‘ஜனசக்தி’யின் ஒளிவீசும் அறிவுப் பாரம்பரியம்
தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராகக் கருதப்படும் எஸ்.வி.ராஜதுரை “அருஞ்சொல்” இணைய இதழில் அக்.6, 2022 தேதியிட்ட பக்கத்தில் “அறிவுப் பாரம்பரியத்தை இழந்து விட்டதா ஜனசக்தி” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
ஏஐடியூசி தேசியச் செயலாளர் வஹிதா நிஜாம் பாட்டாளி படிப்பு வட்டத்தில் நிகழ்த்திய உரையை பீட்டர் துரைராஜ் சுருக்கி எழுதி ஜனசக்தி இணைய இதழில் கடந்த 28.09.2022ல் வெளியிடப்பட்டுள்ளது. இக்கட்டுரை பற்றிதான் எஸ்.வி.ராஜதுரை தன் கருத்தை பதிவிட்டுள்ளார். வஹிதா பற்றியும், அவரது கருத்து பற்றியும் எஸ்.வி.ராஜதுரையின் விமர்சனத்திற்கு ஜனசக்தியில் வஹிதா நிஜாம் தனியாக எதிர்வினையாற்றி எழுதியுள்ளார்.
வஹிதா நிஜாம் கட்டுரையை மதிப்பீடு செய்யும் எஸ்.வி.ராஜதுரையின் கட்டுரையில் ஜனசக்தியின் அறிவுப் பாரம்பரியத்தின் மீது சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
“60, 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்த புளித்துப்போன வறட்டு சூத்திரங்களை இன்றுவரை சிலர் உச்சாடனம் செய்வதாக” சொல்கின்றார். மேலும், ‘புதிய’ மார்க்சிய கருத்துக்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் சொல்கின்றார். எஸ்.வி.ராஜதுரை எதை புளித்துப் போன வறட்டு சூத்திரங்கள் என சொல்கின்றார்?
யாருடைய கருத்துக்களை எந்தெந்த கட்டுரைகளில் ஜனசக்தி திரித்து கூறியுள்ளது என்பதை எஸ்.வி.ராஜதுரை தெளிவுபடுத்துவாரா?
எதைப் ‘புதிய’ மார்க்சியம் என்று சொல்கின்றார்? என்பதைப் பற்றி அருஞ்சொல்லில் உள்ள கட்டுரையில் எந்த விளக்கமும் இல்லை. அதை விளக்கும் வகையில் இக்கேள்விகளை எழுப்புவாரெனில் ஜனசக்தி விவாதிக்கத் தயாராக உள்ளது. அதன் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட ‘ஜனசக்தியின்’ அறிவுப் பாரம்பரியம் தொடர்கிறதா? என எஸ்.வி.ராஜதுரை எழுப்புகிற ஐயத்திற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? என முடிவு செய்யலாம் என்று ஜனசக்தி எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு சுட்டிக் காட்டுகிறது.
இவண்
ஆசிரியர் குழு – ஜனசக்தி