சீன விமான நிலையத்தை நொய்டாவுக்கு கொண்டுவந்த மோடி அரசு!
லக்னோ, நவ. 26 – மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவின் ஜெவார் பகுதியில், நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு வியாழக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது, நொய்டா சர்வதேச விமான நிலையம்இ (Noida International Airport) ந்தியாவின் மிகப்பெரிய விமான பராமரிப்பு மையமாக இருக்கும் என்று மோடி தெரிவித்தார். இந்த திட்டம் காரணமாக தில்லி – என்சிஆர், மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயனடைவார்கள் என்றும் குறிப்பிட்டார். ஜோதிராதித்ய சிந்தியா, அனுராக் தாக்குர் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அமைச்சர்களும், பாஜக தலைவர்களும், ஆசியாவின் மிகப் பெரிய விமான நிலையமாக மாறவிருக்கும் நொய்டா சர்வதேச விமான நிலையம் இதுதான்… என்று சில புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்தனர்.
தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை விட பெரியதாக சுமார் 1,330 ஏக்கர் பரப்பளவில் அமையும் நொய்டா விமான நிலையம், 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் அவர்கள் ஜம்பம் அடித்தனர். ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கான, @MyGovHindi-யிலும் கட்டி முடிக்கப்படவுள்ள நொய்டா விமான நிலையத்தின் தோற்றம் இதுதான் என்று புகைப்படம் ஒன்று வெளியானது. பாஜக-வினரும் வழக்கம்போல இதனை சமூகவலைதளங்களில் பகிர்ந்து மோடி புகழ்பாடினர். இந்நிலையில்தான், @MyGovHindi டுவிட்டர் பக்கத்திலும், பாஜக அமைச்சர்களின் பக்கத்திலும் வெளியான தனித்துவமான நட்சத்திர மீன் வடிவமைப்பு கொண்ட அந்த விமான நிலையப் புகைப்படம், 2019-ஆம் ஆண்டு கட்டித் திறக்கப்பட்ட சீனத் தலைநகரில் உள்ள டாக்சிங் சர்வதேச விமான நிலையத்தின் வடிவமைப்பு என்பது அம்பலமாகியுள்ளது.
உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான ‘ஆல்ட்நியூஸ்’ (AltNews)-இன் இணை நிறுவனர் முகமது ஜுபைர் இதனைச் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதே உண்மையை, ‘இந்தியா டுடே’யின் உண்மைச் சரிபார்ப்புக் குழுவும் கண்டறிந்துள்ளது. பாஜக தலைவர்களால் டுவீட் செய்யப்பட்ட வீடியோவில் பயன்படுத்தப்பட்ட புகைப்படம் டாக்சிங் விமான நிலையத்தின் இணையதளத்திலும் கிடைப்பதுடன், ‘தி கார்டியன்’ பத்திரிகை 2019-ஆம் ஆண்டே அந்த புகைப்படத்தை ஒரு கட்டுரையில் பயன்படுத்தி இருப்பதை ‘ஆல்ட்நியூஸ்’, ‘இந்தியா டுடே’ ஆகியவை உறுதிப்படுத்தியுள்ளன. தற்போது உண்மை வெளியே தெரியவந்ததை அடுத்து, @MyGovHindi டுவிட்டர் பக்கத்திலிருந்து அந்தப் புகைப்படத்தை மோடி அரசு அவசர அவசரமாக நீக்கியுள்ளது. எனினும் அது நீக்கப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டை டுவிட்டரில் பகிர்ந்து, சமூகவலைதளவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.