கையால் துப்புரவு செய்யும் தொழிலாளர்கள் மறுவாழ்வும் – அரசின் மெத்தனமும்!
ம. ராதாகிருஷ்ணன்
இந்தியாவில் கையால் துப்புரவு (Manual Scavenging ) வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத்தான் அரசின் மக்கள் நலத்திட்டங்களில் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். அந்தத் திட்டங்களில் மறுவாழ்வுக்கான திட்டம் அதிக முன்னுரிமை பெற்ற திட்டமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து பெரும் பகுதி பயன்படுத்தப்படாமல் இருப்பது மிகவும் அநீதியானது.
2014-15 முதல் 2021-22 வரையிலான 8 ஆண்டுகளில், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கைகளில் இத்திட்டத்திற்கு ரூ.1255 கோடி ஒதுக்கப்பட்டது. இது போதுமானதுதானா என்று நிதி ஒதுக்கியவர்கள் தங்கள் மனசாட்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில், 236 கோடி ரூபாய் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் செலவிடப்பட்டது. அதாவது ஒதுக்கப்பட்டதில் 19% மட்டுமே உண்மையில் செலவிடப்பட்டது என்றால், இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது?!
அப்படியானால் கடந்த 8 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகையான ரூ.1019 கோடி செலவிடப்படாமல் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டது. சராசரியாக ஆண்டுக்கு ரூ.156 கோடியில், ஒரு குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் வீதம், இந்தத் தொகையை முறையாகச் செலவிட்டிருந்தால், சுமார் 6000 குடும்பங்கள் ஆண்டுக்கு (அல்லது இந்த 8 ஆண்டுகளில் 48,000 குடும்பங்களுக்கு மேல்) மறுவாழ்வை அடைந்திருக்க முடியும்.
ஆண்டுக்கு சராசரியாக ரூ.156 கோடி ஒதுக்கீடு என்பது போதுமானதாக இல்லை என்றாலும், அந்தத் தொகையையாவது முழுமையாகச் செலவிட, தேவையான அக்கறையை காட்டியிருந்தால் அது ஓரளவு பயனுள்ளதாக இருந்து இருக்கும். ஆனால் ஆண்டுக்கு ஆண்டு சரியான திட்டமிடல் இல்லாத நிச்சயமற்ற நிலைமைகள் தான் தொடர்கின்றன.
முந்தைய 8 ஆண்டு காலத்தில் ஆண்டு சராசரி ஒதுக்கீடான ரூ.156 கோடிக்கு மாறாக, சமீபத்திய ஆண்டில் ஒதுக்கீடு வெறும் ரூ.70 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது சராசரி ஒதுக்கீட்டில் பாதிக்கும் குறைவானது, இதனால் மேலும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலைமைகளுக்கு மத்தியில், பயனாளிகளை அடையாளம் காணும் அடிப்படைப் பணி கூட கேள்விக்குறியானதாகவே உள்ளது.
1993 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் கையால் துப்புரவு செய்வதற்கு தடை மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்கான இரண்டு சட்டங்கள் இயற்றப்பட்டன. 1993 வருடத்திய முதல் சட்டத்தில் கையால் துப்புரவு செய்தல் பற்றிய வரையறை கையால் மலம் அள்ளுதல் என்ற அளவில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது, இரண்டாவது சட்டத்தில் இது விரிவுபடுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், 2013 சட்டத்தில் பயனாளிகளைச் சரியாக அடையாளம் காண்பதற்காக வகுக்கப்பட்ட நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாததால், அனைத்து வகையான கையால் துப்புரவு செய்யும் தொழிலாளர்களை அடையாளம் காணும் நடைவடிக்கைகள் இன்னும் பரந்ததாக இல்லை.
வாட்டர் எய்ட் இந்தியா ஊரக மற்றும் நகர்ப்புற தேவைகளுக்கான சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் ஈக்விட்டி ஸ்டடீஸ் மையம் நடத்திய சமீபத்திய ஆய்வில், பல இடங்களில் அடையாளம் காணும் பணி உள்ளூர் அதிகாரிகளின் விருப்பத்திற்கு உட்பட்டதாக விடப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் கையால் துப்புரவு தொழிலில் யாரும் ஈடுபடவில்லை என அவர்களாக கருதிக் கொள்வதால், மேற்கொண்டு ஆய்வு பணிகளை அவர்கள் தொடரவில்லை. ஆய்வுகள் நடத்தப்பட்டாலும், ஆய்வுக்கு முந்தைய பயிற்சி அளிப்பது மற்றும் ஆய்வு செய்து அறிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. இதன் விளைவாக, கணக்கெடுப்பு நடத்துபவர்கள் திறனற்றவர்களாக உள்ளனர். சமூக நலனுக்காகப் பாடுபடுபவர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதும் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
சுய-அடையாளம் மற்றும் சுய ஆதாரங்களால் வழங்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு கவனம் செலுத்துவதற்கும், அலுவல் ரீதியான பட்டியல்கள் தாக்கல் செய்யவும் ஏற்பாடுகள் இருக்கின்றன. ஆனால் இந்த விதிகளும் புறக்கணிக்கப்பட்டு உள்ளன.
மாவட்ட அளவில் பல்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட பட்டியல்களை ஒருங்கிணைப்பதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. வட்டார அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட பட்டியலில் இல்லாமல் போகிறது.
2013 க்குப் பிறகு, அரசாங்கம் 13 மாநிலங்களில் 12,742 கையால் துப்பரவு செய்பவர்கள் உள்ளனர் என்று அங்கீகரித்தது. அதில் 82% பேர் உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே உள்ளனர் என்று குறுப்பிடப்பட்டது. ஆனால் இது சரியான மதிப்பீடு அல்ல என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் 7,40,078 குடும்பங்கள் இருப்பதைக் கண்டறிந்து பதிவு செய்யப்பட்டது. இது கழிவுநீர் தொட்டிகள், பொது சாக்கடைகள் மற்றும் ரயில் பாதைகள் உள்ளிட்ட இடங்களில் கையால் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களை மட்டும் குறித்தது.
சமூக-பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பின்படி, 1.82 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களில், குறைந்தபட்சம் ஒரு உறுப்பினராவது துப்புரவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 2018-19 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மிக சமீபத்திய கணக்கெடுப்பில், 18 மாநிலங்களில் உள்ள 170 மாவட்டங்களில் 54,130 பேர் கையால் துப்புரவு செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் கண்டறிந்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு 1.82 லட்சம் குடும்பங்களைக் கணக்கிட்டுள்ளது. இந்திய அரசு வெறும் 54,130 பேரை கண்டறிந்து உள்ளது. எனவே, அரசாங்க கணக்கீடுகள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. சரியான கணக்கீடுகளாக இல்லை. இதன் காரணமாக, மறுவாழ்வு திட்டச்செயல்பாடும் சிக்கல்களுக்கு உள்ளாகின்றன.
மேலும், ரூ.40,000 மானியம் வழங்குவது மறுவாழ்வு திட்டத்தின் ஒரு பகுதியாகும். அடையாளம் காணப்பட்ட அனைத்து நபர்களுக்கும் இந்த மானியத்தை வழங்கியதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலானவர்கள் அடையாளம் காணப்படவில்லை. அதனால்தான் இந்த உதவி தகுதியான நபர்களில் பெரும்பாலானவர்களைச் சென்றடையவில்லை.
மேலும், நிவாரணங்கள் மட்டும் இல்லாமல் சுயதொழில் அடிப்படையில் மாற்று தொழிலில் ஈடுபட உதவுவதும் மறுவாழ்வு திட்டத்தின் குறிக்கோள் என்று சொல்லப்படுகிறது. அதற்கு ரூபாய் 40,000 போதுமானதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அதாவது இத்தொகையை பரிந்துரை செய்த அதிகாரியின் ஐந்து நாள் ஊதியம் தான் இது. இதில் வருமானம் ஈட்டும் சொத்துக்களை வாங்குவது, புதிய திறன்களைக் கற்றுக் கொள்ள ஏற்படும் செலவுகள் மற்றும் பிற ஏற்பாடுகள் ஆகியவையும் அடங்குமாம்! என்ன கொடுமை இது!
அது மட்டுமின்றி, வங்கிக் கடன் வழங்கி தொழில் முனைவோர் ஆவதற்கு மாற்று வாழ்வாதாரம் வழங்கும் திட்டம் அடிப்படையில் தோல்வி அடைந்தது என்பது வெளிப்படையானது. வங்கிகள் இதற்கான கடன்களை மிகக் குறைவாகவே வழங்கியுள்ளன. மேலும் ஒன்றிய அரசின் ஒதுக்கீடுகள் கூட மிகவும் குறைவாக சீரற்றதாக உள்ளன.
சுயதொழில் முயற்சிகளை அடிப்படையாகக் கொண்ட மறுவாழ்வு என்பது சமுதாயத்தில் இந்தக் குடும்பங்களுக்கு எளிதானதல்ல, பல பாரபட்சமான மனப்பான்மையின் காரணமாக அவ்வளவு எளிதானது அல்ல. எனவே, பல்வேறு விதமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். மேலும் புதிய வழிகளில் சுயதொழில் மூலம் வெற்றி பெற அதிக காலம் ஆகலாம். மேலும் மாற்று தொழில் தொடங்கிய ஆரம்பகாலத்தில் இந்த குடும்பங்கள் உயிர்வாழவும், தொடர்ந்து தொழில் நடத்த முயற்சி செய்யவும், அதிகமான உதவி தேவைப்படுகிறது.
துப்புரவுப் பணிகளில் இந்திய நிலைமைகளுக்கு ஏற்ற பாதுகாப்பான தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களைக் கண்டறியவும் அதிக முதலீடுகள் தேவைப்படுகின்றன. ஆனால் அத்தகைய முதலீடுகள் செய்யப்படுவதில்லை.
தமிழ்நாட்டில்…
சமூக – பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு 2011ன் படி, தமிழ்நாட்டில் 334 தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர் என்றும், 2015 ஆம் ஆண்டு 462 பேர் தான் இருந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், 2015 கணக்கெடுப்புக்குப் பிறகு, தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் சஃபை கரம்சாரி அந்தோலன் (எஸ்கேஏ) ஆய்வு செய்தது. இது 3,032 பேரை அடையாளம் கண்டு அரசாங்கத்திடம் தரவுகளைச் சமர்ப்பித்தது.
இதன் பின்பும் தமிழ்நாடு அரசின் 2017 கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு முழுமையும் திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களில் இருந்து 363 துப்புரவு பணியாளர்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2013 முதல் 2018 வரையிலான ஆண்டுகளில் 144 பணியாளர்கள் இறந்ததாக மாநிலங்களவையில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் குறிப்பிட்டார். நாடு முழுவதும் பதிவான 323 இறப்புகளில் 144 இறப்புகள் (அதாவது 44.5%) தமிழ்நாட்டில் நடந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் தமிழ்நாடு நகராட்சிகள் நிர்வாக துறை, ஆர்டிஐக்கு தந்த பதில் ஒன்றில், தமிழ்நாட்டில் கையால் துப்புரவு செய்யும் பணியின் போது 51 பேர் இறந்ததாகக் குறிப்பிட்டது.
(2016-2020)ஆகிய ஐந்து ஆண்டுகளில் 52 இறப்புகளைப் பதிவு செய்த உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக 43 இறப்புகளைப் பதிவு செய்ததன் மூலம், தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இப்போதும் மரணங்கள் தொடர்கிறது. இந்தப் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டாமா?
சிறந்த மறுவாழ்வுப் பணி மற்றும் பாதுகாப்பான துப்புரவுத் தொழில் நுட்பங்களுக்காக அதிக முதலீடுகள் செய்வதற்கு அரசுகள் முன் வரவேண்டும். இத்திட்டங்களைச் செயல்படுத்தும் போது தொழிலாளர்களையும் ( அவர்களின் நலனுக்காக பாடுபடுபவர்களையும்) உள்ளடக்கி செய்ய வேண்டும். அதற்கு அரசு முன் வருமா?
தொடர்புக்கு: 85248 67888