சோத்துக்கான போராட்டம் இல்லை.! நியாயம் வேண்டி வந்துள்ளோம்! – நா பெரியசாமி Ex-MLA ஆவேசம்!

விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட தேற்குணம் என்ற ஊரில் கடந்த 01.08.2022 ஆம் தேதி வீரன் கோவில் தேர்த்திரு விழா நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு குற்றச் சம்பவம் நடந்துள்ளது.
தேற்குணம் , வீரன் கோவில் வீதியில் செல்வகுமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது தாயார் திருமதி அஞ்சலா ஆச்சி வீட்டில் இருந்துள்ளார். கடந்த 01.08. 2022 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் அதே ஊரைச் சேர்ந்த அன்பழகன் (த/பெ ராமமூர்த்தி) என்பவரும், அவருடன் வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பலும் அஞ்சலா ஆச்சி வசித்து வரும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, செல்வகுமாரைக் காரணமின்றித் தாக்கும் வன்முறையில் ஈடுபட்டனர். மகனை வன்முறை கும்பலிடம் இருந்து காப்பாற்ற முயன்ற அஞ்சலா ஆச்சியை, அந்த குடிபோதை குமபல் வெறியோடு கடுமையாகத் தாக்கியுள்ளது.
இந்தக் குற்றச் சம்பவம் தேர்த்திருவிழா பாதுகாப்பு (பந்தோபஸ்து) பணியில் ஈடுபட்டிருந்த கிளியனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வேலுமணி மற்றும் காவலர்கள் கண்முன் நடந்துள்ளது.
குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை தடுக்கவோ, அவர்களைக் கைது செய்யவோ காவல்துறையினர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.
வன்முறை கும்பல் தாக்கப்பட்டதில் கடுமையாக பாதிக்கப்பட்ட செல்வக்குமார், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் இரண்டு நாள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று, வீடு திரும்பியுள்ளார்.
தேற்குணம் கிராமத்தில் நடந்த குற்றச் சம்வத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி பிரதிநிதிகள் காவல் நிலையத்தை அணுகி முறையிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை உதவி ஆய்வாளர், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை அழைத்து, பாதிக்கப்பட்டவர்கள் மீது ( செல்வக்குமார், அஞ்சல ஆச்சி, சீ.வீரப்பன், இரா.ராஜேஸ்குமார், கஇராஜேந்திரன், சி. சிவராமன், கி. வீரமுத்து > இதில் முதல் இருவரை தவிர மற்றவர்கள் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அல்ல) புனைவுப் புகார் பெற்று வழக்கு பதிவு செய்துள்ளார்.
கிளியனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளரின் தவறான நடவடிக்கை கிளியனூர் பகுதியில் சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்துள்ளது. அவர் தான் பிரச்சினைக்கு முதன்மை காரணம் என்பதற்கு கள ஆய்வு சாட்சியம் கூறுகின்றது.
கிளியனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களின் சட்ட அத்துமீறலை தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, நியாயம் கேட்க 24.09. 2022 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது .
ஜனநாயக ரீதியாக அனுமதிக்க வேண்டிய போராட்டத்தை அனுமதிக்க மறுத்ததும் ஒரு அத்துமீறல்தான். சரி, போராட்டத்தைத் தவிர்க்க உரிய முயற்சிகளையும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் எடுக்கவில்லை. ஆனால், போராட சென்றவர்களைக் கைது செய்து, காவலில் எடுத்து, ஒரு திருமண மண்டபத்தில் வைத்துள்ளது.
காவல் துறை காவலில் வைக்கப்பட்ட 25 பெண்கள் உட்பட 91 பேரும், அவர்கள் வழங்கிய மதிய உணவை ஏற்க மறுத்து விட்டோம்.
நாங்கள் யாரும் சோறு கேட்டு வரவில்லை; நியாயம் கேட்டு வந்துள்ளோம். நியாயம் வழங்கு என உறுதியுடன், காவல்துறை . வழங்கிய உணவை ஏற்க மறுத்து விட்டனர்.
அதேசமயம் உணவுக்கு ஏற்பாடு செய்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.