சேலம் – காட்டூர் ஆறு.அழகப்பன் மறைவுக்கு இரங்கல்
சேலம் மாவட்டத்தைச் சார்ந்த காட்டூர் ஆறு.அழகப்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட முன்னோடியும், மூத்த உறுப்பினருமான தோழர்.ஆறு.அழகப்பன் (78) இன்று (03.11.2022) மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார் என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சேலம் மாவட்டம், பனைமரத்துப்பட்டி ஒன்றியம், கட்சி குடும்பங்கள் அடர்த்தியாக வாழ்ந்த காட்டூரில் வசிக்கும் விவசாயக் குடும்பத்தில் 1944 ஆம் ஆண்டில் பிறந்த ஆறு.அழகப்பன், தனது இளம் வயதில் விவசாயிகள் சங்கத்தில் சேர்ந்து செயல்பட்டவர். தொடர்ந்து 1964 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, இறுதி மூச்சு வரை கட்சியில் கொள்கை பிடிப்போடும், உறுதியாகவும் செயல்பட்டவர். 1970 ஆண்டு கட்சி நடத்திய நில மீட்சி போராட்டத்தில் கலந்து கொண்டு, சிறை சென்றவர்.
இவரது வாழ்விணையர் கமலாவும் கட்சி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு அ.மோகன், அ.கோவிந்தன் என இரு மகன்களும், பழனியம்மாள் என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் மூத்த மகன் அ.மோகன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் என்பது குறிப்பிடத் தக்கது.
மகன் அ.மோகனின் மகன்களுக்கு கம்யூனிசம், லெனினிசம், சோசலிசம் என பெயர் சூட்டி கொள்கை பிடிப்பை வெளிப்படுத்தியவர்.
தோழர்.அழகப்பன் சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றியும், வயது முதிர்வு காரணமாகவும் காலமானார். அவரது மறைவு ஆழ்ந்த வேதனை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் கூறி, அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், காட்டூர் பகுதி கட்சித் தோழர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.