‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற மு.ராஜேந்திரனுக்கு வாழ்த்துகள்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
இந்திய ஆட்சிப் பணித்துறையில் சிறப்பாகப் பணியாற்றி, ஓய்வு பெற்ற திரு எம்.ராஜேந்திரன் படைப்பில் வெளியான ‘காலாபாணி’ நாவல் 2022 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சிவகங்கை சீமையில் மருது சகோதரர்களும், அவரது படையினரும் காலனி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த, ஆரம்ப நாட்களில் நடத்திய யுத்தத்தைத் தழுவி எழுதப்பட்ட நாவல் காலாபாணி. குறிப்பாக காளையார் கோவில் யுத்தகளத்தை அடிப்படையாகக் கொண்டு, எம்.ராஜேந்திரன் படைப்பில் உருவான காலாபாணி பரந்துபட்ட வாசகர்களைப் பெற்றிருந்தது. இனி நாட்டின் பிற மொழிகளிலும் மருது சகோதரர்களும், அவரது படையணியும் நடத்திய விடுதலை போராட்டச் செய்தி அனைவருக்கும் போய் சேரும்.
எம். ராஜேந்திரன் பிற நாட்டு நல்லறிஞர் படைப்புகளைத் தமிழுக்கு தந்ததிலும், கல்வெட்டு, அகழாய்வு தொல்லியல் சான்றுகளைத் தொகுத்துத் தருவதிலும் குறிப்பிட்ட பங்களிப்பு செய்து வருபவர். ஆட்சிப் பணியிலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று விளங்குவதுடன், அரசின் பணி தொய்வின்றி நடப்பதிலும் அக்கறை காட்டியவர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்திய முதல் 10 மாவட்டங்களில் ஒன்றாக வந்த பெருமைக்குரியவர். அவரது படைப்புகள் மேலும் பல விருதுகளைப் பெற்றுச், சிறப்பு பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.