செப்டம்பர் 11: சால்வடோர் அயந்தேவுக்கு வீரவணக்கம்!

செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதலில் பலியான சுமார் 3 ஆயிரம் நபர்களுக்கு உலக மாந்தர் தம் அஞ்சலியைச் செலுத்துகிறார்கள். இந்தத் தருணத்தில், 1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று சிலி நாட்டில் அமெரிக்க உதவியுடன் நடைபெற்ற இராணுவ கலகத்தில் மரணமடைந்த பல்லாயிரக்கணக்கான மக்களையும் நாம் நினைவு கூற வேண்டியுள்ளது. இந்தக் கலகத்தின் போது, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் புகழ்மிக்க தலைவர்களில் ஒருவரான சிலி நாட்டு அதிபர் சால்வடோர் அயந்தே படுகொலை செய்யப்பட்டார்.
இந்த இராணுவ கலகம் நிகழ்வதற்கு முன்பு வரை, பல தசாப்தங்களாக, ஸ்திரத்தன்மையும், காலக் கிரமப்படியான தேர்தல்களும் நடைபெறும் ஒரு வலுவான ஜனநாயகப் பாரம்பரியமிக்க நாடாக சிலி திகழ்ந்தது. பல்வேறு இராணுவ கலகங்கள் இலத்தீன் அமெரிக்காவில் நிகழ்ந்து வந்தபோதும், சிலியில் ஜனநாயகம் உயிர்ப்புடன் விளங்கியது. 1970 செப்டம்பரில் மக்கள் நலன் சார்ந்த செயல்திட்டத்துடன் ஒரு சோஷலிஸ்டான சால்வடோர் அயந்தே சிலி நாட்டில் அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட போது, இந்தச் சூழல் மேலும் வலுவடைந்தது.
பொது சுகாதார மருத்துவரான அயந்தே, சோஷலிஸ்ட் கட்சியின் தலைவராக உருவெடுத்தார். இதர இடதுசாரி சக்திகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார். ஏழை எளிய மக்களின் நலனுக்காகவே நாட்டின் இயற்கை வளங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானித்தார். சால்வடோர் அயந்தே தலைமையிலான அரசாங்கம் தாமிர சுரங்கங்களை அரசுடைமை ஆக்கியது; நிலச் சீர்திருத்தங்களை முன்னெடுத்தது.
சால்வடோர் அயந்தேவின் மக்கள்நலன் சார்ந்த செயல்திட்டத்தை ஆக்கிரமிப்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்காவின் நிக்சன் கிசிஞ்ஜெரின் அரசாங்கம் மிகக் கடுமையாக வெறுத்து ஒதுக்கியது. முன்னதாக, சால்வடோர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவது சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமான முறைகளிலும் தடுத்து நிறுத்திட அமெரிக்காவும் அதன் உள்நாட்டு நேச சக்திகளும் கடுமையாக முயன்றன.
சிலி நாட்டு மக்கள் அளித்த ஜனநாயக ரீதியிலான தீர்ப்பை ஏற்க மறுத்த அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள், அயந்தே அரசாங்கத்தைக் கவிழ்த்திட தொடர் நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். அந்நாட்டின் மீது வெளிப்படையாக அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடைகளை விதித்தனர்.
“அயந்தே அரசாங்கம் தூக்கியெறியப்பட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியுடன் இருக்கும் அதே வேளையில், இதில் அமெரிக்காவின் ஈடுபாடு மறைக்கப்பட வேண்டும்.” என்று பின்னாளில் வெளியான அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ வின் செய்தி ஆவணம் ஒன்று குறிப்பிடுகிறது.
இராணுவ பயிற்சிக்காக அமெரிக்காவிற்கு வழக்கமாகத் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வந்த இராணுவ அதிகாரிகள் தான் கலகத்தின் முக்கியஸ்தர்களாக இருந்தனர் என்பதும் நிரூபணமானது. கலகத்தில் இராணுவ அணியினர் திட்டமிட்டபடி சேர்ந்து கொள்வதற்கு ஏதுவாக ஏவுகணை உள்ளிட்ட உயர் ரக ஆயுதங்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டன. தேசப் பொருளாதாரத்தைச் சீரழித்திட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; மேலும், அதன் காரணமாக எழும் அதிருப்தியை அயந்தே அரசாங்கத்திற்கு எதிராக மடைமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; பல்வேறு தடைகள் மற்றும் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டன.
1971 ஆம் ஆண்டு, பிடல் காஸ்ட்ரோ 4 வார கால பயணமாக சிலி சென்றிருந்தார். அந்தப் பயணத்தின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அயந்தேவுக்கு பிடல் காஸ்ட்ரோ அறிவுறுத்தியதாக தெரிகிறது. அடுத்த ஆண்டில், அயந்தே கியூபாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காஸ்ட்ரோவைச் சந்தித்தார். கியூபாவுடனான நெருக்கம், அமெரிக்க கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடிபணிய மறுத்தது ஆகியவை அவருக்கும், அவரது அரசாங்கத்துக்குமான எதிர்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது.
1973 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இராணுவ கலகம் முறியடிக்கப்பட்டது. பின்னர், செப்டம்பர் 11 அன்று இரண்டாவது முறையாக இராணுவ கலகம் மேற்கொள்ளப்பட்டது. இதில், அதிபர் சால்வடோர் அயந்தே அதிபர் மாளிகையில் சுற்றி வளைக்கப்பட்டார். நாட்டை விட்டு வெளியேற மறுத்த அவர், இறுதிவரையில், போராடுவேன் என்று உறுதிபட முழங்கினார்.
அதிபர் மாளிகையை வெடிகுண்டு வீசித் தகர்த்திட விமானப்படை பயன்படுத்தப்பட்ட வெகுசில இராணுவ கலகங்களில் இது ஒன்றாகும். அமெரிக்க உதவியுடன் உள்நாட்டுக் கலகக்காரர்கள் இராணுவ பலத்தைப் பெருமளவு அதிகரித்துக் கொள்ள முடிந்தது.
அதிபர் மாளிகையும், வானொலி நிலையமும் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளான நிலையில், நாட்டு மக்களிடையே அதிபர் அயந்தே தனது இறுதி உரையை நிகழ்த்தினார். “நான் பதவி விலகப் போவதில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்திற்கான பயணத்தில், மக்கள் மீது கொண்டுள்ள பற்றுறுதி மற்றும் விசுவாசத்திற்காக நான் எனது உயிரை விலையாகக் தருகிறேன். பல்லாயிரக்கணக்கான நல்ல மனங்களில் நாங்கள் விதைத்துள்ள மாற்றத்திற்கான விதைகள் நிச்சயம் ஒருநாளும் வீணாகிப் போய்விடாது என்று நான் அவர்களிடம் கூறுகிறேன்.”
மேலும் தொடர்ந்த அயந்தே, “அவர்களிடம் படைபலம் உள்ளது. நம் மீது அவர்களால் ஆதிக்கம் செலுத்த இயலும். ஆனால், வரலாறு நம்முடையது ஆகும். மக்கள் வரலாற்றை உருவாக்குபவர்கள் ஆவர்.” என்று வலியுறுத்தினர்.
நெருக்கடியான சூழலிலும் கூட, தனது நாட்டு மக்களை எச்சரிப்பதில் கவனம் செலுத்திய அயந்தே, அந்நிய மூலதனம், ஏகாதிபத்தியம் மற்றும் பிற்போக்குத்தனம் ஆகியவை இணைந்து, இராணுவம், பாரம்பரியத்தை வீழ்த்துவதற்கான சூழலை உருவாக்கிவிட்டது என்று கூறினார்.
வெடிகுண்டுகளும், துப்பாக்கித் தோட்டாக்களும் தன்னைச் சூழ்ந்திருந்த நேரத்திலும், “சிலி நீடூழி வாழ்க! மக்கள் நீடூழி வாழ்க! தொழிலாளர்கள் நீடூழி வாழ்க! இதுவே எனது இறுதி முழக்கம்! எனது உயிர் தியாகம் வீணாகாது என்று உறுதியாக நம்புகிறேன்.” என்று அயந்தே முழங்கினார்.
(பரத் தோக்ரா வலைதளம் ஒன்றில் எழுதிய கட்டுரையிலிருந்து…)