சோவியத் செங்கொடிக்கு பெர்லினில் ‘தடை’ – ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு!
செய்திக்குறிப்பு – தோழர் அட்ரியன் சான் வைல்ஸ் (சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்) பதிவைத் தழுவி ம. இராதாகிருஷ்ணன் எழுதியது
சோவியத் செஞ்சேனை பாசிச ஜெர்மனிக்கு எதிரான போரில், பெர்லின் நகரில் ஏப்ரல் 16 – மே 2, 1945 வரை பதினாறு நாட்கள் 3,50,000 வீரர்களைப் பலி கொடுத்து வெற்றிக்கொடி நாட்டியது.
கிழக்கத்திய போர் முனையில்தான் பாசிச ஜெர்மனியின் இராணுவ பலம் தவிடு பொடியாக்கப்பட்டது. கடுமையான சமர்களில் பாசிசம் முறியடிக்கப்பட்டது.
ஏப்ரல் 30 ஆம் தேதி பெர்லின் நகரில் ரைஹ்ஸ்டாக் கட்டடத்தின் மீது சோவியத் வீரர்கள் செங்கொடியைப் பறக்கவிட்டனர். பெர்லின் படையைத் தனிமைப்படுத்தினர். பாசிச தலைமை மத்தியில் பீதி கிளம்பியது. தான் இழைத்த கொடும் பாதகச் செயல்களுக்காக பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஹிட்லர் ஆளானார்.
முன் நிபந்தனை எதுவும் இன்றி சரணடைவது குறித்து , 1945 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி மத்திய ஐரோப்பிய நேரப்படி இரவு 11.01 மணிக்கு போர் நடவடிக்கையை நிறுத்துவது, தளவாடங்களை ஒப்படைப்பது, செஞ்சேனை, நேசநாட்டு படைகளின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவது, ஐ.நா சர்வதேச நியதிகளுக்கு தடையில்லை உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி சரணாகதி ஒப்பந்தம் கையெழுத்தானது. சோவியத் தலைமை மே 9 ஆம் நாள் பொது விழாவாக, வெற்றித் திருநாளாக அறிவித்தது.
ஜெர்மானிய எழுத்தாளர் தோமஸ் மான் “பேய் ஒன்று கொல்லப்பட்ட இந்நேரம் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமின்றி ஜெர்மனிக்கும் மகத்தானதாகும். தேசிய சோசலிசம் என்ற பயங்கரமான, அசாதாரணமான ஒரு விபரீதம் மாண்டது. ஜெர்மனியானது குறைந்த பட்சம் ஹிட்லரின் நாடு என்றழைக்கப்படும் சாபத்திலிருந்து தப்பியது” என்றெழுதினார்.
இத்தகைய நிலையில் தான் ஜெர்மானிய மக்கள் பாசிச ஹிட்லரிடம் இருந்து ஜெர்மனியை மீட்டுத் தந்த சோவியத் நாட்டிற்கு தங்கள் நன்றியைப் பறைசாற்றி ஒவ்வொரு ஆண்டும் மே 8, 9 தேதிகளில் சோவியத் வீரர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்; சோவியத் செங்கொடிக்கு வணக்கம் செலுத்துகின்றனர்.
ஆனால், தற்போது போர் மற்றும் பாசிசத்தில் இருந்து ஜெர்மானிய மக்களுக்கு விடுதலை பெற்றுத் தந்த சோவியத் செங்கொடிக்கு தடை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுவான உத்தரவு ஒன்றின் மூலம், பெர்லின் நீதிமன்றங்கள் பெர்லின் காவல்துறைக்கு , செங்கொடியை (சோவியத் யூனியன் மற்றும் செம்படையின்) பொது இடங்களில், கட்டிடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களுக்கு அருகில் கட்டுவது, எடுத்துச் செல்வது அல்லது தொங்கவிடுவதைத் தடை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளன.
குறிப்பாக, இந்த ஆண்டு 2022 மே 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சோவியத் கொடி தடை செய்யப்பட்டது. இதற்கு எதிராக ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி GKU வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக, அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:
இந்த முடிவானது மே 8 (விடுதலை நாள்) மற்றும் மே 9 (வெற்றி நாள்) நினைவேந்தல்களை வேண்டுமென்றே இழிவுபடுத்துகிறது. போர் மற்றும் பாசிசத்தின் முடிவுக்கு வழிவகுத்த தியாகங்களை நினைவுகூரும் சர்வதேச தொழிலாளி வர்க்கத்தின் மீதான இந்த வெளிப்படையான தாக்குதலுக்கு எதிராக (GKP) ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி அவசர முறையீட்டை தாக்கல் செய்தது. ஆனால் பெர்லின் நிர்வாக நீதிமன்றம் மற்றும் உயர் நிர்வாக நீதிமன்றத்தால் இந்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது.
இந்த முடிவுகளுக்குக் கூறப்பட்ட காரணங்கள் முற்றிலும் தன்னிச்சையானவை மற்றும் மூர்க்கத்தனமானவை. பெர்லின் அதிகாரிகள் சோவியத் செங்கொடியையும்,(சுத்தியலும் அரிவாள்’) சோவியத் செம்படையையும் ‘பாசிச’ சின்னமாக அறிவித்தனர். இது குறித்த விவாதத்தை அனுமதிக்கவில்லை. நாஜி ஜெர்மன் மரண முகாம்களின் கொடுங்கோன்மை, அடக்குமுறை மற்றும் துன்புறுத்தலுக்கு எதிராகப் போராடி, சோவியத் செம்படை ‘விடுதலை’ பெற்றுத் தந்ததைப் பற்றி எந்த விவாதமும் அனுமதிக்கப்படவில்லை. ‘நவீன’ ரஷ்ய இராணுவம் இன்னும் இந்த செங்கொடியை சுமந்து வருவதால், பெர்லின் நீதிமன்றங்கள் இவ்வாறு தீர்ப்பளித்தன. இந்தக் கொடியை இனி ‘சட்டப்பூர்வமாக’ பொதுவில் கொண்டு செல்ல முடியாது (அல்லது காட்ட முடியாது).
பெர்லின் நீதிமன்றங்கள் மற்றும் காவல்துறையின் பொது ஆணையின் ஏற்றுக்கொள்ள முடியாத தடைகள் நீக்கப்பட வேண்டும். சட்டப் போராட்டத்திற்கு GKP மக்கள் ஒற்றுமையைக் கோருகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சோவியத் யூனியன் செம்படை இருந்தால் உக்ரைனில் போர் நடந்து இருக்காது என்று சுட்டிக்காட்டி ஜிகேபி சரியான அறிக்கையை வெளியிட்டது. பெர்லின் அதிகாரிகள் இந்த அறிக்கையை ரஷ்ய ஆக்கிரமிப்புக்கான ஆதரவின் வெளிப்பாடாக, ரஷ்ய அரசியல் கட்டுப்பாட்டின் பரவலாக, இறுதியில் உக்ரைனில் “ஒரு ஆக்கிரமிப்புப் போருக்கு ஒப்புதல்” என்பதாகக் கருதுகின்றனர்.
GKP யைப் பொறுத்தவரை செஞ்சேனையின் நினைவு நாட்களை இழிவுபடுத்துவதையோ அல்லது ஊழல் நிறைந்த நீதிமன்றத் தீர்ப்புகளையோ ஏற்கவில்லை. ஜி.கே.பி. தொடர்ந்து சட்டரீதியாகப் போராடும் என்று அக்கட்சி திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
போர் மற்றும் பாசிசத்தில் இருந்து உலகை விடுவிப்பதில் சோவியத் ஒன்றியமும் செம்படையும் மிகப்பெரிய (முக்கியமான) பங்கைக் ஆற்றி இருக்கின்றன. அதனால் தான் இன்றும் சொல்கிறோம், நாளையும், என்றென்றும் சொல்வோம் : “சோவியத் செம்படை வீரர்களுக்கு நன்றி!” இவ்வாறு ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி முழங்குகிறது.