சியாத்தமங்கை தோழர் பி பொன்னுசாமி மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் நேரில் அஞ்சலி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட முன்னோடிகளில் ஒருவருமான சியாத்தமங்கை தோழர் பி. பொன்னுசாமி (82) கடந்த 31.10.2022 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில தனது இல்லத்தில் காலமானார்.
தற்போதுள்ள நாகபட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் உள்ள சியாத்தமங்கை கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த தோழர் பி. பொன்னுசாமி இளம் வயதில் விவசாயிகள் சங்கத்தில் இணைந்து செயல்பட்டவர். தொடர்ந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து. இறுதிக் காலம் வரை உறுதியுடன் செயல்பட்டவர்.
ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்ட கட்சி மாவட்டக் குழு உறுப்பினர், நன்னிலம் ஒன்றியச் செயலாளர், நாகபட்டினம் மாவட்டம் உருவான பிறகு திருமருகல் ஒன்றியச் செயலாளர் பொறுப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
சியாத்தமங்கை ஊராட்சியின் தலைவராக இருமுறை தேர்வு செய்யப்பட்டு, சிறந்த மக்கள் பிரதிநிதியாகப் பணியாற்றியவர்.
தோழர் பி. பொன்னுசாமியின் மனைவி தேனம்மாள், இவர்களுக்கு கல்யாணசுந்தரம், லெனின், பிச்சைமுத்து என மூன்று மகன்கள் (இவர்களில் மகன் கல்யாணசுந்தரம் சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டா. இரண்வாது மகன் பி லெனின் கட்சிக் கிளைச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். மூன்றாவது மகள் சேலம் அரசுக் கல்லாரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ஜெயலட்சுமி என்ற ஒரு மகளும் இருக்கிறார்.
தோழர் பி. பொன்னுசாமி மறைவு செய்தி அறிந்ததும் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மாநிலத் துணைச் செயலர் நா பெரியசாமி, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ் எம் பி , தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி. எஸ். மாசிலாமணி,நாகபட்டினம் மாவட்டச் செயலாளர் சிவகுரு பாண்டியன், மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ பாண்டியன் உள்பட கட்சி தோழர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் நேரில் இறுதி மரியாதை செலுத்தினர்.
தோழர் பி. பொன்னுசாமி மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.