சுதந்திர தின விழா பாஜகவின் பரப்புரை கூட்டமா?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா காட்டம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் சேலத்தில் ஆகஸ்ட் 14 – 17 வரை நடைபெற்றது. இதில் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டார். இடையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியது வருமாறு:
“சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, தான் பிரதமர் என்ற கண்ணியத்துடன், பொறுப்புடன் பேசவில்லை. அதனை பாஜகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டமாகவே மாற்றிவிட்டார். சுதந்திர தினக் கூட்டத்தை எதிர்க்கட்சிகளை வசைபாடுவதற்கான கூட்டமாக நினைத்துப் பேசியிருக்கிறார்.
பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியில் நாடு நிலைகுலைந்து உள்ளதை மக்கள் அறிவார்கள். பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது? குறிப்பாக, ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள், கறுப்புப் பணம் வெளிக்கொண்டு வரப்படும், ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் பணம் போடப்படும் என்பதெல்லாம் என்ன ஆனது? என்று மக்கள் கேட்கிறார்கள். இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும். உள்நாட்டுப் போரில் மக்கள் கொல்லப்படுகின்றனர். பெண்கள் சொல்ல முடியாத வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
பிரதமர் வாய்மூடி மௌனமாக இருப்பது மணிப்பூர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக இல்லை. அங்கு பதற்றம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மணிப்பூர் முதலமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் பிரதமர் மோடியும் அமீத்ஷாவும் அதற்குக் தயாராக இல்லை. மணிப்பூரில் ஒரு பகுதியை மற்றொரு பகுதிக்கு எதிராக நிறுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்றனர்.
தேர்தல் களம் உருவாகிவிட்டது. சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடியின் பேச்சு தேர்தலுக்கான பரப்புரையாகவே இருந்தது. மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் அனைத்தும் நாட்டை காப்பாற்ற வேண்டும் பாஜகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்ட வேண்டும் என்ற கருத்து அகில இந்திய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. எதிரணிகள் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளோம்
‘இந்தியா’ கூட்டணியின் முதல் கூட்டம் கர்நாடகா தேர்தலுக்குப் பிறகு பாட்னாவில் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. மூன்றாவது கூட்டம் ஆகஸ்ட் 31 செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெற இருக்கிறது.
ஒரு கூட்டத்திற்கும் மற்றொரு கூட்டத்திற்கும் இடையே கூட்டணியின் செயல்பாட்டில், இணக்கத்தில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கட்சிகளை எப்படி இணைப்பது? தேர்தல் பணிகளை எப்படி கட்டமைப்பது? என்பது குறித்தும் பேசப்படுகிறது. இந்தக் கூட்டங்கள் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இவையெல்லாம் பிரதமர் மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் நாடாளுமன்ற உரையில், அதிர்ச்சியும் ஆற்றாமையும் வெளிப்படுவதை காண முடியும். தேர்தல் பற்றிய பயம் அவர்களுக்கு வந்துள்ளது.
நரேந்திர மோடி அவர்கள் சுதந்திர தின கொடியேற்றி வைத்து ஆற்றிய உரை வெற்று வாய்ச்சவடால். அவர் மீண்டும் பிரதமராகி விடுவேன் என்று பேசுகிறார். அவராக எப்படிப் பிரதமராக முடியும்? அதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். முக்கியமாக இது தேர்தல் பரப்புரை அல்ல, சுதந்திர தின விழா உரை. இங்கு பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர் போன்று உரையாற்றக் கூடாது. பிரதமர் என்ற முறையில்தான் பேச வேண்டும். பிரதமருக்குரிய கண்ணியத்துடன் பேச வேண்டும். பிரதமர் தரும் புள்ளிவிவரங்கள் தவறானவை, இட்டுக்கட்டப்பட்டவை.
தோல்வி பயத்தில் வன்முறை மூலம் கலவரச் சூழலை உருவாக்குகிறார்கள். மணிப்பூரில் நிலைமை மிக மோசமாக இருக்கிறபோது, ஹரியானாவில் ஏன் வன்முறையை உருவாக்க வேண்டும்? இன்றைக்கு சிறுபான்மையினர் சமூக புறக்கணிப்பு செய்யப்படுகிறார்கள். முஸ்லிம்களின் கடைகளில் எதுவும் வாங்கக் கூடாது. முஸ்லிம்களின் ஓட்டல்களில் போய் சாப்பிடக்கூடாது என்ற நிலைக்கு இவர்களுடைய மத வெறி அரசியல் சென்றிருக்கிறது. மக்களைப் பிளவுபடுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் வென்று விடலாம் என்பது இனி நடக்காது.
பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்யும் பக்குவமும் அரசியல் முதிர்ச்சியும் எங்கள் அணியில் உள்ள கட்சிகளுக்கு இருக்கிறது. தற்போதைய நிலையில், பாஜக ஆட்சியை வீழ்த்துவது; நாட்டைக் காப்பது என்பதுதான் உடனடிக் கடமை. தலைமை யார் என்பது பிரச்சனையே அல்ல. பாஜகவை வீழ்த்தி மாற்று ஆட்சி அமைக்கின்ற சூழல் வரும் போது, எங்கள் அணியில் உள்ள தலைவர்கள் கூடி முடிவெடுப்போம். குறைந்தபட்ச வேலைத்திட்டத்தை உருவாக்குவோம். அரசாங்கம் செயல்படும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்போம்” என்று டி.ராஜா தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், “இரண்டு கோடிப் பெண்களை லட்சாதிபதி ஆக்குவோம் என்று பிரதமர் மோடி பேசுகிறார். இதைப் பெண்களே நம்ப மாட்டார்கள். மகள்களைக் காப்போம்! மகள்களைப் படிக்க வைப்போம்! என்கிறார். இன்றைக்கு மகள்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற கதி என்ன? மல்யுத்த வீராங்கனைகளுக்கு, மணிப்பூர் தாய்மார்களுக்கு நேர்ந்த வன்கொடுமைகள் பற்றி பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்?
நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருக்கிறது. அப்படி இருந்தும் நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஏன் சட்டமாக்கவில்லை? அந்த மசோதாவை நிறைவேற்றி பெண்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க பிரதமர் முன்வருவாரா?” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பினார்.