் தொடரும்!
ஜனசக்தி இதழ் சார்பாக வெளியிடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களின் சாதிய பாகுபாடுகளுக்கு சாவு மணி அடித்திருக்கிறிர்கள்.
இது போன்ற அடக்குமுறை பேராசிரியர்களுக்கு மட்டுமல்ல பணி செய்கின்ற தலித் மற்றும் படிக்கின்ற மாணவர்களுக்கும் சாதிய கண்ணோட்டத்தோடு மதிப்பெண்கள் வழங்குவதும் மற்றும் சில அவமரியாதைகளை செய்து வருகிறார்கள் இதை கண்டித்து தாங்கள் விளக்கமாய் வெளிப்படுத்தமைக்கு நன்றி படைக்கின்றேன்