சமையல் எரிவாயு விலையேற்றம் – சிபிஐ தேசிய செயற்குழு கடும் கண்டனம்
சமையல் எரிவாயு விலையேற்றத்தைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மே 7 முதல் சமையல் எரிவாயுவின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
பணவீக்கம் அதிகரித்துள்ளது. அண்மையில், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. பணவீக்கம் மற்றும் ரெப்போ வட்டி விகித உயர்வானது உள்ளீடுகளின் விலை உயர்வுக்கு வித்திடுவதாகக் கூறி , நிறுவனங்கள் பொருள்களின் விலையை மேலும் அதிகரிப்பதற்கு பணவீக்கமும், ரெப்போ வட்டி விகித உயர்வும் உதவிகரமாக அமைந்துவிடுகிறது.
பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் இதர அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வித்திடும் என்பதைப் புறந்தள்ளிவிட்டு அரசாங்கம், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திட அனுமதித்து வருகிறது.
மக்கள் அனுபவித்து வரும் வேதனைகளைப் பற்றி அக்கறை கொள்ளாத இந்த அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்கள் அவற்றின் கருவூலத்தை நிரப்பிக் கொள்ளவே தொடர்ந்து உதவி வருகிறது.
கட்சி, இந்த விலையேற்ற நடவடிக்கையை மிகக் கடுமையாக கண்டிப்பதுடன், இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து போராட்டங்களை நடத்திடுமாறு கட்சி அணிகளுக்கு அறைகூவல் விடுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.