கட்டுரைகள்

சீனாவை விஞ்சுகிறது இந்தியா – மக்கள் தொகையில்

ஆனந்த் பாசு

உலக மக்கள்தொகை, 1987 ஆம் ஆண்டு, ஜூலை 11ஆம் தேதி, 500 கோடியை எட்டியது. அந்த தினம், இன்றளவும் உலக மக்கள்தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை ஜூலை 11 அன்று 36-வது உலக மக்கள்தொகை தினத்தன்று, ஐக்கிய நாடுகள் (ஐ.நா) நிறுவனம், ‘உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2022’ எனும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது, இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்குக் காரணம், உலக மக்கள் தொகை, இந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதியன்று, 8 பில்லியனை, (அதாவது 800 கோடியை). எட்டும் என்று கணித்துள்ள இந்த அறிக்கை, 2023 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை விஞ்சும் போக்கில் இந்தியா உள்ளது என்பதையும் காட்டுகிறது.
2080 களில் 10.4 பில்லியன் மக்கள் தொகை என்ற உச்சத்தை எட்டுவதற்கு முன், 2030 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 8.5 பில்லியனாகவும், 2050ல் 9.7 பில்லியனாகவும் வளரக்கூடும் என்றும் இந்த கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மெதுவாக அதிகரித்து வந்த உலக மக்கள்தொகை, அதன்பின் வெகுவேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால், 1950 ஆம் ஆண்டிலிருந்து உலக மக்கள்தொகை, சற்று மெதுவான விகிதத்தில் வளர்ந்து வருவதாகவும், 2020 ஆம் ஆண்டில், இது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்துள்ளது என்றும் இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
கருவுறுதல், பல நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. பெண்ணின் வாழ்நாள் கருவுறுதல் விகிதம் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் அல்லது பிரதேசங்களில், இன்று உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பெருந்தொற்று, மக்கள்தொகை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாடுகளில், இந்தப் பெருந்தொற்றின் தொடர்ச்சி, குறுகிய கால மக்கட்தொகைக் குறைப்புகளை உருவாக்கியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில் 72.9 ஆக இருந்த உலகளாவிய மனித ஆயுள் எதிர்பார்ப்பு (Life Expectancy), 2021 ஆம் ஆண்டில் 71 ஆண்டுகளாகக் குறைந்துள்ளது.
2050 ஆம் ஆண்டு வரை, உலக மக்கள்தொகை அதிகரிப்பில் பாதிக்கு மேல், இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளில் குவிந்திருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்த நாடுகளின் பட்டியலில் சீனா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐ.நா.வின் துணைப் பொதுச்செயலாளர் லியு ஜென்மின், “விரைவான மக்கள்தொகை வளர்ச்சி வறுமையை ஒழிப்பது, பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவது, சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாடு போன்றவற்றைக் கடுமையாக பாதிக்கும்” என்று எச்சரித்துள்ளார்.
ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளிலும், அதே போல் ஆசிய, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் மற்றும் கரீபியப் பகுதிகளிலும், சமீபத்திய கருவுறுதல் விகிதக் குறைப்பு, அந்த நாடுகள், பல வகைகளில் வளர்ச்சி அடைய வழிவகுத்துள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பு குறைந்துள்ளதால், தனிநபர் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான வாய்ப்பையும் அந்த நாடுகளுக்கு வழங்கி உள்ளது.
இந்த வாய்ப்பைப் பெறுவதற்கு, உலக நாடுகள், அனைத்து வயதினருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தரமான கல்வியை உறுதிசெய்து, உற்பத்தி மற்றும் கண்ணியமான வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதன் மூலம்,மனித வள மேம்பாட்டிற்கு முதலீடு செய்ய வேண்டும் என்று ஐ.நா. அறிக்கை வாதிடுகிறது.
‘உலக மக்கள்தொகை தினம்’, மனித முன்னேற்றத்தைக் கொண்டாட ஒரு தருணத்தை வழங்குகிறது என்று உலக மக்கள் தொகை நிதியம் (UNFPA) வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை, இந்த தினத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, நம் நாட்டில் அத்தகைய முன்னேற்றத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. ஏனென்றால், நாம் சீன மக்கள் தொகையை எதிர்பார்த்ததைவிட நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது அடுத்த ஆண்டே விஞ்சப் போகிறோம் என்பது தான் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள கவலைக்குரிய செய்தி.
கடந்த 35 ஆண்டுகளில் சீனாவில், ஒரே ஒரு குழந்தை மட்டுமே பெற வேண்டும் என்கிற சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டதினால், மக்கள் தொகைப் பெருக்கத்தை உலகே வியக்கும் வகையில் அந்நாடு வெகுவாகக் குறைத்துள்ளது. நம் நாட்டிலும், 1950ஆம் ஆண்டிலேயே மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. முதலில், “அடுத்த குழந்தை இப்போது வேண்டாம்; மூன்றுக்குப் பிறகு எப்போதும் வேண்டாம்” என்ற அறிவிப்பு குடும்பக்கட்டுப்பாட்டுத் துறையால் முன்வைக்கப் பட்டது. அடுத்து, “நாம் இருவர்; நமக்கு இருவர்” என்று சொல்லப்பட்டது. பிறகு இதுவே, “ ஒன்று பெற்றால் ஒளிமயம்;அதிகம் பெற்றால் அல்லல்மயம்” என்று ஒரு குழந்தை பெறுதல் வலியுறுத்தப்பட்டது ஆனால் வற்புறுத்தப்படவில்லை. இந்தியாவில், ஜனநாயக முறைப்படி இதற்காக சட்டங்கள் இயற்றப்படுவதில் நியாயங்கள் இல்லை. இருப்பினும், வலுவான குடும்பக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.
இந்தியாவில் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு இஸ்லாமிய மற்றும் இதர சிறுபான்மை சமூகத்தினரே காரணம் என்கிற கற்பிதத்தை இந்துத்துவா பல காலமாகப் பரப்பி வருகிறது. பா.ஜ.க வைச் சேர்ந்த, அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மாநிலத்தில் வறுமை மற்றும் பிற சமூகப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதற்கு முஸ்லிம்கள் குடும்பக்கட்டுப்பாட்டு கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறியது பத்திரிகைகளில் வெளியானது. இது, மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தில் முஸ்லிம் சமூகம் பற்றி, இந்துத்துவாவினரால் கட்டமைக்கப்படும் பொது புத்திக்கு வலு சேர்க்கிறது. மேலும், இஸ்லாமியர்கள் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக மாறி, ஒரு இஸ்லாமிய அரசை இங்கு நிறுவ முயல்கிறார்கள் என்கிற பிரச்சாரத்தின் மூலம், இந்துக்களிடையே ஒருவித அச்சுறுத்தலை ஏற்படுத்தி, அவர்களுடைய வாக்குகளைப் பெறுவதற்கான தந்திரம் நாடு முழுதும் பரவலாக இவர்களால் மேற்கொள்ளப் படுகிறது.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாத்வி பிராச்சி மற்றும் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகாராஜ் போன்றோர், இந்துக்கள், குறிப்பாக இந்துப் பெண்கள், இதை முறியடிக்க அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அரசியல் நோக்குடன் நாட்டின் பெரும்பான்மை சமூகத்தின் பெருக்கம் இங்கே வலியுறுத்தப்படுவது, நம் நாட்டை மேலும் பலவீனப்படுத்துவதில்தான் முடியும்.
இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப் படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி (Census), 1951 ஆம் ஆண்டில் முஸ்லிம் மக்கள் தொகை, நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 9.8% ஆக இருந்தது. அதற்குப் பிறகு, அது அதிகரித்து வந்தாலும், தசாப்த வளர்ச்சி விகிதம் (Decadal Growth Rate), 1991 ஆம் ஆண்டில், 32.8% இல் இருந்து 24.6% ஆக வெகுவாகக் குறைந்தது. இதே காலகட்டத்தில் இந்துக்களின் தசாப்த வளர்ச்சி விகிதம் 22.7% லிருந்து, 16.7% ஆகக் குறைந்தது. எனவே, ஒப்பீட்டளவில், இஸ்லாமிய சமூகத்தின் பெருக்கம், இந்துக்களின் பெருக்கத்தை விடக் குறைவாகவே இருந்துள்ளது. அதற்குப் பிறகும், 2011 ஆம் ஆண்டில், 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இஸ்லாமிய மக்கள் தொகையின் தசாப்த வளர்ச்சி விகிதம் மிகக் குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய மக்கள் பெருக்கத்திற்கு இன்னொரு காரணமாக, பல தார மணம் சொல்லப்படுகிறது. “பலதார மணம் என்பது முஸ்லீம்களுக்கு மட்டும் அல்ல, ஆனால் இந்தியாவின் அனைத்து சமூகத்தினரிடையேயும் நடைமுறையில் இருந்தது” என்று இந்தியாவில் பெண்களின் நிலை குறித்த குழு 1974 இல் கண்டறிந்தது. இன்னும் சொல்லப் போனால், பலதார மண விகிதம் மற்ற சமூகத்தினரிடையே அதிகமாக இருந்ததாக, அதாவது பழங்குடியினர்(15.2%), பௌத்தர்கள்(9.7%), ஜைனர்கள் (6.7%) மற்றும் இந்துக்கள் (5.8%), அது குறிப்பிட்டது. ஒப்பீட்டளவில், முஸ்லிம்களிடையே பலதார மணம் குறைவாகவே (5.7%) இருந்ததாகவும், அது பதிவு செய்துள்ளது.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, முஸ்லிம் சமூகத்தினரிடயே எதிர்மறையான கருத்துக்கள் இருந்தபோதிலும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, ஒரு சிறுபான்மை சமூகத்தை இலக்காகக் கொண்டு கற்பிதங்கள் முன்னெடுக்கப்படாமலும், அரசியல் நோக்கோடு பெரும்பான்மை சமூகத்தின் பெருக்கத்திற்கு பிரச்சாரங்கள் செய்யப்படாமலும், நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியைக் குவிமையமாகக் கொண்ட குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தல் காலத்தின் கட்டாயம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button