கட்டுரைகள்

சாதி: ஒரு மார்க்சியப் பார்வை

-எஸ்.தோதாத்ரி

சாதி பற்றி பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. நிறம்தான் சாதிக்குக் காரணம் என்பது ஒரு கருத்து. பிராமணர்கள்தான் சாதியைப் புகுத்தி விட்டார்கள் என்பது ஒரு கருத்து. மனு நீதிதான் சாதிக்குக் காரணம் என்பது ஒரு கருத்து. பிரம்மன் படைக்கும் போதே நான்கு சாதிகளைப் படைத்துவிட்டான் என்பது ஒரு கருத்து. இதன் அடிப்படையில் சாதியைக் காண்பவர்கள் உண்டு.

மற்ற எல்லா நாடுகளையும் விட இந்தியாவில் இது தீவிரமாகவே உள்ளது. பிற நாடுகளில் சமுதாயப் பிரிவினைகள் உண்டா? என்று கேட்டால், ‘உண்டு’ என்று கூறலாம். உதாரணமாக, ஏங்கல்ஸ் அவருடைய ஜெர்மனியில் “விவசாயிகள் போராட்டம்“ என்ற நூலில் பல சமூகப் பிரிவுகளைக் காட்டுகிறார். ஜெர்மனியில் அரசர்கள், மதகுருமார்கள் ஆகியோர் ஒரு பிரிவாக இருந்தனர். இவர்கள் மற்றவர்களைக் கீழாகவே பார்த்தனர். பெரிய பிரபுக்கள், சிறிய பிரபுக்கள் என்ற பிரிவினர் இருந்தனர். இவர்கள் மற்றவர்களை கீழாகவே பார்த்தனர். இவர்கள் நடுத்தர மக்களுடன் உறவு கொள்வதில்லை.

பூர்ஷ்வாக்கள் (மத்திய தர வர்க்கத்தினர்) பெரும் பிரிவாக இருந்தனர். பாட்டாளிகள் மற்றொரு பிரிவாக இருந்தனர். விவசாயப் பாட்டாளிகள் மற்றொரு பிரிவாக இருந்தனர். இவர்களுக்கு உள்ளே மண உறவுகள் கிடையாது.

பிரான்ஸ் தேசத்தில் எஸ்டேட்டுகள் என்பன இருந்தன. முதல் எஸ்டேட் அரசன், மதகுருமார்கள் ஆகியோரைக் கொண்டதாகும். இரண்டாவது எஸ்டேட் பிரபுக்களைக் கொண்டதாகும். மூன்றாவது எஸ்டேட் பூர்ஷ்வாக்களைக் கொண்டதாகும். நான்காவது எஸ்டேட் என்பது பாட்டாளிகளைக் கொண்டதாகும். இவர்களுக்கு உள்ளே மண உறவுகள் கிடையாது.

இதே போன்ற அமைப்பு இங்கிலாந்திலும் இருந்தது. இவற்றைக் கூர்மையாக கவனித்தால் இது நமது வர்ண தர்ம முறையைப் போன்று இருப்பதைக் காண முடியும். ஆனால் இந்த இரண்டிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன.

இந்தச் சூழலில், எந்த நாடாக இருந்தாலும் இந்தப் பிரிவினைகள் எவ்வாறு வந்தன என்பதைக் காண வேண்டும். இதற்கு மார்க்ஸ் கூறும் வேலைப் பிரிவினை என்பதை நாம் ஒரு வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். இது நமது சாதிய தோற்றத்தை புரிந்து கொள்ள பெரிய உதவியாக இருக்கும். மார்க்ஸ் தனது மூலதனத்திலும், வேறு பல நூல்களிலும் வேலைப் பிரிவினை பற்றி பேசியுள்ளார். மார்க்ஸ் தவிர அவரது சமகால பூர்ஷ்வா அறிஞர்களும் இது பற்றிப் பேசியுள்ளனர். இவர்களில் வேலைப் பிரிவினையின் தன்மை பற்றி விவரமாகப் பேசியவர்கள் மார்க்சும், எங்கெல்சும் ஆவர்.

மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி பேசும் போது, இதனை ஒரு தனிப்பட்ட உற்பத்தி முறையாகக் காண்கிறார். இது நிலவுடைமை முறையின் ஒருவகை என்ற நிலையில் காணப்படுகிறது. இதனை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதன் விளைவுதான், இந்திய சாதி முறை ஆகும்.
இந்த முறை உருவாவதற்கு இந்திய சூழல் வசதியாக இருந்தது.

மார்க்சியம் மனிதனது இருப்பை தீர்மானிக்கும் விஷயங்களில் முதலிடம் கொடுப்பது உற்பத்தி முறைக்கு ஆகும். அதற்கு அடுத்தபடியாக உள்ளது பூகோள சூழ்நிலையாகும். முதலாவது செயற்கையானது; இரண்டாவது இயற்கையானது. இந்த இரண்டில் அதிக சக்தி வாய்ந்தது உற்பத்தி உறவுகளும், முறைகளும் ஆகும். இவைதாம் மனித சமுதாயத்தை விலங்கு நிலையில் இருந்து பிரித்துக் காட்டுகின்றன. இந்த முறை இல்லாவிட்டால், மனிதனும் ஒரு விலங்காகவே தான் வாழ்ந்து கொண்டிருப்பான். அப்பொழுது சாதியும் கிடையாது; சமயமும் கிடையாது; தத்துவமும் கிடையாது. ஆனால், பொருள் உற்பத்தியில் ஈடுபட்ட பின்னர், மேற்கூறியவை தோன்றிவிடுகின்றன. அந்தந்த நாட்டின் சூழலுக்கு ஏற்ப இவை வெவ்வேறு விதமாக இடம்பெறுகின்றன.

இந்திய சாதிய முறையானது ஆதிகாலத்தில் இல்லை. உதாரணமாக ரிக்வேத காலத்தில் சாதியம் இல்லை. காரணம், அப்பொழுது ஆரியர்கள் இனக்குழு மக்களாகவே இருந்தனர். எல்லோரும் கூட்டாகவே வேலை செய்தனர். கூட்டாகவே உணவைப் பகிர்ந்து உண்டனர். இதற்கு ஒரு உதாரணம் காட்டலாம். மகாபாரதத்தில் ஒரு சிறு கதை இடம்பெறுகிறது. காட்டில் வசிக்கும் பொழுது குந்தி தனது மகன்கள் பல இடங்களுக்குச் சென்று உணவினைக் கொண்டுவந்த பின்னர், பஞ்ச பாண்டவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறாள். இதில் பீமனுக்கு சற்று அதிகமாகவும், மற்றவர்களுக்குச் சற்றுக் குறைவாகவும் உணவு கிடைத்தன. அதற்காக சண்டை வரவில்லை. இது தாய்வழி சமுதாயத்தில் பெண் பெற்றிருந்த இடத்தைக் காட்டுகிறது. இது போன்ற நிகழ்வுகள் பலவற்றை ரிக் வேத பாடல்களில் காணலாம். இது இந்தியாவில் ஒரு காலத்தில் எல்லா இடங்களிலும் இருந்தன. உதாரணமாக, மணிமேகலை அட்சயப் பாத்திரத்தின் உதவியால் எல்லோருக்கும் உணவைப் பகிர்ந்து கொடுக்கிறாள். இதனை தற்காலக் கண்ணோட்டத்தில் கண்டு ஈகை, வள்ளல் தன்மை என அறியலாம்.
ஆனால், இது என்றோ ஒரு காலத்தில் நாகர்களிடையே இருந்த உணவுப் பகிர்வு முறையின் எச்சமாக உள்ளது. மணிமேகலையை தாய்வழி சமுதாயத்தின் தொடர்ச்சியாகக் கூட காணலாம். சாத்தனார் பழைமை மரபு ஒன்றை அவரது காப்பியத்தில் பயன்படுத்தியுள்ளார் என்றே நாம் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பிரிவுகள் எதுவும் இல்லை என்று கூறலாம். இது மகாபாரதம், மணிமேகலை ஆகியவற்றிற்கு முந்திய காலகட்டமாகும். ஆனால், பழைய இனக்குழு அமைப்பு அப்படியே இருக்கவில்லை. அதில் படிப்படியாக வேலைப் பிரிவினைகள் தோன்றின. இனக்குழு மக்களிடையே சற்று திறமை வாய்ந்தவர்கள் அறிவு சம்பந்தமான வேலைகளில் இறங்கினர். அதாவது வேட்டைக்குச் செல்வதற்கு முன்னர் சில பருவ நிலைகளைக் கண்டு, இன்று வேட்டை கிடைக்கும்; கிடைக்காது என்று கூறினர். இத்தகையவர்கள் படிப்படியாக அறிவு உழைப்பாளிகளாக மாறினர். இவர்கள் ஒரு பிரிவாக மாறினர். இதேபோன்று பெண்கள் சில வேலைகளையும், சற்று கடினமான வேலைகளை ஆண்களும் செய்தனர். இது ஆண்களுக்கும், பெண்களுக்குமான வேலைப் பிரிவினையாக மாற்றம் பெற்றது. இந்தப் பிரிவினையானது சமுதாயம் வளர்ச்சி பெறும் பொழுது அதிகரித்தது. சமூகத் தேவைக்கு ஏற்ப இவை அமைந்தன.

இனக்குழு அமைப்பிலிருந்து விவசாய அமைப்பிற்கு சமுதாயம் மாறும் பொழுது பிரிவினைகள் அதிகரித்ததை இப்பொழுது வர்க்கமற்ற சமுதாயம், வர்க்கபேதமுள்ள சமுதாயமாக மாறியது. இந்தக் கட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தன. இது தமிழகத்தில் கி.பி. முதலாம் நூற்றாண்டில் இடம் பெற்றது. ஏறத்தாழ இந்தக் கட்டத்தில் வாழ்ந்த வள்ளுவர் தனது குறளில் “சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்று கூறுகிறார். இந்திய அரங்கில் இந்த வேலைப் பிரிவினையை இரு வேறு கண்ணோட்டத்திற்குள் காண வேண்டும். ஏனென்றால் இது மற்ற நாடுகளில் இல்லாத ஒரு சிறப்புத்தன்மை உள்ளதாக மாறியது. இதற்கு முதற்காரணம் இங்கு உள்ள பூகோள சூழல். இங்கு நிறைய வளங்கள் உள்ள பகுதிகள் அதிகம். ஒவ்வொரு கிராமத்திலும் தேவையான பொருள்கள் அனைத்தும் கிடைத்தன. அந்தக் காலத்தில் உள்ள உழைப்பிற்கு ஏற்ற பொருள்கள் எல்லாமே கிடைத்தன. எனவே, எல்லாமே கிராமத்தில் இருந்தன. இதன் காரணமாக கிராமத்தை விட்டு வெளியே செல்லும் தேவை மிகக் குறைவாகவே இருந்தது. வணிகர்கள் தவிர மற்றவர்கள் வெளியே செல்வதில்லை. இதன் விளைவாக, கிராமத்தின் சமூகத்திற்குத் தேவையான உழைப்பே போதுமானதாக இருந்தது. இது ஒரு தேக்க நிலையை உருவாக்கியது. இந்த சமூக உழைப்பிற்கு தேவையான கருவிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. புதுக் கருவிகளுக்கு இடமில்லாமலேயே இருந்தது. இந்த நிலை காரணமாக ஒவ்வொருவரும் அவரவர்கள் வேலையை தலைமுறை தலைமுறையாக செய்தனர்.
ஒவ்வொரு தொழில் பிரிவினரும், தனித்தனி குழுவாகவே இருந்தனர். ஒரு கிராமத்தை எடுத்துக்கொண்டால் பிராமணர்கள் ஒரு பிரிவாகவும், வேளாளர்கள் ஒரு பிரிவாகவும், பஞ்ச கம்மாளர்கள் தனித்தனி பிரிவாகவும் செயல்பட்டனர். மேலும் தங்களது தொழில் ரகசியத்தை பாதுகாக்க வேண்டி, அகமணமுறையை மேற்கொண்டனர். இதன் விளைவாக, ஒவ்வொரு குழுவும் தனித்து இருந்தனர். இது மேல் நாட்டில் இல்லாத ஒன்று. அதற்குக் காரணம், அங்கு வளங்கள் குறைவு. அதன் விளைவாக இடப்பெயர்ச்சி அதிகம். எனவே அங்கு குழுவாக நிலைத்து ஒரு இடத்தில் இருக்க முடியவில்லை. அங்கு தொழில் வேறுபாடு இருந்தாலும், இங்கு போல் இறுக்கமாக இல்லை. நமது சூழலில் இது காலம் செல்லச் செல்ல கெட்டி தட்டி போய் இறுக்கமடைந்து நிலைத்த ஒன்றாக உருவாயிற்று. மாறுதல் நிகழ்ந்தன, அவை மெதுவாகவே இடம்பெற்றன. இது ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வதன் காரணமாக, அதன் மூலம் சமுதாயத் தேவை பூர்த்தி பெற்றது. அதன் காரணமாக அதற்கு மேல் உற்பத்தி செல்லவில்லை. இது இங்கு சாதியம் என்ற முறையாகத் தோன்றியது. இது அடிப்படைத் தொடர்பானது. தொழிற் பிரிவு தொடர்பானது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இதற்கு மேலாக உள்ள கட்டுமானம் சிந்தனை உலகில் பிரதிபலித்தது. இந்தத் தொழில் பிரிவினையானது அன்றைய சமுதாயம் இயங்குவதற்கு வசதியாக இருந்தபடியால், அதிலுள்ள அடுக்கு முறைகள் நியாயப்படுத்தப்பட்டன. இது அந்தக் காலத்தில் தோன்றிய நீதி நூல்கள், இலக்கியங்கள் ஆகியவற்றின் மூலம் செய்யப்பட்டன. இந்த நூல்களின் சொந்தக்காரர்கள் அடித்தள மக்கள் அல்லர். இவர்கள் மேல் மட்டத்தினர். இவர்களில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோர் இருந்தனர். இவர்கள் சாதிய முறையில் உள்ள பழக்கங்களை வழக்கமாக மாற்றினர். இந்த வழக்கம் சமுதாய நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும் வரை பின்பற்றப்பட்டன. இது தர்ம சாஸ்திரங்களில் இடம்பெற்றது. இது சட்டமாக மாறியது. இதில் பல்வேறு வகையான நீதிகள் அவர்களுக்கு அடிப்படை. இந்த நூல்களை எழுதியவர்கள் பிராமணர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் மற்ற மேல்தட்டு வர்க்கத்தினரின் துணையுடன்தான் இவற்றை எழுதினர். இவை அந்தக் காலத்தின் தேவைக்கு ஏற்றபடி பல மாறுதல்களுக்கு உள்ளாயின. இதில் இரண்டாவது அம்சம் தீண்டாமை என்பது. இது இன்று அதிகம் பேசப்படும் ஒன்று. இதனை பிராமணர்கள் புகுத்தினர் என்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இது ஒரு கருத்து முதல்வாத அணுகுமுறையாகும். ஒன்றைப் புகுத்திய உடன் அதனை மற்றவர்கள் பின்பற்றினர் என்பதும் இத்தகைய அணுகுமுறையாகும். இது சமுதாய நடைமுறையில் இருந்ததன் காரணமாக அதனையே சட்டமாக்கினர்.

ஆனால் இந்தக் கருத்து எவ்வாறு தோன்றியது?

இதற்கு வேறு ஒன்றைக் காண வேண்டும். வேலைப்பிரிவினையின் ஒரு அம்சம் மூளை உழைப்பிற்கும், உடல் உழைப்பிற்கும் உள்ள பிரிவினை. இது இனக் குழு அமைப்பாக இருந்த காலத்திலேயே தோன்றிவிட்டது. மூளை உழைப்பாளிகள், உடல் உழைப்பில் ஈடுபட்டவர்களை சற்று அருவருப்புடனே பார்த்தனர். காரணம் உடல் உழைப்பானது சற்று அசுத்தம் நிறைந்ததாகவே இருந்தது. பிராமணர்களது உழைப்பு ஒரு வகையானது, சத்திரியர்களது உழைப்பு வேறு வகையானது, வைசியர்களது உழைப்பு வேறு வகையானது. அதனால், இந்த மூன்று அடுக்கினரிடமும் மூளை உழைப்பு இருந்தது. பிராமணர்கள் சுத்த மூளை உழைப்பாளிகள் மற்றவர்கள் மூளை உழைப்பும், உடல் உழைப்பும் இணைந்த உழைப்பாளிகள். கைத் தொழிலாளிகளும் அவ்வாறே. இவற்றிற்கு எல்லாம் அடிமட்டத்தில் இருந்த அடிமைகள் உடல் உழைப்பினை மட்டுமே கொண்டவர்கள். எனவே, இந்த அருவருப்பு என்பது மேலே உள்ளவர்களிடையே சற்று குறைவாக இருந்தது. அருவருப்பு பண்ணையடிமைகள் மீது விழுந்தது. இதுதான் தீண்டாமையின் ஊற்றுக்கண் எனலாம்.

இந்த சமுதாய அடித்தளத்தின் மீது தோன்றிய இந்த நடைமுறை, கருத்தியல் உலகில் விரிவாக்கப்பட்டு மாற்ற முடியாத சட்டமாக மாறியது. இது அன்றைய சமுதாய நடைமுறையின் விளைவு ஆகும். இது போன்ற வேறுபாடுகள் மேலை நாட்டிலும் இருந்தன. பிரபுக்கள் தங்களுக்கு கீழானவர்களை அருவருப்புடன் பார்த்தனர். அவர்களைத் தள்ளி வைத்தே பேசினர். ஆனால், அங்கு சமுதாய மாற்றம் விரைவாக இடம்பெற்றதன் காரணமாகவும், கருவிகளின் முன்னேற்றம் காரணமாகவும் இது இறுக்கமாக இடம்பெறவில்லை.

மேலும், மேலை நாடுகளில் இடப்பெயர்ச்சி அதிகமாக இருந்தது. இது அங்கு சுய தேவை பூர்த்திக்கான வசதியின்மை காரணமாக ஏற்பட்டது ஆகும். இதன் காரணமாக அங்கு சமுதாய குழுக்கள் உருவாகவில்லை. இந்தக் கண்ணோட்டத்தில் காணும்பொழுது, மார்க்ஸ் கூறுவதுபோல் சாதியப் பிரிவு அடிப்படையில், தொழில் பிரிவில் இடம் பெறுகிறது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். மற்றவை இது சார்ந்த கருத்தாக்கங்கள். இந்த அடிப்படை மாறிய பொழுது அது தகர்ந்தது என்பதையும் காணவேண்டும். இன்றைய பொருளாதார மாறுதல்கள் காரணமாக பழைய முறையில் அது இல்லை. அது பல மாறுதல்களுக்கு உள்ளாகி உள்ளது என்பதையும் காண வேண்டும். இன்று உள்ள மாறுதல்கள் தனியாக ஆராயப்பட வேண்டியவை ஆகும். அதை விட்டு விட்டு கருத்தியில் சார்ந்த அம்சங்களைப் பெரிதுபடுத்திப் பேசுவது, பொருள்முதல்வாத அணுகுமுறை ஆகாது. அது கருத்து முதல்வாத அணுகுமுறை ஆகும்.

தொடர்புக்கு: 98947 83657

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button