சிலி நாட்டு அதிபராக கேப்ரியல் போரிக் – இடதுசாரிப் பாதையில் சிலியின் பயணம் தொடங்குகிறது!
சிலி நாட்டில் அதிபர் பதவிக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த நவம்பர் 21 அன்று நடைபெற்றது. வலதுசாரி வேட்பாளரும், குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான ஜோஷ் ஆண்டோனியோ கஸ்ட் 28 % வாக்குகளும், இடதுசாரி கூட்டணி வேட்பாளரும், அந்நாட்டு மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவருமான கேப்ரியல் போரிக் 25.7 % வாக்குகளைப் பெற்றனர் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு டிசம்பர் 18 அன்று நடைபெற்றது. இந்தச் சுற்றில் 55.87 % வாகுகளைப் பெற்று கேப்ரியல் போரிக் வெற்றி வாகை சூடியுள்ளார். சிலி நாடு இடதுசாரிப் பாதையில் அதன் பயணத்தைக் தொடங்கியுள்ளது.
சிலி நாட்டின் அதிபர் தேர்தல் இந்த முறை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உற்று நோக்கப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அந்நாட்டுக்கான புதிய அரசியலமைப்புச் சட்டம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இப்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டம் சர்வாதிகாரி ஜெனரல் அகஸ்டோ பினோசெட் ஆட்சியின் போது மக்கள் மீது மோசடியான முறையில் திணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான அரசியல் நிர்ணய சபை 155 உறுப்பினர்களைக் கொண்டது ஆகும். அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களைத் தேர்வு செய்திட கடந்த மே மாதம் தேர்தல் நடைபெற்றது. எல்லோரும் வியக்கும் வகையில், பிரதான அரசியல் கட்சிகள் இந்தத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்தன. சுயேட்சை வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
பொது மக்களின் விருப்பத்திற்கு இணங்க, தேர்தல் குறித்த பல்வேறு உரிய முறைமைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆணுக்குப் பெண் சரி நிகர் சமம் என்பதை, அநேகமாக உலகிலேயே முதல்முறையாகப், பிரகடனப்படுத்தும் வண்ணம் சிலி நாட்டின் அரசியலமைப்பு சபையின் 50 % உறுப்பினர்களாகப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பூர்வகுடி மக்களுக்கு இட ஒதுக்கீடு (17 இடங்கள்) வழங்கப்பட்டு உள்ளது.
1990 களில் தொடங்கி ஏறக்குறைய 30 ஆண்டுகளாக சிலியில் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவுகளாக தனியார்மயம், ஏற்றத்தாழ்வுகள், வேலையின்மை மற்றும் அரசியல் சச்சரவுகள் தொடர்கதைகளாகிவிட்டன.
ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்ட இயக்கங்கள் வெடித்தன. 2011ஆம் ஆண்டு ஒரு மாபெரும் போராட்டம் தொடங்கியது. இலவசமாக கல்வி வழங்கப்பட வேண்டும் எனக் கோரி கல்லூரி வளாகங்களை மாணவர்கள் முற்றுகையிட்டனர். போராட்டக் களத்தில் முன்னணி வீரனாகத் திகழ்ந்தார் 25 வயதேயான கேப்ரியல் போரிக். அவரது போராட்ட வாழ்க்கை தொடர்ந்தது. 2019ஆம் ஆண்டு சிலி முழுவதும் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து கிளர்ந்து எழுந்த மாபெரும் ஆர்ப்பாட்டங்களில், அவர் துடிப்புமிக்க செயல்வீரராகக் களம் கண்டார்.
இந்தப் போராட்டங்களின் விளைவாக, ஒட்டுமொத்த அரசியல் அமைப்பையும் மாற்றியமைக்க வேண்டும் என்ற அரசியல் வளர்ச்சிப் போக்கு உதயமானது. அதன் நீட்சியாக, புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான கோரிக்கையும் எழுந்தது. செபஸ்டியன் பினேரா தலைமையிலான அரசாங்கம் மக்கள் எழுச்சியின் காரணமாக வேறு வழியின்றி அரசியலமைப்பு சட்டத்திற்கான கோரிக்கையை ஏற்றது. அரசாங்கத்தின் இந்த முடிவானது, இடதுசாரிகள் தலைமையிலான சமூக அரசியல் போராட்ட இயக்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தேசம் தழுவிய அளவிலான வாக்கெடுப்பில் புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு பெருவாரியான மக்கள் ஆதரவு தெரிவித்தனர். சிலி கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு கேப்ரியல் போரிக் வெற்றியடைந்துள்ள இந்தச் சூழலில், புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி மேலும் செம்மையுறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்ரியல் போரிக் தலைமையில் சிலி நாட்டில் புதிய அத்தியாயம் விரைவில் தொடங்கும் என்று உலகம் முழுவதும் உள்ள இடதுசாரிகள் ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள்.