சாதிவெறி ஆணவக் கொலைகளைத் தடுக்க வலுவான சட்டம் நிறைவேற்ற வேண்டும்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகில் உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்த தண்டபாணி (50) அவரது மகன் சுபாஷ் (25) சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், அவரையும், அவரது மருமகள் அனுசூயா ஆகியோரையும், தண்டபாணியின் தாயார் திருமதி கண்ணம்மாள் (70) வீட்டுக்கு வஞ்சகமாக வரவழைத்து, அவர்களிடம் பாசம் காட்டி ஏமாற்றி, அவர்கள் அசந்து தூங்கும் நேரத்தில் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். தண்டபாணியின் கொலை வெறித் தாக்குதலை தடுத்த அவரது தாயாரையும் வெட்டியுள்ளார். இந்த சாதி வெறித் தாக்குதலில் கண்ணம்மாள், சுபாஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துவிட்டனர். மருமகள் அனுசூயா வெட்டுப்பட்ட படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற செய்தி மிகுந்த கவலையளிக்கிறது.
சாதி வேற்றுமைகள் களையவும், தீண்டாமை முறையைத் தடுக்கவும் சான்றோர்களும், சீர்திருத்த இயக்கத் தலைவர்களும் கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் சமூக வாழ்வில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
பகுத்தறிவுக்கு ஒவ்வாத சாதி, மதவெறி கருத்துக்களும், வெறுப்பு அரசியலும் பரப்பப்படுவதால் ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் காதல் தம்பதிகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இல்லறம் ஏற்ற சாதி மறுத்து, தம்பதிகளான இளைஞர், 20 நாளில் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாகும்.
மூடப்பழக்க வழக்கங்களை அழித்து, அறிவியல் கண்ணோட்டம் வளர்க்கும் சமூக சீர்திருத்தப் பணிகளுடன், ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வலுவான தனி சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு நடப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக கொள்கிறது.